"ஒரு லட்சம் கோடி முதலீடு செய்த நிறுவனங்களின் பெயர்களை வெளியிட முடியுமா?" மு.வீரபாண்டியன் கேள்வி
சென்னை: "ஒரு லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் விஜய் சொல்கிறார். 1 லட்சம் கோடி முதலீடு செய்த நிறுவனங்களின் பெயர்களைச் சொல்ல முடியுமா? ஆண்டுக்கு அவர்கள் ஒரு லட்சம் கோடி முதலீடு போடுகிறார்களா? ஒரு லட்சம் கோடி முதலீட்டை போட்டால் அவர்கள் கொண்டு செல்கிற லாபம் எவ்வளவு?" என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்ற 100 நாட்களில் 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 1,21,788 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் உறுதியளிக்கப்பட்டு உள்ளன என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

1 லட்சம் கோடி முதலீடு
தமிழக முதல்வர் விஜய் முன்னிலையில் ஆக.13 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற 'வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில்' தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், 67,452 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1,06,998 வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக தமிழ்நாடு அரசின் தொழில் துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், ஒரு லட்சம் கோடி முதலீடு செய்த நிறுவனங்களின் பெயர்களை வெளியிட முடியுமா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மு.வீரபாண்டியன் கேள்வி
மு.வீரபாண்டியன் பேசுகையில், "தமிழக முதல்வர் புதிதாக ஆட்சிக்கு வந்திருக்கிறார். நாம் அவரை ஆதரிக்கிறோம். அவர் கூட ஒரு லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்ததாகச் சொல்கிறார். சரி, அந்த ஒரு லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்தது நல்லது. அந்த நிறுவனங்களின் பெயர்களைச் சொல்ல முடியுமா?
ஆண்டுக்கு அவர்கள் ஒரு லட்சம் கோடி முதலீடு போடுகிறார்களா? ஆறு மாதத்திற்கு ஒரு முறை போடுகிறார்களா? ஒரு லட்சம் கோடி முதலீட்டை போட்டால் அவர்கள் கொண்டு செல்கிற லாபம் எவ்வளவு? நாட்டின் பிரதமரும் இதைப் பற்றி பேச மறுக்கிறார், முதல்வரும் இதைப் பற்றி பேச மறுக்கிறார்.
எவ்வளவு லாபம்?
'ஒரு லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்துவிட்டோம்' என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆண்டுக்கு அவர்கள் கொண்டு செல்கிற லாபம் எவ்வளவு? நான் தமிழக முதல்வரைக் கேட்கிறேன். அதிகாரிகள் சொல்வதைக் கேளுங்கள், ஆனால் அவர்களை நீங்கள் திருப்பிக் கேளுங்கள். 'ஒரு லட்சம் கோடி மூலதனத்தைப் போட்டால் அவர்கள் எவ்வளவு லாபத்தைக் கொண்டு செல்கிறார்கள்?' என்று கேளுங்கள். அதை வெளியில் சொல்ல மாட்டார்கள்.
புரிந்துணர்வு ஒப்பந்தம்... முன்னிருந்த ஆட்சியும் சரி, இப்போது இருக்கிற ஆட்சியும் சரி... முன்னிருந்த பிரதமரும் சரி, இன்றைக்கு இருக்கிற பிரதமரும் சரி... நாடு கடந்த நிறுவனங்கள், பெரிய முதலாளிகளுடன் ஒப்பந்தத்தைப் போடுகிறார்கள், புரிந்துணர்வு ஒப்பந்தம்.
நாடு முன்னேறாது
உங்கள் இரண்டு பேருக்கு தெரிந்தால் போதுமா அந்த ஒப்பந்தம்? நாட்டு மக்களுக்கு தெரிய வேண்டாமா? அவர்கள் போடுகிற மூலதனம் எவ்வளவு? கொண்டு செல்கிற லாபம் எவ்வளவு? 100 ரூபாய் போட்டால், லட்ச ரூபாய் லாபமாகச் செல்கிறது. அதனால் இந்த நாடு முன்னேறிவிடாது.
நாடு கடந்த நிறுவனங்களால், நாடு கடந்த முதலாளிகளால் இந்தியா முன்னேறாது. அதற்கு மாறாகத் தற்சார்பில் தான் நாடு முன்னேறும். நம்முடைய குடிசைத் தொழில், விவசாயத் தொழில், காடு சார்ந்த தொழில், மலை, கடல் சார்ந்த தொழில்.. இதில்தான் ஒரு நாடு முன்னேறும்.
அந்தத் தற்சார்பு குறித்து நாட்டின் பிரதமரும் பேசவில்லை, நம்முடைய சகோதரர் முதல்வர் விஜய்யும் பேசவில்லை. விஜய்யாவது புதியவர் அரசியலுக்கு, பொதுவாழ்வுக்கு. அவராவது சுதந்திர தின உரையிலே முடிக்கிற பொழுது 'சமூக நீதி, சமத்துவம்' என்கிற ஒரு சொல்லைச் சொல்கிறார்.
சமதர்மம் என்கிற சொல், லத்தீன் மொழியில் கம்யூனிசம் என்கிற சொல்... 'இந்த நாடு கம்யூனிச பாதைக்குச் செல்ல வேண்டும், சமத்துவத்தை அடைய வேண்டும்' என்று அவர் சொல்கிறார். அதன் பொருள் அதுதான். ஆனால் நாட்டின் பிரதமர் இதைப் பற்றி பேசுவதில்லை" எனத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
