Senthil Balaji: டாஸ்மாக் வழக்கில் முன்ஜாமீன் மனு தள்ளுபடி! செந்தில் பாலாஜி எங்கே? அசோக் சொன்ன தகவல்
சென்னை: டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் ரத்தானதை அடுத்து தவெக எம்எல்ஏ பேர வழக்கில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கையெழுத்திட வரவில்லை. இதனால் அவர் எங்கே என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கையெழுத்திட தம்பி அசோக் குமார் மட்டுமே வந்திருந்தார். அப்போது அவர் "அண்ணனுக்கு உடல்நிலை சரியில்லை, அதனால் அவர் மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார்" என அசோக் குமார் கூறினாராம்.

தமிழக சட்டசபையில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகருக்கு எதிராக திமுக கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை திமுக கொண்டு வர போவதாகவும் அதற்கு ஆதரவு தர வேண்டும் என்றும் அதற்காக ரூ 35 கோடி வரை பணம் தர தயாராக இருப்பதாகவும் ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவை சிலர் அணுகினராம்.
அவ்வாறு அணுகியவர்கள் செந்தில் பாலாஜி, அசோக்குமாருக்கு நெருக்கமானவர்கள் என்பதால் அவர்களிடம் விசாரிக்க போலீஸ் முடிவு செய்தது. ஆனால் இருவரும் தலைமறைவானதாக சொல்லப்பட்டது.
இதையடுத்து செந்தில் பாலாஜியும் அவரது தம்பி அசோக்குமாரும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு போலீஸார் கரூரில் உள்ள வீட்டில் அவர்களது பெற்றோரிடம் சம்மன் கொடுத்துவிட்டுச் சென்றனர். ஆனால் இருவரும் ஆஜராகவில்லை.
இதையடுத்து செந்தில் பாலாஜியும், அசோக்குமாரும் தவெக எம்எல்ஏ பேர வழக்கில் முன்ஜாமீன் கோரிய நிலையில் அவர்கள் இருவரும் தினமும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
அந்த உத்தரவின் பேரில் தினந்தோறும் செந்தில் பாலாஜியும் அசோக்குமாரும் கையெழுத்திட்டு வந்தனர். இந்த நிலையில் செந்தில் பாலாஜிக்கு எதிராக டாஸ்மாக் முறைகேடு விவகாரமும் அவரது காலை சுற்றியது.
அதாவது தமிழக அரசின் கீவ் இயங்கும் டாஸ்மாக் நிறுவனம் மூலம் 5380 மதுக்கடைகளும் 3240 மதுக்கூடங்களும் இயங்குகின்றன. 2021 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் டாஸ்மாக் மது கடைகளின் விற்பனை உயர்ந்தாலும், வருவாய் குறைந்தது. இதில் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன.
இந்த நிலையில் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் 45 இடங்களில் ஊழல் தடுப்புத் துறையினர் நேற்று ஒரே நேரத்தில் ரெய்டு நடத்தினர். அதில் செந்தில் பாலாஜியிந் வீடு, அவருடைய நண்பர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் டாஸ்மாக் முறைகேடு வழக்கில் காவல் துறை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி வழக்கு தொடர்நதார். அதை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், செந்தில் பாலாஜி அதிகார துஷ்பிரயோகம் செய்ததற்கான முகாந்திரம் இருப்பதாக கூறி முன்ஜாமீன் மனுவை ரத்து செய்தார்.
இந்த நிலையில் இன்று வழக்கம் போல் தவெக எம்எல்ஏ பேர வழக்கில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு கையெழுத்து போட செந்தில் பாலாஜி வரவில்லை. அவரது தம்பி அசோக்குமார் மட்டும் வந்திருந்தார். அவரிடம் கேட்டபோது, "அண்ணன் செந்தில் பாலாஜிக்கு உடல்நிலை சரியில்லை. அவர் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்" என்றாராம். இன்றைய தினம் செந்தில் பாலாஜி கையெழுத்த போலீஸ் நிலையத்தில் வராததால் அவர் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications
