திருப்பதியில் தரிசனம் ஓகே.. வேளாண் பட்ஜெட்டில் பயிர்க்கடன் தள்ளுபடி எங்கே? தவெக அரசை விளாசிய உதயநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசின் முதல் "வேளாண் நிதிநிலை அறிக்கை" இன்று தாக்கல் செய்யப்பட்டது. வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்பாக, அதன் வரைவு நகலுடன் திருப்பதியில் சாமி தரிசனம் மேற்கொண்டது ஏற்கனவே அரசியல் களத்தில் விவாதங்களை ஏற்படுத்தியிருந்த நிலையில், இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் உரை விவசாயிகள் மத்தியிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

தேர்தல் களத்தின் போது தவெக சார்பில் விவசாயிகளுக்குப் பல்வேறு முக்கிய வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன. குறிப்பாக, 5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்குக் கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்கள் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும் என்றும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு 50 சதவீத கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

Cooperative Crop Loan Waiver Agriculture Budget 2026 Tamil Nadu Farmers TVK Government 2026

இன்று வேளாண் பட்ஜெட்

அதுமட்டுமல்ல, சொந்தமாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் குடும்பத்திற்கு ஆண்டுதோறும் இரு தவணைகளாக ரூ.15,000 விதைப்புக்கால நிதியுதவி வழங்கப்படும் என்றும், 2 ஏக்கர் வரை நிலமுள்ள விவசாய குடும்பத்துக் குழந்தைகளின் உயர்கல்விச் செலவை அரசே ஏற்கும் என்றும் வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்தன.

ஆனால் ஆட்சிக்கு வந்தபிறகு, ரூ.75,000 வரை கடன் பெற்ற குறு, சிறு விவசாயிகளுக்கு மட்டுமே முழுத் தள்ளுபடியும், அதற்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.35,000 மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என வரம்பு விதிக்கப்பட்டது விவசாயிகள் மத்தியில் ஏற்கனவே ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.

கூட்டுறவு பயிர்க்கடன்

இந்நிலையில், பிப்ரவரி 28 வரை பெறப்பட்ட அனைத்துக் கூட்டுறவு பயிர்க்கடன்களும் இந்த பட்ஜெட்டில் பாகுபாடின்றி முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்றும், ரூ.15,000 நிதியுதவி திட்டம் அமலுக்கு வரும் என்றும் உழவர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருந்தனர்.

ஆனால், இன்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட்டில் கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பான எந்தவொரு புதிய அறிவிப்பும் இடம் பெறவில்லை. இது தமிழக விவசாயிகளுக்குப் பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

உதயநிதி கண்டனம்

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த திமுக தலைவர் உதயநிதி, தவெக அரசின் இந்த பட்ஜெட்டை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

"கடந்த மூன்று மாதங்களாக விவசாயிகள் பல்வேறு கடுமையான பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றனர். ஒரு பக்கம் மேகதாது பிரச்சனை தீவிரமடைந்து வருகிறது; மற்றொரு பக்கம் போதிய நீரின்றிக் குறுவை சாகுபடியைச் செய்ய முடியாத அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இத்தகைய சூழலில், விவசாயிகளின் உரிமைகளுக்காகவும் வாழ்வாதாரத்திற்காகவும் குரல் கொடுக்கும் வகையிலேயே திமுக உறுப்பினர்கள் இன்று கருப்புச் சட்டை அணிந்து சட்டமன்றத்திற்கு வந்து எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளோம்.

விவசாயிகள் ஏமாற்றம்

தேர்தல் காலத்தில் பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்வோம் என்று விஜய் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தார். ஆனால் ஆட்சிக்கு வந்தபின் அதனை முழுமையாகச் செய்யாமல் ஏமாற்றிவிட்டனர். இன்றைய பட்ஜெட்டிலாவது உருப்படியான அறிவிப்புகள் வரும் என்று பார்த்தால், பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து எந்தப் பதிலும் இல்லை, எந்த அறிவிப்பும் இல்லை. உழவர்களின் எதிர்பார்ப்பைப் பொய்ப்பித்து ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது" என்று தனது கண்டனத்தைப் பதிவு செய்தார்.

வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போதிலும், விவசாயிகளின் நீண்டகால கோரிக்கைகளுக்கும் தேர்தல் வாக்குறுதிகளுக்கும் உரிய தீர்வு கிடைக்காததால், சட்டமன்ற வளாகத்திலும் தமிழக அரசியல் களத்திலும் தொடர்ந்து காரசாரமான விவாதங்கள் நிலவி வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+