சீட் இல்லை.. ‘இதயத்தில் இடம்’ கொடுத்த ஸ்டாலின்.. திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள கட்சிகள் லிஸ்ட்!
சென்னை: திமுக கூட்டணியில் திமுகவோடு சேர்த்து மொத்தம் 8 கட்சிகள் தேர்தலில் போட்டியிடுகின்றன. மேலும் சில கட்சிகள் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. சீட் இன்றி திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட உள்ள கட்சிகளின் பட்டியலை பார்க்கலாம்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சியினர் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் திமுக கூட்டணி, முதல் அணியாக கூட்டணி பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்து, தொகுதி பங்கீட்டையும் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

திமுக கூட்டணி தேர்தலுக்கு ரெடி: திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன. விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, கொமதேக, இந்திய யூனியன் முஸ்லீம் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களையும் அறிவித்து விட்டன.
திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் இன்னும் ஓரிரு நாட்களுக்குள் அறிவிக்கப்பட உள்ளனர். தேர்தல் களத்தில் இருக்கும் பாஜக, அதிமுக கூட்டணிகளை விட முழு வேகத்தில் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகிறது திமுக கூட்டணி.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் மற்றும் அவற்றிற்கு ஒதுக்கப்பட்டுள்ள சீட் விவரங்கள், அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் விவரம் பின்வருமாறு:
திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்:
விசிக போட்டியிடும் தொகுதிகள்
சிதம்பரம் (தனி) - திருமாவளவன்
விழுப்புரம் (தனி) - ரவிக்குமார்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகள்
நாகப்பட்டினம்
திருப்பூர்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகள்
மதுரை - சு.வெங்கடேசன்
திண்டுக்கல் - சச்சிதானந்தம்
மதிமுக போட்டியிடும் தொகுதி:
திருச்சி - துரை வைகோ
இந்திய யூனியன் முஸ்லீம் லீக்
ராமநாதபுரம் - நவாஸ் கனி
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி
நாமக்கல் - சூரியமூர்த்தி (உதயசூரியன் சின்னம்)
திமுக போட்டியிடும் 21 தொகுதிகள்:
தென் சென்னை
மத்திய சென்னை
வட சென்னை
ஸ்ரீபெரும்புதூர்
காஞ்சிபுரம்
வேலூர்
அரக்கோணம்
திருவண்ணாமலை
ஆரணி
கள்ளக்குறிச்சி
தருமபுரி
கோவை
பொள்ளாச்சி
சேலம்
ஈரோடு
நீலகிரி
தஞ்சாவூர்
பெரம்பலூர்
தேனி
தென்காசி
தூத்துக்குடி
காங்கிரஸ் போட்டியிடும் இடங்கள்:
திருவள்ளூர் (தனி)
கடலூர்
மயிலாடுதுறை
சிவகங்கை
திருநெல்வேலி
கிருஷ்ணகிரி
கரூர்
விருதுநகர்
கன்னியாகுமரி
புதுச்சேரி
திமுக கூட்டணியில் லோக்சபா தேர்தலில் சீட் ஒதுக்கப்படாமல் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிக்கும் கட்சிகள்:
மக்கள் நீதி மய்யம் (1 ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது)
மனிதநேய மக்கள் கட்சி
ஆதித்தமிழர் பேரவை
தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி
சமத்துவ மக்கள் கழகம்
மனிதநேய ஜனநாயகக் கட்சி
மக்கள் விடுதலை கட்சி
தமிழ் புலிகள் கட்சி
ஸ்டாலின் நெகிழ்ச்சி: கூட்டணியில் சீட் ஒதுக்கப்படாத சூழலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கட்சிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின். இக்கட்சிகளின் தலைவர்கள் ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு திமுக தரப்பில் இருந்து நன்றி தெரிவித்து, சீட் கொடுக்க இயலாமை குறித்து விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின், "பாசிசத்தை வீழ்த்திட வேண்டும் என்கிற ஒற்றை இலக்குடனான இந்தப் பயணத்தில், ஒரு சில ஜனநாயக இயக்கங்களுக்குத் தொகுதி ஒதுக்க இயலாத சூழல் ஏற்பட்டிருப்பது உண்மையில் எனக்கும் வருத்தத்தைத் தருகிறது. தொகுதிகளின் மொத்த எண்ணிக்கையையும் கூட்டணியின் வலிமையையும் கருத்தில் கொண்டு, இதுகுறித்து அனைத்துத் தோழமை இயக்கங்களிடமும் என் சார்பிலும் கழகத்தின் சார்பிலும் விளக்கப்பட்டுள்ளது.
நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தல் களத்தில் யாரை வீழ்த்த வேண்டும், அதற்கு எந்த வகையில் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதை வாய்ப்பு பெறாத தோழமைக் கட்சியினரும் உணர்ந்து உளப்பூர்வமாக ஆதரவை நல்கிட வேண்டும். இந்த அடிப்படையில் தேர்தல் பணியாற்ற தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை முடிவு எடுத்திருப்பது ஆக்கபூர்வமான ஜனநாயக பண்பை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.
சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற மனிதநேய மக்கள் கட்சிக்கும், தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் இடம் ஒதுக்க இயலாமல் போன நிலையிலும், மதவெறி பாசிசத்தை வீழ்த்திடத் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்குப் பக்கபலமாக இருப்போம் என அக்கட்சிகளின் நிர்வாகிகள் முடிவெடுத்து ஆதரவைத் தெரிவித்திருப்பதை வரவேற்கிறேன். மனதார நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
அதுபோலவே, இந்தியா கூட்டணி வெற்றி பெறக் களப்பணியாற்ற முன்வந்துள்ள மனிதநேய மக்கள் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி, சமத்துவ மக்கள் கழகம், மனிதநேய ஜனநாயகக் கட்சி, மக்கள் விடுதலை கட்சி, தமிழ் புலிகள் கட்சி மற்றும் அனைத்து ஜனநாயக இயக்கங்களுக்கும், நேரில் வந்து ஆதரவு தெரிவித்து வரும் அமைப்பினருக்கும் நன்றியினை உரித்தாக்குகிறேன்" எனத் தெரிவித்துள்ளார் முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications