தமிழ்நாட்டில் பாஜக போட்டியிடும் 19 தொகுதிகள் எவை.. "திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரை.." லிஸ்ட் இதோ
சென்னை: பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகள் எங்கே போட்டியிடுகின்றன என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அதில் பாஜக மட்டும் இந்த முறை 19 தொகுதிகளில் போட்டியிடுவது உறுதியாகி இருக்கிறது
நமது நாட்டில் விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் எப்போதும் இரண்டாம் கட்டத்தில் தான் லோக்சபா தேர்தல் நடைபெறும். ஆனால், இந்த முறை முதல்கட்டத்திலேயே வரும் ஏப்ரல் 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது.

மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில், அவை முடிந்தவுடன் ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த முறை தமிழகத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் எனப் பலமுனை போட்டி ஏற்பட்டுள்ளது.
பாஜகவை பொறுத்தவரை இத்தை காலம் அதிமுக கூட்டணியில் இருந்த அவர்கள், இந்த முறை தனியாகக் கூட்டணியை அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் பாமக, தமாக, டிடிவி தினகரன், ஓபிஎஸ் எனப் பலர் இருக்கிறார்கள்.
19 தொகுதிகள்: இதற்கிடையே இதில் பாஜக கூட்டணியில் எந்த கட்சி எத்தனை இடங்களில் போட்டியிடும் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் பாஜக நேரடியாக 19 தொகுதிகளில் களமிறங்குகிறது. ஏற்கனவே புதுச்சேரியில் பாஜக போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது தமிழகத்திலும் 39 தொகுதிகளில் 19 தொகுதிகளில் பாஜக களமிறங்குகிறது.
எந்த தொகுதிகள்: எதிர்வரும் லோக்சபா தேர்தலில் திருவள்ளூர், வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோவை, பொள்ளாச்சி, கரூர், சிதம்பரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 19 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது.
இன்று மதியம் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் பாஜக போட்டியிடும் தொகுதிகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அண்ணாமலை மொத்தம் 20 தொகுதிகளில் பாஜக போட்டியிடும் என அறிவித்தார். இதற்கிடையே இப்போது வெளியாகியுள்ள லிஸ்டில் 19 தொகுதிகள் உள்ளது. அண்ணாமலை சொன்ன அந்த கூடுதலான ஒரு தொகுதி தான் ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
வேட்பாளர்கள்: முன்னதாக பாஜக தமிழகத்தில் உள்ள 9 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து இருந்தது. ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் அரசியலுக்குத் திரும்பியுள்ள தமிழிசை தென் சென்னை லோக்சபா தொகுதியில் போட்டியிடுகிறார். நிலையில், மத்திய சென்னை தொகுதியில் வினோஜ் பி செல்வம், கிருஷ்ணகிரி தொகுதியில் நரசிம்மன் போட்டியிடுகிறார்கள். நீலகிரி தொகுதியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் களமிறங்குகிறார்.
கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடும் நிலையில், திருநெல்வேலி தொகுதியில் நயினார் நாகேந்திரனும், கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில் பொன் ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்கள். மேலும், வேலூர் தொகுதியில் ஏ.சி.சண்முகம் (புதிய நீதிக்கட்சி), பெரம்பலூர் - பாரிவேந்தர் (இ.ஜ.க) போட்டியிடுகிறார்கள். அவர்கள் இருவரும் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளனர்.
பாஜக மொத்தம் 19 தொகுதிகளில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற தொகுதிகளான வேட்பாளர் விவரங்கள் ஓரிரு நாட்களில் வெளியாகும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications