உலகிலேயே அதிக தங்கம் வைத்துள்ள நாடு எது தெரியுமா? இந்தியாவுக்கு 9வது இடம்.. டாப் 15 லிஸ்ட் இதோ!
சென்னை: உலகிலேயே அதிக அளவில் தங்கத்தை கையிருப்பு வைத்திருக்கும் நாடுகளின் பட்டியல் குறித்த விபரம் வெளியாகி உள்ளது. இந்த பட்டியலில் இந்தியா 9வது இடத்தில் உள்ள நிலையில் டாப் 15 நாடுகளையும், அந்த நாடுகளில் இருக்கும் தங்கத்தின் அளவு குறித்த விபரம் வருமாறு:
தங்கம்.. பெண்களும், ஆண்களும் விரும்பும் மஞ்சள் நிற மெட்டல். மதிப்பு மிக்க உலோகங்களில் ஒன்றாக இருக்கும் தங்கத்தில் பல்வேறு வடிவங்களில் நகைகள் செய்து அணிந்து கொள்ள ஒவ்வொருவரும் விரும்புகிறோம். இதனால் தான் ஒவ்வொரு ஆண்டும் தங்கத்தின் விலை என்பது தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது.

விலை உயர்ந்தாலும் கூட தங்கத்தின் மீதான மோகம் மட்டும் குறையவில்லை. சொல்லப்போனால் தங்க நகையை அணியும் ஆர்வம் மக்களுக்கு இருந்தாலும் கூட தங்கத்தின் மீதான முதலீடு என்பது பாதுகாப்பானது என மக்கள் நம்புவதே இதற்கு முக்கிய காரணமாகும்.
தமிழகத்தை பொறுத்தவரை இன்று தங்கத்தின் விலை என்பது நேற்றைய தினத்தை விட அதிகரித்துள்ளது. ஒரு கிராம் தங்கம் நேற்று ரூ.6,564க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ.6,587 க்கு விற்பனையாகிறது. ஒரு பவுன் (8 கிராம்) தங்கம் நேற்று ரூ.52,513 என இருந்த நிலையில் இன்று ரூ.52,702 ஆக அதிகரித்துள்ளது.
ஒரு நாட்டில் இருக்கும் தங்கத்தின் கையிருப்பு என்பது அந்த நாட்டின் பொருளாதார சிறப்பின் அடையாளம் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். இதனால் தங்கம் கையிருப்பு வைத்திருப்பதை ஒவ்வொரு நாடுகளும் முக்கியமான ஒன்றாக பார்க்கின்றன. இந்நிலையில் தான் உலகத்தில் எந்த நாட்டில் தங்கம் கையிருப்பு அதிகமாக உள்ளது என்பது பற்றிய விபரம் வெளியாகி உள்ளது. உலக தங்க கவுன்சிலின் (World Gold Council)மதிப்பீட்டின்படி 2023 ம் ஆண்டின் 3வது காலாண்டில் ஒவ்வொரு நாடும் கையிருப்பு வைத்திருக்கும் தங்கத்தை பொறுத்து நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் டாப் 15 நாடுகள் எவை? அந்த நாடுகளில் எவ்வளவு தங்கம் கையிருப்பு உள்ளது? என்பது பற்றி இங்கு பார்ப்போம். அதன்படி உலகிலேயே அதிகமாக தங்கம் வைத்துள்ள நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது. இங்கு 8,133 மெட்ரிக் டன் தங்கத்தை அமெரிக்கா வைத்துள்ளது. 2வது இடத்தில் ஜெர்மனி இருக்கிறது. ஜெர்மனியிடம் 3,355 மெட்ரிக் டன் இருக்கிறது. 3வது இடத்தில் இத்தாலி உள்ளது. அந்த நாடு 2,452 மெட்ரிக் டன் தங்கத்தை கொண்டுள்ளது.
இந்த பட்டியலில் 4வது இடத்தில் பிரான்ஸ் இருக்கிறது. பிரான்ஸிடம் 2,437 மெட்ரிக் டன் தங்கம் இருக்கிறது. 5வது இடத்தில் ரஷ்யா உள்ளது. ரஷ்யாவிடம் 2,326 மெட்ரிக் டன் உள்ளது. 6வது இடத்தில் சீனா இருக்கிறது. சீனாவிடம் 2,068 மெட்ரிக் டன் இருக்கிறது. 7 வது இடத்தில் சுவிட்சர்லாந்தும், 8 வது இடத்தில் ஜப்பானும் உள்ளது. அதன்படி சுவிட்சர்லாந்திடம் 1,040 மெட்ரிக் டன் தங்கமும், ஜப்பானிடம் 846 மெட்ரிக் டன் தங்கமும் கையிருப்பில் இருக்கிறது.
இந்த பட்டியலில் 9 வது இடத்தில் இந்தியா இருக்கிறது. இந்தியாவிடம் 795 மெட்ரிக் டன் தங்கம் இருக்கிறது. 10வது இடத்தில் உள்ள நெதர்லாந்திடம் 612 மெட்ரிக் டன் தங்கமும், 11 வது இடத்தில் உள்ள துருக்கியிடம் 489 மெட்ரிக் டன் தங்கமும், 12வது இடத்தில் இருக்கும் தைவானியிடம் 425 மெட்ரிக் டன் தங்கமும், 13வது இடத்தில் உள்ள உஸ்பெகிஸ்தான் நாட்டிடம் 390 மெட்ரிக் டன் தங்கமும் உள்ளது.
இந்த பட்டியலில் 14வது இடத்தில் போர்ச்சுக்கல் உள்ளது. அந்த நாட்டிடம் 383 மெட்ரிக் டன் தங்கமும், 15வது இடத்தில் கஜகஸ்தான் நாடு இருக்கிறது. கஜகஸ்தானிடம் 381 மெட்ரிக் டன் தங்கமும் உள்ளது. இந்த பட்டியலில் எண்ணெய் வளமிக்க சவூதி அரேபியா மற்றும் பல நாடுகளை ஆட்சி செய்த யூனைடெட் கிங்டம் ஆகியவை பின்தங்கி உள்ளன. சவூதி அரேபியா இந்த பட்டியலில் 323 மெட்ரிக் டன் தங்கத்துடன் 16வது இடத்தில் உள்ள நிலையில் யூனைடெட் கிங்டம் 310 மெட்ரிக் டன் தங்கத்துடன் 17 வது இடத்தில் உள்ளது.
மேலும் சிங்கப்பூர் 154 மெட்ரிக் டன் தங்கத்துடன் பட்டியலில் 27 வது இடத்தில் உள்ளது. 79.9 மெட்ரிக் டன்னுடன் ஆஸ்திரேலியா 39 வது இடத்திலும், 64.7 மெட்ரிக் டன் தங்கத்துடன் பாகிஸ்தான் 44வது இடத்திலும் உள்ளது. 54.1 டெம்ரிக் டன் தங்கத்துடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இந்த பட்டியலில் 46வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications