விஜய் ஆரம்பித்த அரசியல் கட்சியால் எந்த கட்சிக்கு பாதிப்பு.. அதிரடி ரிசல்ட் முடிவு
சென்னை: நடிகர் விஜய் ஆரம்பித்த அரசியல் கட்சியால் எந்த கட்சிக்கு அதிக பாதிப்பு என்பது குறித்து ஒன் இந்தியா தமிழ் சர்வே எடுத்தது. இதில் பலர் திமுகவுக்குத்தான் பாதிப்பு என்று கருத்து தெரிவித்துள்ளனர். இந்த சர்வே முடிவினை இப்போது பார்ப்போம்.
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் இயக்கம் ஆரம்பித்துவிட்டார். தனது கட்சி 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிடும் என்று விஜய் அதிடியாக அறிவித்தார். விஜய் கடந்த ஆண்டு, 10ம் வகுப்பு, 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளை நேரில் அழைத்து பரிசு வழங்கி கௌரவித்தார். இந்த ஆண்டும் மாணவ மாணவிகளை அழைத்த பரிசு வழங்கி கௌரவித்துள்ளார்.

விஜய் அரசியல் என்பது, இதுவரை யாருக்கு எதிரானது என்பதை அறிவிக்கவில்லை. விஜய் தனது தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள் மற்றும் சித்தாந்தம் என்ன என்பது குறித்து இதுவரை அறிவிக்கவில்லை.. விஜய் அரசியல் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. ஏனெனில் விஜய்க்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பித்த பல நடிகர்கள் அரசியலில் அவர்கள் அடைய நினைத்த இலக்கான முதல்வர் பதவியை அடைந்தது எம்ஜிஆர் மட்டுமே.
அதன்பிறகு எந்த நடிகரும் அரசியலில் அந்த தூரத்தை அடைய முடியவில்லை.. நடிகர் விஜய்காந்த் மட்டுமே எதிர்க்கட்சி தலைவர் என்கிற அளவிற்கு உயர்ந்தார். மற்றபடி அரசியல் கட்சி ஆரம்பித்த சரத்குமார், கமல்ஹாசன் உள்பட யாருமே பெரிய வெற்றி இதுவரை பெறவில்லை.
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் முன்னரே, தமிழக அரசியல் குறித்து பல்வேறு அதிரடியான விஷயங்களை பேசியிருக்கிறார். நீட் தேர்வு பிரச்சனையால் இறந்த அனிதா வீட்டிற்கு போய் வந்தது, மெரினாவில் மக்கள் புரட்சியின் போது போய் பங்கேற்றது, தூத்துக்குடிக்கு சென்று ஆறுதல் தெரிவித்தது உள்பட பல்வேறு விஷயங்களை செய்தார்.
அதேபோல் பல்வேறு அரசியல் விஷயங்களை கவனமாகவே பேசியும், செயல்பட்டும் வந்தார். நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக அரசியலுக்கு வரப்போவதை அறிவித்துவிட்டு முழுவீச்சில் அதற்கான பணிகளில் இறங்கி உள்ளார். அண்மையில் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் கண்டனம் தெரிவித்த விஜய், நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
இந்நிலையில் விஜய் இன்று மேடையில் பேசும் போது அரசியல் குறித்து தெரிவித்த கருத்து பலருக்கும் திகைப்பை தந்துள்ளது.. அவர் பேசும் போது, "நமது தமிழ்நாட்டில் உலகத்தரத்திலான மருத்துவர்கள், பொறியியலாளர்கள் அதிகமாகவே இருக்காங்க... நமக்கு எது அதிகமாக தேவைப்படுகிறது என்றால், அது நல்ல தலைவர்கள். அரசியல் ரீதியாக மட்டும் இதை சொல்லவில்லை...
ஒரு துறையில் சிறந்து விளங்கினால், அதன் தலைமையிடத்துக்கு நீங்கள் போக முடியும். அதனை தான் இன்னும் நல்ல தலைவர்கள் தேவை என்று கூறினேன். அதுமட்டுமில்லை, எதிர்காலத்தில் அரசியலும் ஒரு தொழில் விருப்பமாக வர வேண்டும் என்பது என்னுடைய எண்ணம். நன்றாக படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்.
செய்தி என்பது வேறு, கருத்து என்பது வேறு. எது உண்மை, எது பொய் என்பதை ஆராய கற்றுக் கொள்ள வேண்டும். அப்போது தான் உண்மையிலேயே நமது நாட்டில் என்ன பிரச்சினை, மக்களுக்கு என்ன பிரச்சினை, சமூக தீமைகள் பற்றி நமக்கு தெரியவரும். அதை தெரிந்துகொண்டால் ஒரு சில அரசியல் கட்சிகள் செய்கின்ற பொய் பிரச்சாரங்களை நம்பாமல், நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க கூடிய நல்ல விசாலமான உலக பார்வை உங்களால் வளர்த்துக் கொள்ள முடியும். அது வந்து விட்டாலே, அதைவிட ஒரு சிறந்த அரசியல் வேறு எதுவுமே இருக்க முடியாது." என்று விஜய் கூறினார்.
விஜய் தனது இன்றைய பேச்சில் நேரடியாக எந்த கட்சியையும் விமர்சிக்கவில்லை.. அதேநேரம் அவரது அரசியல் எந்த கட்சிக்கு அதிக பாதிப்பு இருக்கும் என்ற கேள்வி பலருக்கும் உள்ளது. பலரும் பல விதமாக கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். நமது ஒன் இந்தியா தமிழில் விஜய் அரசியல் கட்சியால், எந்த கட்சி வாக்கு வங்கிக்கு பாதிப்பு என நினைக்கிறீர்களா? என்று ஒன்இந்தியாதமிழ் வெப்சைட்டில், கேள்வி ஒன்று, போல் வடிவத்தில், கேட்கப்பட்டிருந்தது. அதற்கு திமுக, அதிமுக, நாம் தமிழர், எந்த கட்சியும் இல்லை என நான்கு ஆப்சன்கள் வழங்கப்பட்டிருந்தன.
இதில் விஜய் அரசியல் கட்சியால், திமுகவுக்கு பாதிப்பு இருக்கும் என்று அதிகபட்சமாக, 37 சதவீதம் (13198) பேர் கூறியுள்ளனர். யாருக்கும் பாதிப்பு இல்லை என்று 34 சதவீதம் (12179) பேர் கூறியுள்ளனர். அதிமுகவுக்கு பாதிப்பு என 17 சதவீதம் (6076) பேர் வாக்களித்துள்ளனர். நாம் தமிழர் கட்சிக்கு பாதிப்பு என 11 சதவீதம் (3992) பேர் வாக்களித்துள்ளனர்.
திமுக அரசு தொடர்பான விஷயங்களில் தான் விஜய் அண்மைக் காலமாக விமர்சன கருத்து கூறுவதால் திமுகவுக்குதான் விஜயால் பாதிப்பு என 37 சதவீதம் (13198) பேர் ஓட்டுப் போட்டுள்ளனர் என புரிந்துகொள்ள முடிகிறது, விஜய் அரசியலில் எதுவும் சாதிக்க முடியாது என நினைத்து, அவரால் எந்த கடசிக்கும் பாதிப்பும் இல்லை என 34 சதவீதம் பேர் அதாவது 12 ஆயிரத்து 179 பேர் ஓட்டுப் போட்டுள்ளனர் என்று புரிந்துகொள்ள முடிகிறது.
அதேநேரம் எம்ஜிஆர் போல தமிழ்நாட்டில் விஜய் மாஸ் நடிகர் என்பதால், நடிகர்களையே ஆதாரமாக கொண்ட, அதிமுக ஓட்டு வங்கியில்தான் விஜய் ஓட்டை போடுவார் என்று நினைத்து 17 சதவீதம் ஓட்டு பதிவு செய்துள்ளார்கள்.
இளம் தலைமுறை ஓட்டுக்களை ஈர்க்கக் கூடியவர் என்பதால் நாம் தமிழர் வாக்குகள் சிதறும் என்று 11 சதவீதம் (3992) பேர் ஓட்டுப் போட்டுள்ளனர் என்று புரிந்துகொள்ள முடிகிறது. அதேநேரம், விஜய் அரசியல் யாரக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது 2026ல் தெரிந்துவிடும். 2026 சட்டசபை தேர்தலில் விஜய்யின் வெற்றிக்கழகம் தனித்து போட்டியிடும் என்றே எதிர்பார்க்கப்படுவதால், கள நிலவரத்தை அறிய இன்னும் இரண்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications