விசிக துணை பொதுச்செயலாளர் ஆனார் லாட்டரி மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜுனா! முழு பின்னணி
சென்னை: விசிகவின் துணைப் பொதுச்செயலாளராக ஆதவ் அர்ஜுனாவை நியமித்து விசிக தலைவர் திருமாவளவன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். யார் இந்த ஆதவ் அர்ஜுனா?
அண்மையில் திருச்சியில் விசிகவின் 'வெல்லும் சனநாயகம்' மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில், விசிகவின் ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கைக்கான இணையதளம் வெளியிடப்பட்டது. இந்த இணையதளத்தை வடிவமைத்துக் கொடுத்தது ஆதவ் அர்ஜுனா தலைமையிலான Voice of Common குழுவினர். மேலும், Voice of Common நிறுவனர் ஆதவ் அர்ஜுனும், இந்த ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை தளம் மூலமா தன்னையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைத்துக்கொண்டார். இந்த மாநாட்டின் மேடையிலேயே ஆதவ் அர்ஜுனை மேடையேற்றி அவருக்கு பாராட்டுகளைத் தெரிவித்தார் விசிக தலைவர் திருமாவளவன்.

விசிகவின் பல்வேறு நிகழ்வுகளை ஒருங்கிணைத்தது Voice of Common நிறுவனர் ஆதவ் அர்ஜுன் தான் என்றும், இந்த வெல்லும் சனநாயகம் மாநாட்டை ஒருங்கிணைத்ததும் ஆதவ் அர்ஜுன் தான் எனப் பெருமைப்படுத்திப் பேசி அவருக்கு உறுப்பினர் அட்டையையும் வழங்கினார் திருமாவளவன். இந்நிலையில், இன்று அம்பேத்கர் திடலில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழுவில் ஆதவ் அர்ஜுன் அவர்களுக்கு துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது என அறிவித்துள்ளார் திருமாவளவன்.
யார் இந்த ஆதவ் அர்ஜுனா?: திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதவ் அர்ஜுனா, சிறு வயதில் இருந்தே விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். கூடைப்பந்து விளையாட்டில் சிறப்பாக விளையாடிய ஆதவ் அர்ஜுன், மாவட்ட, மாநில அளவில் ஏராளமான போட்டிகளில் பங்கேற்று சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். இந்திய கூடைப்பந்து அணிக்காக விளையாடியுள்ளார்.

முன்னாள் கூடைப்பந்து வீரரான ஆதவ் அர்ஜுன், தற்போது தமிழ்நாடு கூடைப்பந்து சங்கத்தின் தலைவர், தமிழக ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச்செயலாளர் என கூடைப்பந்து விளையாட்டுத் துறை சார்ந்த பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்து வருகிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற இந்திய கூடைப்பந்து சம்மேளன தேர்தலில் வெற்றி பெற்று இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் தலைவராகவும் உள்ளார் ஆதவ் அர்ஜூன்.
லாட்டரி மார்ட்டின் மருமகன்: லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன் இந்த ஆதவ் அர்ஜுனா. மார்ட்டினின் மகள் டெய்சியின் கணவர் ஆதவ் அர்ஜுன். லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றபோது, ஆதவ் அர்ஜுனாவின் சென்னை போயஸ் கார்டன் பகுதியில் உள்ள ஆதவ் அர்ஜுனாவின் வீடு, அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

வாய்ஸ் ஆஃப் காமன் (Voice of Common) என்ற நிறுவனத்தை நடத்தி வரும் ஆதவ் அர்ஜூனா, கடந்த ஓராண்டுக்கும் மேலாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பல்வேறு நிகழ்வுகள், கூட்டங்களை ஒருங்கிணைத்து வருகிறார். விசிக விருது வழங்கும் விழா, விசிக பூத் ஏஜெண்டுகள் கூட்டம் ஆகியவற்றை இவரது நிறுவனம் தான் ஏற்பாடு செய்து நடத்தியது. விசிக கூட்ட ஏற்பாடுகள் கட்சித் தொண்டர்களையே வியக்க வைக்கும் அளவுக்கு இருந்தன.
அண்மையில் திருச்சியில் லட்சக்கணக்கானோர் திரண்ட விசிக மாநாட்டையும் ஆதவ் அர்ஜுன் தான் ஒருங்கிணைத்தார். இந்த மாநாடு, இதன் சிறப்பான ஏற்பாடுகளால் தனிக் கவனம் பெற்றது. இந்நிலையில் தான் அவரை, விசிகவின் துணை பொதுச் செயலாளராக நியமித்துள்ளார் திருமாவளவன்.












Click it and Unblock the Notifications