டெய்சி மார்ட்டின் யார்? "கிங்" மகளுக்கு ரூ.162 கோடி சொத்து.. பிரிவுக்கு பின் குழந்தையின் எதிர்காலம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும் அவரது மனைவி டெய்சி மார்ட்டினும் 14 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு பிறகு பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளனர். ஆனால், இந்த முடிவுக்கு மத்தியிலும் தங்களது குழந்தையின் எதிர்காலத்தில் 2 பேருமே சேர்ந்து, கவனம் செலுத்தப் போவதாக டெய்சி அறிவித்துள்ளார். யார் இந்த டெய்சி மார்ட்டின்? அவரது குடும்பப் பின்னணி, தொழில், சொத்து மதிப்பு என்ன?

லாட்டரி தொழிலதிபர் சாண்டியாகோ மார்ட்டின் மகள்தான் டெய்சி மார்ட்டின். இவரும் ஆதவ் அர்ஜுனாவும் காதலித்து கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள்.. 14 ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்த இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இப்போது இருவரும் தம்பதிகளாக பிரிந்து தனித்தனி பாதையில் செல்ல முடிவு செய்துள்ளதாக டெய்சி தனது சோஷியல் மீடியா பதிவில் தெரிவித்துள்ளார்.

Who Is Daisy Martin

யார் இந்த சாண்டியாகோ மார்ட்டின்?

டெய்சியின் அப்பா சாண்டியாகோ மார்ட்டின், இந்தியாவில் லாட்டரி கிங் என்று அழைக்கப்படும் தொழிலதிபர் ஆவார்.. மியான்மரில் தனது 13 வயதில் தொழிலாளியாக பணியாற்ற தொடங்கிய இவர், 1988-ல் கோவையில் லாட்டரி தொழிலை ஆரம்பித்தார். பிறகு பல மாநிலங்களில் தனது பிசினஸை விரிவுபடுத்தினார்.

லாட்டரி வணிகத்தை தாண்டி ரியல் எஸ்டேட், கட்டுமானம், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல துறைகளிலும் இவரது குடும்ப நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. 2024-ல் வெளியான தேர்தல் பத்திர விவரங்களின்படி, இவரது Future Gaming நிறுவனம் ரூ.1,368 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வாங்கியிருந்தது.

டெய்சியின் தொழில் பின்னணி என்ன?

அப்பா மிகப்பெரிய தொழிலதிபர் என்றாலும் டெய்சிக்கும் தனிப்பட்ட தொழில் அடையாளம் உள்ளது. Arise Investments and Capital Private Limited நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக செயல்பட்டு வருகிறார்.

பெண்களின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் பின்தங்கிய மக்களுக்கு நிதி உதவி வழங்குவதில் இந்த நிறுவனம், சற்று அதிகமாகவே கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக பெண்கள் சிறு தொழில்களைத் தொடங்கவும், தங்களது வருமானத்தை பெருக்கவும் உதவும் வகையில் நிதி சேவைகளை வழங்கி வருகிறது..

தமிழகத்தில் மட்டும், 150 கிளைகள் மூலம் 3.5 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் பயனடைந்துள்ளார்களாம்.. அதுமட்டுமல்ல, கடந்த 2025-ம் ஆண்டு Kiteskraft அமைப்பு டெய்சிக்கு Most Inspiring Woman of India என்ற விருதையும் வழங்கி கவுரவித்திருந்தது. இந்த தகவல்கள் அனைத்துமே, டெய்சியின் தொழில் விவரத்திலேயே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

டெய்சியின் சொத்து மதிப்பு ரூ.162 கோடி

2026 சட்டமன்றத் தேர்தலில் ஆதவ் அர்ஜுனா தாக்கல் செய்த வேட்புமனுவுடன் இணைக்கப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் டெய்சியின் சொத்து விவரங்களும் இடம்பெற்றிருந்தன.. . அதன்படி, அவரது சொத்துகளின் மதிப்பு ரூ.162.14 கோடி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் அவர் சுயமாக சம்பாதித்த சொத்துகளின் மதிப்பு ரூ.56.43 கோடி. பரம்பரை சொத்துகளின் மதிப்பு ரூ.26.78 கோடியாகும்.. ஷேர் மார்க்கெட் முதலீடுகளின் மதிப்பு ரூ.68.75 கோடி.. இதனை தவிர, தங்கம், வெள்ளி மற்றும் வைர நகைகளும் அவரது சொத்து விவரங்களில் இடம் பெற்றிருந்தது பலரது கவனத்தையும் பெற்றிருந்தது நினைவிருக்கலாம்.

குழந்தையின் எதிர்காலம்

14 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு பிறகு தம்பதி 2 பேருமே பிரிய முடிவு செய்திருக்கிறார்கள்.. இதனால் இவர்களது குழந்தையின் எதிர்காலம் குறித்த கேள்வியும் எழுந்துள்ளது... இதற்கு தனது அறிக்கையிலேயே டெய்சி பதிலளித்துள்ளார்.

"ஆதவ் அர்ஜுனாவும் நானும் தம்பதிகளாக பிரிந்து தனித்தனிப் பாதையில் பயணிக்க முடிவு செய்தாலும், குழந்தையை இணைந்து வளர்ப்பதில் இருவரும் தொடர்ந்து கவனம் செலுத்துவோம்" என்று டெய்சி பதிவிட்டுள்ளார்..

இதைத்தான் ஆங்கிலத்தில் Co-parenting என்பார்கள்.. அதாவது கணவன், மனைவி என்ற உறவு முடிவுக்கு வந்தாலும், பெற்றோர் என்ற பொறுப்பில் 2 பேருமே சேர்ந்து குழந்தையை வளர்ப்பது.

குழந்தையின் மகிழ்ச்சியையும் நல்வாழ்வையும் உறுதி செய்வதே தங்களது மிக முக்கியமான முன்னுரிமை என்றும் டெய்சி சொல்லியிருக்கிறார்.. ஆதவ் அர்ஜுனா மீது தனக்கு எப்போதும் மரியாதை உண்டு என்றும், அவர் தேர்ந்தெடுக்கும் பாதையில் மகிழ்ச்சி, அமைதி, வெற்றி கிடைக்க வாழ்த்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும், குழந்தை யாருடன் வசிக்கும், படிப்பு மற்றும் பராமரிப்பு பொறுப்புகளை 2 பேருமே எப்படி பகிர்ந்து கொள்வார்கள் என்பது குறித்து இதுவரை எந்த விவரமும் வெளியாகவில்லை.

தற்போது டெய்சி அறிவித்துள்ள இந்த முடிவு, அவரது தனிப்பட்ட விவகாரமாக இருந்தாலும், அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை உண்டுபண்ணி வருகிறது..

போட்டோக்கள் மிஸ்ஸிங்

சமீப நாட்களாகவே டெய்சி தனது கணவர் ஆதவ் அர்ஜுனாவுடன் இருக்கும் போட்டோக்களை சோஷியல் மீடியாவில் ஷேர் செய்வதை தவிர்த்து வந்ததாகவும் தெரிகிறது.. இருந்தாலும் தற்போதைய முடிவு குறித்து, டெய்சி எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

14 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தாலும், பெற்றோர் என்ற பொறுப்பில் இருவரும் தொடர்ந்து இணைந்திருக்க போவதாக டெய்சி தெரிவித்துள்ளதும், கணவன், மனைவி என்ற உறவைத் தாண்டி குழந்தையின் மகிழ்ச்சிக்கும் எதிர்காலத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கப் போவதாக கூறியிருப்பதும், இந்த "உறவுமுறிவு" அறிவிப்பில் கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சமாக உள்ளது..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+