பெரியார் வீட்டு பேரன்.. சொல்லின் செல்வனின் மகன்! ஈரோட்டில் களமிறங்கும் ஈவிகேஎஸ் இளங்கோவன்! யார் இவர்
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான இளங்கோவன் யார் என்பதைப் பார்க்கலாம்.
கடந்த 2021இல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி மிகப் பெரியளவில் வென்று ஆட்சியைப் பிடித்தது. இதில் திமுக கூட்டணி 159 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது.
திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி 25 இடங்களில் களமிறங்கிய நிலையில், அதில் 18 இடங்களில் காங்கிரஸ் கட்சி வென்றிருந்தது. 2006க்கு பிறகு காங்கிரஸ் ஒரே தேர்தலில் இத்தனை இடங்களில் வெல்வது இதுவே முதல்முறை.

திருமகன் ஈவேரா
இதில் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், அக்கட்சி சார்பில் போட்டியிட்டவர் திருமகன் ஈவேரா. 2021 தேர்தலில் இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளரை சுமார் 9000 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். இதற்கிடையே கடந்த ஜன.4ஆம் தேதி திருமகன் ஈவேரா திடீரென மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

காங்கிரஸ் வேட்பாளர்
கடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இங்குக் களமிறங்கிய நிலையில், இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியே களமிறங்கும் என அறிவிக்கப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசனை நடைபெற்று வந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் யார் என்பதை பார்க்கலாம்.

பெரியார் வீட்டுப் பேரன்
தனது அதிரடி பேச்சுக்குப் பெயர் போனவர் ஈவிகேஸ் இளங்கோவன். பெரியார் வீட்டுப் பேரனான ஈவிகேஎஸ், 1948, டிசம்பர் 21ஆம் தேதி ஈரோட்டில் பிறந்தார். சொல்லின் செல்வன் என்று அழைக்கப்படும் சம்பத்- ஈ. வெ. கி. சுலோசனா இவரது பெற்றோர் ஆவர். தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமியின் அண்ணன் ஈ.வெ.கிருஷ்ணசாமியின் பேரன் ஆவர். இளமை வயதில் அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த இவர் சென்னை மாநில கல்லூரியில் பி. ஏ. பொருளாதாரம் பட்டம் பெற்றார்.

அரசியல்
காங்கிரஸின் வாழப்பாடி ராமமூர்த்திக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் தந்தை சம்பத் மீது மிகப் பெரிய மரியாதை இருந்தது. இதனால் ஈவிகேஎஸ் இளங்கோவனை அரசியலுக்கு அழைத்து வந்தவர் வாழப்பாடி ராமமூர்த்தி தான். 1985இல் இவர் முதலில் தமிழ்நாடு சட்டசபைக்குள் நுழைந்தார். அப்போது அதிமுகவுடன் இணைந்து காங்கிரஸ் கட்சி தேர்தலைச் சந்தித்த நிலையில், அதில் சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார்.

மத்திய அமைச்சர்
அதைத் தொடர்ந்து கடந்த 2004ஆம் ஆண்டில் மக்களவை தேர்தலில் கோபி தொகுதியில் அவர் போட்டியிட்டார். இதில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் சார்பில் களமிறங்கிய அவர், சுமார் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அந்த காலகட்டத்தில் 2004 முதல் 2009 வரை அவர் மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை இணை அமைச்சராக இருந்தார். இருப்பினும், அதன் பிறகு அவர் போட்டியிட்ட பல தேர்தல்களிலும் தோல்வியையே சந்தித்தார்.

தொடர் தோல்விகள்
2009ஆம் ஆண்டு ஈரோடு மக்களவை தொகுதி, 2014இல் திருப்பூர் மக்களவை தொகுதியில் போட்டியிட்ட அவர் இரண்டிலும் தோல்வியடைந்தார். கடந்த 2019 மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி தமிழ்நாட்டில் 39 இடங்களில் 38இல் வென்றது. இருப்பினும், ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்ட தேனியில் ஓபிஎஸ் மகன் ஓபி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். தேர்தல்களில் தொடர்ந்து தோல்விகளைச் சந்திருந்து இருந்தாலும் காங்கிரஸ் கட்சியில் ஆக்டிவான அரசியல்வாதியாகவே இவர் எப்போதும் இருந்து வந்தார்.

சர்ச்சை பேச்சுகள்
கடந்த 2014 முதல் 2017ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும் ஈவிகேஎஸ் இளங்கோவன் இருந்துள்ளார். தனது அதிரடி பேச்சுக்களுக்குப் பெயர் போன ஈவிகேஎஸ் இளங்கோவன் தனது பேச்சுக்களால் பல முறை சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார். நேற்றைய தினம் தான் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று ஈவிகேஎஸ் அறிவித்த போதிலும், இப்போது அவரை தான் காங்கிரஸ் தலைமை வேட்பாளராக டிக் அடித்துள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவர் காங்கிரஸ் கூட்டத்தில் பேசிய பேச்சு இணையத்தில் டிரெண்டாகி இருந்தது.

டெபாசிட் கிடைக்காது
ராகுல் காந்தி நடைப்பயணம் குறித்து இரண்டு மாதங்களுக்கு முன்பு மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடந்தது.. அதில் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், "இனி தேர்தலில் நிற்க மாட்டேன்.. பல தேர்தல்களில் தோல்வியடைந்துள்ளனர். கட்சி நல்லா இருந்தால் வாக்கு செலுத்துவார்கள். கட்சி சரியான நிலையில் இல்லை என்றால் வாக்கு கிடைப்பதில்லை. எனது வெற்றிக்கும் தோல்விக்கும் கட்சி தான் காரணம். தனிப்பட்ட ஈவிகேஎஸ் இளங்கோவனுக்குச் செல்வாக்கு இல்லை.. கட்சியை விட்டு தனியாக நின்றால் டெபாசிட் கூடப் பெற முடியாது என்பது எனக்குத் தெரியும்" என்று கூறியிருந்தார். ஆனால், காலத்தின் விளையாட்டு மீண்டும் அவரே ஈரோடு கிழக்கில் வேட்பாளராக இறங்கியுள்ளார்.












Click it and Unblock the Notifications