சேலத்து மாம்பழம் தித்திக்கப் போவது யாருக்கு.. மும்முனைப் போட்டியால் பரபரக்கும் களம்
Recommended Video

சென்னை: சேலம் தொகுதியில் இம்முறை மாம்பழத்தை பறிக்கப் போவது யார் என்ற கேள்வி இப்போதே அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
சேலம் தொகுதியில் திமுக, அதிமுக அணிகளில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படாமல் இரு கட்சிகளும் நேரடியாக மோதவுள்ளன. இவர்களோடு அமமுகவும் மோதவுள்ளதால் மும்முனைப் போட்டி தீவிரமாக இருக்கும் என நம்பலாம்.
சேலம் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. சேலம் தெற்கு, சேலம் வடக்கு, சேலம் மேற்கு, வீரபாண்டி, எடப்பாடி, ஓமலூர் என மொத்தம் ஆறு தொகுதிகள் உள்ளன. 1952 முதல் கடந்த மக்களவை தேர்தல் வரை நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் 7 முறை வென்றுள்ளது.
கடந்த தேர்தலோடு சேர்த்து அதிமுக இத்தொகுதியில் 4 முறை வென்றுள்ளது. திமுக 3 முறை வென்றுள்ளது. தமிழ்மாநில காங்கிரஸ் ஒருமுறையும் தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலா ஒருமுறையும் வென்றுள்ளது. வாழப்பாடி ராமமூர்த்தி, ரங்கராஜன் குமாரமங்கலம், தங்கபாலு, செல்வகணபதி, கு.ராஜாராம் ஆகியோர் இன்று வெற்றி பெற்றோரில் குறிப்பிடத்தக்கவர்கள். திருச்செங்கோடு தொகுதியில் இருந்த எடப்பாடி தொகுதி மறு வரையறை செய்தபோது சேலம் தொகுதிக்குள் வந்துவிட்டது. சேலம் தொகுதி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தொகுதி என்பது கூடுதலாக கவனம் ஈர்த்துவருகிறது.

2014 தேர்தல்
கடந்த 2014 சட்டப்பேரவை தேர்தலில் திமுக அதிமுக தேமுதிக என மூன்று அணிகள் மோதின. இதில் அதிமுக வேட்பாளர் பன்னீர்செல்வம் 5 56 067 வாக்குகள் பெற்றிருந்தார். திமுக களமிறக்கிய வேட்பாளர் உமாராணி 288939 வாக்குகள் வாங்கி இரண்டாம் இடத்தை பெற்றார். பாஜக கூட்டணியோடு களம் கண்ட தேமுதிக வேட்பாளர் சுதீஷ் 201265 வாக்குகள் வாங்கி மூன்றாம் இடத்தை பிடித்தார். அப்போது பாஜக கூட்டணியில் பாமகவும் இருந்தது. பாமகவுக்கு இங்கு நல்ல வாக்கு வங்கி உண்டு. ஆனால் கடந்த தேர்தலில் பாமக சுதிசுக்கு ஆதரவாக வேலை செய்யவில்லை என்ற குற்றசாட்டு இன்றளவும் பேசப்படுகிறது. மக்களவை தேர்தலில் திமுகவுக்கும் அதிமுகவுக்குமான வாக்கு வித்தியாசம் பெரிய அளவில் இருந்தது. ஆனால் அதுவே கடந்த சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற 2016 ல் பெரிய வித்தியாசம் இல்லை எனும் அளவுக்கு குறைந்து போனது. அதாவது சேலம் மக்களவை தொகுதிக்குட்பட்ட 6 சட்டப்பேரவை தொகுதியிலும் சேர்த்து அதிமுக 5,27,428 வாக்குகளை பெற்றிருந்தது. திமுக 4,25,639 வாக்குகளை பெற்றது. கிட்டத்தட்ட ஒரு லட்சம் வாக்குகள் மட்டுமே குறைந்திருந்தது.

திமுக
திமுக இந்த தொகுதியில் வெற்றிபெற்று 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. 1980ம் ஆண்டுக்கு பிறகு திமுகவில் இருந்து யாரும் இங்கு வெற்றி பெறவில்லை இது வரை கூட்டணி கட்சியான காங்கிரசுக்கே இந்த தொகுதி ஒதுக்கப்பட்டு வந்தது இப்போது திமுக களம் காண்கிறது. 2014 தேர்தலில் காங்கிரஸ் திமுக மீதிருந்த ஊழல் புகார்கள், இலங்கை இனப் படுகொலை சம்பவங்கள் என எதிர்ப்பு அலை எங்கெங்கும் வீசியது இதனாலும் தொடர்ந்து ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு மீது இயல்பாகவே வரும் எதிர்ப்பு, அதோடு வளர்ச்சியின் நாயகன் மோடி என்று வலிந்து எழுப்பப் பட்டிருந்த பிம்பம் எல்லாம் சேர்த்து இந்த தொகுதியில் திமுக சில லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. ஆனால் அதற்கு அடுத்து இரண்டு வருடங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் 6 தொகுதிகளிலும் சேர்த்து ஒரு லட்சம் வாக்குகள் மட்டுமே குறைவாக பெற்றிருந்தது. தற்போது இடது சாரிகள் காங்கிரஸ் என்று கூட்டணி பலத்தோடு களமிறங்கும் திமுக தங்களுக்கு இப்போது நிலைமை சாதகமாக இருக்கும் என்று நம்புகிறது. இந்த தொகுதியில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் பிரபு இந்தமுறை திமுக சார்பில் களம் இறங்கவுள்ளார்.

அதிமுக
கொங்கு மண்டலம் எப்போதுமே அதிமுகவின் கோட்டை என்று கூறப்படுவது உண்டு. அதற்கேற்றார்போல கடந்த சட்டப்பேரவை தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசம் என்றாலும் கொங்கு மண்டல சட்டபேரவை தொகுதிகளே அதிமுகவுக்கு வெற்றிவாய்ப்பை அதிகரித்தது. இப்போது சேலம் தொகுதி எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதி என்பதால் அதிமுகவினர் இங்கு முழு மூச்சுடன் பணியாற்றுவார்கள் என்பது இங்கு களமிறங்கும் அதிமுக வேட்பாளருக்கு கூடுதல் சிறப்பு. அதிமுக அணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவுக்கு இங்கு குறிப்பிடத்தகுந்த வாக்கு வங்கி உள்ளது. கடந்த 2014 தேர்தலில் 201265 வாக்குகள் பெற்றிருந்தது. அதற்கு முன்பு 2009- ல் நடைபெற்ற தேர்தலிலும் தேமுதிக சார்பில் போட்டியிட்ட அழகாபுரம் மோகன்ராஜ் ஒரு லட்சத்து 20 ஆயிரம் வாக்குகளை பெற்றிருந்தார். இப்போது தேமுதிகவின் வாக்கு வங்கி குறைந்திருந்தாலும் குறைந்தது 75 ஆயிரம் வாக்குகளையாவது பெறும் என்பது அதிமுகவின் கணிப்பு. அதோடு பாமகவும் இங்கு குறிப்பிடத்தக்க அளவில் செல்வாக்கோடு இருப்பது அதிமுகவுக்கு இன்னொரு பிளஸ். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்ற கோஷத்தோடு தனித்து களம் கண்ட பாமக இந்த 6 சட்டபேரவை தொகுதிகளிலும் சேர்த்து ஒரு லட்சத்து 63932 வாக்குகள் பெற்றிருந்தது. இவற்றை தங்களுக்கான கூடுதல் சிறப்புகளாக பார்க்கும் அதிமுக "எப்படியும்" வெற்றி பெறுவது என்ற இலக்கோடு களம் காண்கிறது. காரணம் இது இப்போது முதல்வர் எடப்பாடியின் தொகுதி என்பதால். இந்த தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிவிருக்கிறார் இப்போதைய சிட்டிங் எம்.பி

அமமுக
அமமுக சார்பில் இங்கு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.கே செல்வம் போட்டியிடுகிறார். இவர் அதிமுகவில் இருந்தவர். இவர் அப்போது புறநகர் மாவட்ட செயலாளராக இருந்தபோது எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து அரசியல் செய்தவர். அப்போது எஸ்.கே செல்வத்தின் கை ஓங்கியிருந்ததால் பழனிசாமி ஓரங்கட்டப்பட்டார். அதன்பின்பு காலச்சக்கரத்தின் சுழற்சியில் எஸ்.கே செல்வம் ஓரம்கட்டப்பட்டு பழனிசாமி முதல்வர் ஆனார். அப்போது எஸ்.கே செல்வம் ஓ.பி.எஸ் அணிக்கு சென்றார். அதன் பின்னர் ஓ.பி.எஸ் ஈ.பி.எஸ்.சோடு கைகோர்க்க வேறு வழியில்லாத எஸ்.கே.செல்வம் அமமுகவுக்கு சென்றுவிட்டார். இவருக்கென்று தொகுதியில் தனிப்பட்ட செல்வாக்கு உண்டு. ஆகவே இவர் வாங்கும் ஓட்டுகள் அதாவது இவர் பிரிக்கும் அதிமுக ஓட்டுகள் திமுகவுக்கு சாதகமாகும் என்று திமுக நம்புகிறது.
இப்படிப்பட்ட நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு இந்த தொகுதியில் வெல்வது என்பது கவுரவ பிரச்சனை. ஸ்டாலினுக்கோ தனது தலைமையில் சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் வாழ்வா சாவா பிரச்சனை. தினகரனுக்கு தனது வலிமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம். இந்த நிலையில் சேலம் மாங்கனியை யார் பறிக்கப் போகிறார்கள் என்பது இனி வரும் நாட்களில் அரசியல் கட்சிகளின் "காட்சிகளை" பொருத்தும் மாறலாம்.












Click it and Unblock the Notifications