எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அங்கே ‘கிங்’ ஜெ.ராதாகிருஷ்ணன் தான்.. யார் இவர்?
சென்னை: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய தலைவராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். அதிமுக, திமுக என எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் முக்கிய பொறுப்புகளை வகிக்கும் ஜெ.ராதாகிருஷ்ணன், தற்போதைய தவெக அரசிலும் முக்கிய பொறுப்புக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
விரைவில் ஓய்வு பெற இருந்த ஜெ.ராதாகிருஷ்ணன், தற்போது 5 ஆண்டுகளுக்கு, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளது கவனம் பெற்றுள்ளது.

யார் இந்த ஜெ.ராதாகிருஷ்ணன்?
1966ஆம் ஆண்டு பிறந்த ஜெ. ராதாகிருஷ்ணன், பெங்களூரில் கால்நடை மருத்துவப் படிப்பை முடித்தவர். 1992 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஐஏஎஸ் கேடரை சேர்ந்த ஜெ. ராதாகிருஷ்ணன், 1994இல் தூத்துக்குடியில் துணை ஆட்சியராக தன் பணியைத் துவங்கி, நிதித் துறை துணைச் செயலர், சென்னை மாநகராட்சி ஆணையர், சேலம், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் போன்ற பல பதவிகளை வகித்தவர்.
ராதாகிருஷ்ணன் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றியபோதுதான், 2004ல் சுனாமி தாக்கியது. அப்போது அவர் மேற்கொண்ட நிவாரணப் பணிகள் பெரும் பாராட்டுகளைப் பெற்ற நிலையில், சுனாமியால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராக அவர் இடமாற்றம் செய்யப்பட்டார். நாகப்பட்டினத்தில் சுனாமி நிவாரணப் பணியில் இவர் மேற்கொண்ட நடவடிக்கைகளை முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் வெகுவாகப் பாராட்டினார்.
முக்கிய பொறுப்புகளை வகித்த ராதாகிருஷ்ணன்
சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது அங்கு நடந்து வந்த சிசுக் கொலைகளைத் தடுக்க இவர் எடுத்த முயற்சிகள் பாராட்டுகளைப் பெற்றன. 2012ஆம் ஆண்டில் இருந்து பல்வேறு காலகட்டங்களில் தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறை செயலராக பொறுப்பில் இருந்தார் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன். 2012ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் அந்தப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டு, தொடர்ந்து ஏழு ஆண்டுகள் இருந்தவர் என்பதாலும், 2021இல் திமுக ஆட்சிக்கு வந்தததும் பணி இடமாற்றத்துக்கு உள்ளாகும் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளில் ராதாகிருஷ்ணனும் இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
திமுக ஆட்சியிலும் முக்கிய பதவி
ஆனால், திமுக ஆட்சியிலும் ஜெ.ராதாகிருஷ்ணன் முக்கிய துறைகளில் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டிருந்தார். கூட்டுறவுத் துறை செயலராகவும், சுகாதாரத்துறை செயலராகவும், பின்னர் சென்னை மாநகராட்சி ஆணையராகவும் பணியாற்றிய ஜெ.ராதாகிருஷ்ணன் அதன்பிறகு மின்சார வாரிய தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.
முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசுத் துறைகளின் முக்கிய தகவல்கள், திட்டங்கள் மற்றும் தேவையான இனங்களில் செய்தி ஊடகங்கள் மூலமாக சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு எடுத்துரைப்பதற்கும், பிற அரசு துறைகளுடன் ஒருங்கிணைப்பதற்கும், 4 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் அரசு செய்தித் தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர். அந்த 4 பேரில் ஜெ. ராதாகிருஷ்ணனும் ஒருவர்.
தவெக ஆட்சியில்
இந்நிலையில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியில் பணியிட மாற்றம் செய்யப்பட்டார் ராதாகிருஷ்ணன். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவராக இருந்த ராதாகிருஷ்ணன், அண்ணா நிர்வாக கல்லூரி இயக்குநராக கடந்த ஜூலை மாதம் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய தலைவராக ஜெ.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், 5 ஆண்டுகளுக்கு இந்த பதவியை வகிப்பார். இந்த மாத இறுதியில் ஜெ.ராதாகிருஷ்ணன் ஓய்வு பெற இருந்த நிலையில், அவருக்கு முக்கிய பொறுப்பு தேடி வந்துள்ளது.


Click it and Unblock the Notifications
