தமிழக பாஜக பொறுப்பாளர் ராம் மாதவ் யார்? காஷ்மீர் டூ வடகிழக்கு வரை பாஜக ஆட்சியை கொண்டு வந்தவராச்சே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு பாஜகவின் மேலிட பொறுப்பாளராக ராம் மாதவ், இணை பொறுப்பாளர்களாக நிர்மல்குமார் சுரானா, கே.அருணா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பாஜக ஒருகாலமும் ஜெயிக்க முடியாது என்று சொல்லப்பட்ட ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களில் எல்லாம் இவர் பொறுப்பாளராக செயல்பட்டு முதல் முறையாக பாஜகவை அரியணையை ஏற வைத்த பெருமை கொண்ட ராம் மாதவின் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.

பாஜக சார்பில் இன்று 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களுக்கு மேலிட பொறுப்பாளர்கள், இணை பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

ram madhav

அதன்படி தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளராக ராம் மாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இணை பொறுப்பாளர்களாக நிர்மல் குமார் சுரானா, கே அருணா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதில் ராம் மாதவ் நியமனம் தான் கவனம் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் பாஜக வளர்ச்சியடைய முடியாமல் தவித்து வருகிறது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஒரு இடத்தில் மட்டுமே பாஜக வென்றது. இதனால் கட்சியை எப்படியாவது தமிழகத்தில் வளர்க்க பாஜக மேலிட தலைவர்கள் முயன்று வரும் நிலையில் தான் ராம் மாதவ் தமிழகத்தின் பாஜக மேலிட பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இவர் சாதாரணமான ஆள் கிடையாது. பாஜக எங்கெல்லாம் வளர முடியாமல் தவிக்கிறதோ அங்கெல்லாம் பொறுப்பாளராக செயல்பட்டு கட்சியை ஆட்சியில் அமர வைத்தவர். பாஜக காலூன்றவே முடியாது என்று கூறப்பட்ட ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களான அசாம், மணிப்பூர், திரிபுரா, நாகலாந்து, அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் முதல் முறையாக பாஜகவை அரியணை ஏற்றிய பெருமை இந்த ராம் மாதவையே சேரும். இவரது பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.

தமிழக பாஜக மேலிட பொறுப்பாளராக இருக்கும் ராம் மாதவ் அண்டை மாநிலமான ஆந்திராவை சேர்ந்தவர். இவருக்கு வயது 62. பத்திரிகையாளராக இருந்தவர். எடிட்டராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இவர் அடிப்படையில் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர். ஆர்எஸ்எஸ் அமைப்பில் செய்தி தொடர்பாளராக செயல்பட்ட அனுபவம் கொண்டவர். தற்போது ஆர்எஸ்எஸ் அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ளார். அதுமட்டுமின்றி பாஜகவில் தேசிய துணை தலைவராக உள்ளார்.

பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருக்கும் இவர் பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு மிகவும் நெருக்கமானவர். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் இடையே பாலமாகவும் செயல்பட்டு வருகிறார். அதுமட்டுமின்றி எங்கெல்லாம் பாஜக சிரமப்படுகிறதோ? அங்கெல்லாம் சென்று கட்சியை ஆட்சியை பிடிக்க வைப்பதில் வல்லவராக உள்ளார்.

உதாரணமாக கடந்த 2014ல் ஆர்எஸ்எஸ்ஸில் இருந்து பாஜகவிற்கு வந்தார். உடனடியாக தேசிய பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள ஜம்மு காஷ்மீரின் தேர்தல் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டார்.

வரலாற்றில் முதல் முறையாக பாஜக 25 இடங்களை கைப்பற்றியதோடு மெஹபூபா முஃப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றியது. பிறகு 370-வது சட்டப்பிரிவு நீக்கத்துக்கு பிறகு முதல் முறையாக கடந்த 2024ம் ஆண்டில் ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடந்தது. அப்போதும் ராம் மாதவ் பாஜகவின் தேர்தல் பொறுப்பாளராக செயல்பட்ட நிலையில் 29 தொகுதிகளில் வென்று வலுவான எதிர்க்கட்சியாக மாறியது. 42 தொகுதிகளில் வென்ற ஓமர் அப்துல்லாவின் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி காங்கிரஸ் ஆதரவில் ஆட்சியை பிடித்தது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் ஆட்சியை பிடித்த ஓமர் அப்துல்லாவின் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி 23.43 சதவீத வாக்குகள் பெற்ற நிலையில் எதிர்க்கட்சியான பாஜக மொத்தம் 25.64 சதவீத வாக்குகள் பெற்றது.

மேலும் கடந்த 2016ல் அசாமில் பாஜக தேர்தல் பொறுப்பாளராக செயல்பட்டார். 126 தொகுதிகள் கொண்ட அசாமில் பாஜக 86 தொகுதிகளை வென்று ஆட்சியை பிடித்தது. அதுமட்டுமின்றி காங்கிரஸ் கட்சியின் 15 கால ஆட்சியை முடிவுக்கு வந்தது. அதுமட்டுமின்றி வடகிழக்கில் முதல் முறையாக பாஜக சொந்தமாக ஆட்சியை பிடித்தது.

பிறகு 2018ல் திரிபுராவில் தேர்தல் வியூக பொறுப்பாளராக செயல்பட்டார். இங்கு பாஜக கூட்டணி 60-ல் 43 தொகுதிகளை கைப்பற்றி வெற்றி பெற்றது. பாஜக மட்டும் 36 தொகுதிகளில் வாகை சூடியது. இதன்மூலம் 25 ஆண்டுகளாக நடந்து வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்டது. பாஜக முதல் முறையாக ஆட்சியை பிடித்தது.

இதுதவிர மணிப்பூர், நாகலாந்து அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் முதல் முறையாக பாஜக கூட்டணி ஆட்சியை பிடிக்க முக்கிய காரணமாக இருந்தவர் இந்த ராம் மாதவ் ஆவார். இப்படியான சூழலில் தான் பாஜக வளர முடியாமல் தவித்து வரும் தமிழகத்தின் மேலிட பொறுப்பாளராக ராம் மாதவ் இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+