யார் அந்த “சார்”? ஞானசேகரன் போனில் பேசவே இல்லை.. பாலியல் வன்கொடுமை வழக்கில் சென்னை கமிஷனர் விளக்கம்!
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஞானசேகரன், “சார்” என யாரோ ஒருவரிடம் பேசியதாக எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டிருந்ததாக தகவல் வெளியான நிலையில், “யாரிடமும் ஞானசேகரன் போனில் பேசவில்லை, அந்தப் பெண்ணை மிரட்டுவதற்காக அப்படிச் சொல்லி உள்ளார்” என சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், கடந்த திங்கள் அன்று இரவு நேரத்தில் மாணவர் ஒருவருடன் தனியாக பேசிக்கொண்டிருந்ததை வீடியோ எடுத்து மிரட்டி, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி, “சார்” ஒருவருடன் தனியாக இருக்க வேண்டும் என மிரட்டியது முதல் தகவல் அறிக்கை வாயிலாக தெரியவந்துள்ளது.

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கோட்டூர்புரத்தில் பிரியாணிக்கடை நடத்தி வந்த ஞானசேகரன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஞானசேகரனின் செல்போனில் பல்வேறு வீடியோக்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. அவற்றை கைப்பற்றியுள்ள போலீசார், ஞானசேகரன் இது போன்று வேறு ஏதேனும் மாணவிகளை வன்கொடுமை செய்துள்ளாரா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், மாணவி வன்கொடுமை சம்பவத்தில், ஞானசேகரன் உடன் இன்னொரு நபருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. அண்ணா பல்கலை மாணவி, மற்றொரு மாணவருடன் தனியாக பேசிக்கொண்டிருக்கும்போது அதனை வீடியோ எடுத்த நபர், வீடியோவை டீன் மற்றும் பேராசிரியர்களிடம் காட்டி டிசி பெற்றுத் தருவேன் என மிரட்டியதாக மாணவி புகார் அளித்துள்ளார்.
தன்னுடன் தனிமையில் இருக்க வேண்டும் என்றும், மற்றொரு "சாரிடமும்" தனியாக இருக்க வேண்டும், நீ அவருடன் ஒத்துழைக்க வேண்டும் என அந்த நபர் வற்புறுத்தியதாக மாணவி புகாரில் குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்த நபர் போனில் பேசியதாகவும் அப்போது, "இந்தப் பெண்ணை மிரட்டிவிட்டு விட்டுவிடுவேன்" என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் அதன் பிறகு, தன்னை அந்த நபர் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். தனக்கு உடல்நலம் சரியில்லை எனக்கூறிய போதும், பாலியல் வன்கொடுமை செய்த அந்த நபர், அதனையும் வீடியோவாக எடுத்து, எப்போது கூப்பிட்டாலும் வர வேண்டும் என்று மிரட்டியதாக மாணவி தெரிவித்துள்ளார். மாணவியின் புகார் எஃப்.ஐ.ஆரில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த நபர் "சார்" எனக் குறிப்பிட்ட மற்றொரு நபர் யார் என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில், அது தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் விளக்கம் அளித்துள்ளார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அருண் ஐபிஎஸ், “அண்ணா பல்கலைக்கழக மாணவி கொடுத்த புகாரின் பேரில் கோட்டூர்புரம் உதவி ஆணையர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு தனிப்படைக்கும் ஒரு பணியைக் கொடுத்து விசாரித்தோம். சந்தேகப்படும் நபர்கள் சிலரை கொண்டுவந்து விசாரித்தோம். விசாரணைக்குப் பின் அறிவியல்பூர்வமாக ஆதாரங்களை சேகரித்து, செல்போன் டவர் லொகேஷன், சிடிஆர் எல்லாம் பதிவிட்டு டிசம்பர் 25 ஆம் தேதி காலையிலேயே காவல்துறை குற்றம்சாட்டப்படும் நபரை பிடித்து விட்டோம்.
குற்றத்தை அந்த நபர்தான் செய்தார் என்பதை உறுதிப்படுத்துவதற்காக, மேலும் விசாரணை செய்து அவர்தான் குற்றவாளி என்பதை உறுதிப்படுத்திய உடன் கைது செய்து ரிமாண்ட் செய்தோம். இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை நடந்த புலன் விசாரணையில், ஞானசேகரன் ஒருவர்தான் குற்றவாளி.
புலன் விசாரணை தகவலை வெளியே சொல்லக்கூடாது. ஆனால், இந்த விவகாரத்தில் நிறைய பேர் அரசியல் செய்வதால் சொல்கிறேன். இந்த குற்றவாளி பேசும்போது, “சார்” என பேசியதாக பலர் குறிப்பிடுகின்றனர். இந்த சம்பவம் நடக்கும்போது அந்த நபர் தனது போனை ஏரோபிளேன் மோடில் வைத்திருந்தார். அவர் போனில் பேசியதாக கூறப்பட்டது தவறான தகவல். சும்மா அந்தப் பெண்ணை பயமுறுத்துவதற்காக சார் எனக் கூறியுள்ளான்.
ஞானசேகரன் மீது சென்னையில் 2013-ல் இருந்து 20 வழக்குகள் உள்ளன. இந்த அனைத்து வழக்குகளும் திருட்டு போன்ற வழக்குகள்தான். ரவுடியிசம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகள் இல்லை. அந்த 20 வழக்குகளில் 6-ல் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. மற்ற வழக்குகள் விசாரணையில் இருந்து வருகிறது.












Click it and Unblock the Notifications