நொந்து போச்சா திமுக? அதிமுக, கம்யூனிஸ்ட் ஆபீஸில் காலி சேர்கள்.. டக்னு பனையூர் வந்த பிரபலம் யாருங்க
சென்னை: தமிழக அரசியல் களத்தில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளின் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இப்போது மிகப்பெரிய கவனத்தை ஈர்த்து வருகிறது.. 2 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை வகித்து வந்த நிலையில், சென்னையில் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைமை அலுவலகங்களிலும், தாராபுரத்தில் உள்ள தேர்தல் பணிமனைகளிலும் காணப்பட்ட காட்சிகள் கவனத்தை ஈர்த்துள்ளன.
வழக்கமாக தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் கட்சி அலுவலகங்களில் தொண்டர்கள் திரண்டு நிற்பார்கள்... தங்கள் கட்சி முன்னிலை பெற்றால் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாகக் கொண்டாடுவார்கள்..

இன்று 2 தொகுதி ரிசல்ட்
ஆனால், இந்த இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது சில முக்கியக் கட்சிகளின் அலுவலகங்களில் அப்படியான கொண்டாட்டங்களைக் காண முடியவில்லை. அதே நேரத்தில், பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் உற்சாகமாகக் கொண்டாடிய காட்சிகளும் வெளியாகின.
தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கும் கடந்த 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடந்தது. இதில் மதுராந்தகம் தொகுதியில் 86.26 சதவீத வாக்குகளும், தாராபுரம் தொகுதியில் 80.30 சதவீத வாக்குகளும் பதிவாகின.
அதிமுக, திமுக
இந்த வாக்குகள் எண்ணும் பணி இன்று நடைபெற்றது. ஆரம்பம் முதலே 2 தொகுதிகளிலும் தவெக முன்னிலை வகித்து வந்தது. குறிப்பாக, தாராபுரம் தொகுதியில் தபால் வாக்குகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டபோது, முதல் 2 சுற்றுகளில் தவெக முன்னிலை பெற்றது.
அடுத்தடுத்த சுற்றுகளில் அதிமுக முன்னிலைக்கு வந்ததால், அக்கட்சியினர் உற்சாகமடைந்தனர். ஆனால், வாக்கு எண்ணிக்கையில் மீண்டும் தலைகீழாக நிலவரம் மாறியது. தவெக வேட்பாளர் சத்யபாமா மீண்டும் முன்னிலை பெற்றார். அப்போது வெளியான ஒரு நிலவரத்தின்படி, சத்யபாமா 16,201 வாக்குகள் பெற்றிருந்தார். அதிமுக வேட்பாளர் பானுமதி 14,807 வாக்குகளுடன் 2-வது இடத்தில் இருந்தார். இதேபோல் மதுராந்தகம் தொகுதியிலும் தவெக தொடர்ந்து முன்னிலை வகித்தபடியே உள்ளது.
தலைமை அலுவலகங்கள் வெறிச்சோடின
இந்த சூழலில்தான், சென்னையில் உள்ள முக்கியக் கட்சிகளின் தலைமை அலுவலகங்கள் தொண்டர்கள் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்டன. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுகவின் அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்கள் கூட்டம் இல்லாமல் அமைதியான சூழல் நிலவியது.
அதேபோல், சென்னை தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமும் தொண்டர்கள் இல்லாமல் காணப்பட்டன.. இந்த 2 தொகுதிகளிலும் திமுக, சிபிஐ, சிபிஐஎம் உள்ளிட்ட கட்சிகள் பின்னடைவைச் சந்தித்த நிலையில், அவற்றின் அலுவலகங்களில் வழக்கமாகக் காணப்படும் தேர்தல் பரபரப்பு இல்லாமல் இருந்தது.
பணிமனையில் தொண்டர்கள் எங்கே
இதனிடையே, தாராபுரத்தில் முக்கியக் கட்சிகளின் தேர்தல் பணிமனைகள் வெறிச்சோடிக் காணப்படுவதாக சோஷியல் மீடியாவில் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.. குறிப்பாக, திமுகவின் தலைமைத் தேர்தல் பணிமனையில் தொண்டர்கள் யாருமே இல்லாமல், வெறும் காலி சேர்கள் மட்டுமே போடப்பட்டிருக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
அதேபோல், அதிமுகவின் தலைமைத் தேர்தல் பணிமனையிலும் நான்கைந்து பேர் மட்டுமே உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள்.. மற்றபடி, அங்கும் தொண்டர்கள் கூட்டமாகக் காணப்படவில்லை. தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த நேரத்தில், முக்கியக் கட்சிகளின் பணிமனைகளில் காணப்பட்ட இந்தக் காட்சிகள் சோஷியல் மீடியாவில் கவனம் பெற்றுள்ளன.
பனையூரில் தொண்டர்கள் குத்தாட்டம்
ஆனால் இதற்கு நேர்மாறாக, சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகம் தொண்டர்களின் உற்சாகத்தால் களைகட்டியது.. மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் தவெக தொடர்ந்து முன்னிலை வகித்ததால், கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், உற்சாகமாக டான்ஸ் ஆடியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்..
குறிப்பாக, தாராபுரத்தில் அதிமுக முன்னிலை வகித்த நிலையில், தவெக மீண்டும் முன்னிலைக்கு வந்தது தொண்டர்களின் உற்சாகத்தை மேலும் அதிகரித்தது.. இந்த பரபரப்புக்கு நடுவில் நடிகர் மன்சூர் அலிகானும் பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்துக்கு வருகை தந்திருந்தார். அப்போது தொண்டர்கள் அவரை சூழ்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
உற்சாகக் கொண்டாட்டம்
ஒருபக்கம் முக்கியக் கட்சிகளின் தேர்தல் பணிமனைகளில் தொண்டர்கள் இல்லாத அமைதியான சூழல்.. இன்னொரு பக்கம் தவெக தலைமை அலுவலகத்தில் பட்டாசு, நடனம் என உற்சாகக் கொண்டாட்டம்.. மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது காணப்பட்ட இந்த வித்தியாசமான காட்சிகள் இப்போது அரசியல் வட்டாரத்திலும் சோஷியல் மீடியாவிலும் கவனத்தை ஈர்த்து வருகின்றன.. இறுதி முடிவுகள் வெளியான பிறகே 2 தொகுதிகளின் முழுமையான தேர்தல் நிலவரம் தெரியவரும்.




Click it and Unblock the Notifications
