இந்தியா கூட்டணியில் யார் வலிமையான தலைவர்? மடக்கிய இந்தி நாளிதழ்! ஸ்டாலின் வைத்த ட்விஸ்ட்!
சென்னை: இந்தியா கூட்டணியில் யார் வலிமையான தலைவர்? என்ற கேள்வியை முன் வைத்து முதலமைச்சர் ஸ்டாலினை பிரபல இந்தி நாளிதழான தைனிக் ஜாக்ரான் மடக்கிய போது அதற்கு அவர் அளித்த பதிலை இங்கே பார்க்கலாம்.
கேள்வி: இலவசத் திட்டங்கள் குறித்து அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது. உச்சநீதிமன்றமே கூட இதுபற்றி சில கருத்துகளைக் கூறியுள்ளது. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

பதில்: இலவசம் என்று மலிவாக வரையறுக்கப்படுவதை நாங்கள் ஒருபோதும் ஏற்பதில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒவ்வொரு திட்டமும் சமூகநலத் திட்டங்கள்தான். அந்தத் திட்டங்கள் ஒவ்வொரு காலகட்டத்திற்கேற்ப நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அவை அந்தந்தக் காலகட்டத்தில் மக்களை ஒரு படியேனும் மேலே உயர்த்துகின்றன.
விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் வேளாண் குடிகளைக் காப்பாற்றியது, மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ் ஒரு தலைமுறையின் பள்ளிக் கல்வியை நிறைவு செய்ய வைத்தது, பட்டதாரிகளுக்கான கட்டணமில்லாக் கல்வி, உயர்கல்வி கற்று உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நல்ல ஊதியத்துடன் கூடிய வேலையைக் கிடைக்கச் செய்தது. கலர் டி.வி, கேஸ் அடுப்பு போன்றவை பெண்கள் எந்நேரமும் அடுப்படியில் இருக்க வேண்டும் என்ற நிலையிலிருந்து மீட்டு, வெளியுலகத்தைக் காணச் செய்தன. இவற்றை இலவசம் என்று சொல்வது தவறு. பிரதமர் மோடியே கூட, நீங்கள் குறிப்பிடும் இலவசத் திட்டங்கள் பலவற்றை அறிவித்திருக்கிறார்.
கேள்வி: பள்ளிகளில் காலைச்சிற்றுண்டித் திட்டம் தொடங்கியிருக்கிறீர்களே?
பதில்: குழந்தைகள் காலை உணவு சாப்பிட முடியாமல் பள்ளிக்கு வருவதை நான் சில பள்ளிகளில் நேரில் ஆய்வு செய்து தெரிந்துகொண்டேன். சாப்பிடாமல் வரும்போது, பாடம் என்பது அவர்களுக்கு சுமையாக மாறிவிடுகிறது. களைப்பும் சோர்வும் ஏற்படுவதுடன், உடல்நலக் குறைபாடுகளும் உருவாகின்றன. எனவே, எதிர்காலத் தலைமுறை ஆரோக்கியமான தலைமுறையாக வளரவேண்டும், கல்வியில் சிறந்து விளங்கவேண்டும் என்ற எண்ணத்தின் விளைவுதான் காலை உணவுத்திட்டம். அதனால்தான் பிற மாநிலங்களும் தமிழ்நாட்டைப் பின்பற்றுகின்றன.
கேள்வி: பிரதமர் மோடியை எதிர்கொள்வதற்கு ஏற்ற வலிமையான தலைவராக உங்கள் இந்தியா கூட்டணியில் யாரைக் கூறுவீர்கள்?
பதில்: இந்தியாவை இந்தியா கூட்டணி மீட்கும். இந்தியா என்ற பெயரைக் கேட்டாலே நடுங்கும் நிலையில்தான் பாஜக இருக்கிறது. பிறகெதற்கு யார் வலிமையான போட்டியாளர் என்ற கேள்வி. இந்தியா கூட்டணி என்பது தலைவர்களும் கட்சிகளும் மட்டும் இடம்பெற்றுள்ள கூட்டணி அல்ல. இந்திய மக்களின் ஒருங்கிணைந்த கூட்டணி. அவர்கள், ஜனநாயக விரோத - மதவாத அரசியல் செய்யும் பா.ஜ.க.வை விரட்டும் வலிமை கொண்டவர்கள். யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதைவிட யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் இந்தியா கூட்டணியினரும் இந்திய மக்களும் தெளிவாகவே இருக்கிறோம்.












Click it and Unblock the Notifications