விஐபி மாட்ட போறாரு? யாரந்த சினிமா பிரபலம்? 10கி. மெத்தபெட்டமைன்? சென்னை வடபழனி போலீஸ் செம "சம்பவம்"
சென்னை: தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை குறைக்கும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக இறங்கி வருகிறார்கள்.. அந்தவகையில், இப்போதும் ஒரு கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.. இது தொடர்பான விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது.
போதைப்பொருள் விநியோகம் மற்றும் விற்பனை ஆகியவற்றை தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கைகளை, தமிழக போலீசார் தொடர்ந்து எடுத்து வருகிறார்கள்.. காவல்துறையின் இந்த தொடர் முயற்சிகளின் பலனாக, மாநிலத்தில் கஞ்சா பயிரிடப்படுவது தடுக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல போதைப்பொருட்கள் விற்பனை செய்பவரை கைது செய்வதோடு, அவரது சொத்து பறிமுதல், வங்கிகணக்கு முடக்கம், கடைகளுக்கு சீல், கடுமையான அபராதம், கடும் சிறைத்தண்டனை பெற்றுத்தருவது போன்றவற்றையும் காவல்துறை மேற்கொண்டு வருகிறது.. மற்றொருபுறம், போதைப்பொருட்களின் தீமைகளை மாணவர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வது, கல்வி நிலையங்கள் அருகில் போதைப் பொருள் விற்பனையைத் தடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளிலும் இறங்கி வருகிறது.
சென்னை போலீஸ்: அந்தவகையில், சென்னையிலும், பெருநகர காவல் எல்லையில் போதை பொருள் முற்றிலும் ஒழிக்கும் வகையில் போலீஸ் கமிஷனர் அருண் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன்படி உதவி கமிஷனர் ஒருவர் தலைமையில் புதிதாக போதை பொருள் நுண்ணறிவு பிரிவு என்று தனியாக தொடங்கி சென்னை முழுவதும் அதிரடி வேட்டை நடத்தி வருகிறார்கள்.
கடந்த மாதம்கூட சென்னையில், மூலக்கடை பஸ் ஸ்டாண்டு அருகே சுமார் 27 கோடி ரூபாய் மதிப்புள்ள மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது.. சென்னையில் இருந்து ராமநாதபுரம் கடல் வழியாக இலங்கைக்கு போதை பொருள் கடத்தப்படுவதாக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, இந்த சோதனை நடத்தப்பட்டது.
போதைப்பொருள்: அப்போது விஜயகுமார் மணிவண்ணன் என்ற நபர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தபோது, சுமார் 2 முக்கால் கிலோ எடை கொண்ட 27 கோடி மதிப்புள்ள மெத்தப்பட்டமைன் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டிருந்தனர். அதேபோல, இப்போது வடபழனியிலும் ஒரு கும்பல் சிக்கியிருக்கிறது.
வடபழனி, கோடம்பாக்கம், சாலிகிராமம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் சினிமா பிரபலங்கள் மற்றும் வசதியான நபர்களுக்கு மெத்தம்பெட்டமைன் என்ற போதை பொருள் விற்பனை செய்வதாக தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, வடபழனியில் போலீசார், ரகசியமான தீவிர தேடுதல் வேட்டையை ஆரம்பித்தனர்.
தனிப்படை: இதற்காக மெத்தம்பெட்டமைன் வாங்குவது போல், வடபழனியிலுள்ள பிரபல ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் தனிப்படையினர் ரகசியமாக வந்துநின்றனர்..
அப்போதுதான், பெரியார் நகரை சேர்ந்த சுரேந்திரநாத்(37) என்பவரின் பெயர் அடிபட்டது.. அவரிடம் தொடர்பு கொண்டு, போதைப்பொருளை வாங்குவதுபோல பேசினார்களாம்.. உடனே சுரேந்திரநாத்தும், மெத்தம்பெட்டமைன் எடுத்துக் கொண்டு, வடபழனி பகுதிக்கு வந்துள்ளார். அப்போது தனிப்படையினர் அதிரடியாக அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
போலீஸ் ஸ்டேஷன்: இதையடுத்து, எங்கிருந்து மெத்தம்பெட்டமைன் கிடைக்கிறது? யாரிடமிருந்து பெறப்படுகிறது? என்றெல்லாம் அவரிடம் விசாரணை ஆரம்பமானது.. அப்போதுதான், அசோக் நகர் போலீஸ் ஸ்டேஷனில், காவலராக பணியாற்றி வரும் ஜேம்ஸ்(35) என்பவர் மூலம் போதைப்பொருள் கிடைப்பதாகவும், அதனை அவரிடமிருந்து வாங்கி, சினிமா பிரபலங்கள் மற்றும் ஐடி ஊழியர்களுக்கு ஆர்டர்படி சப்ளை செய்து வருவதாகவும் வாக்குமூலம் தந்தனர்.
உடனே போலீசார், பிடிபட்ட சுரேந்திரநாத் மூலம் மேலும் போதைபொருள் வேண்டும் என்று கேட்டு, காவலர் ஜேம்ஸை தொடர்பு கொண்டு நேரில் வரவழைத்து, அவரையும் கையும் களவுமாக பிடித்துள்ளனர். ஜேம்ஸ், சுரேந்திரநாத் இருவரிடமிருந்தும் 10 கிராம் மெத்தம்பெட்டமைன் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
சினிமா பிரபலங்கள்: போலீஸ்காரர் ஜேம்ஸ் வீடு வடபழனியிலேயே உள்ளது.. தன்னுடைய நண்பர்கள் மற்றும் சில இளைஞர்கள் உதவியுடன் பல மாதங்களாகவே மெத்தம்பெட்டமைன் போதை பொருள் விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் அம்பலமானது. இறுதியில், காவலர் ஜேம்ஸ், சுரேந்திரநாத் இருவரும் கைதாகி உள்ளனர்.
இவர்கள் சினிமா பிரபலங்கள் யார் யாருக்கு போதைப்பொருளை சப்ளை செய்தார்கள்? என்ற தொடர் விசாரணை நடக்கிறது.. பிரபலங்களுக்கு போதை பொருளை விற்பனை செய்ததில் போலீஸ்காரரே ஈடுபட்டு சம்பவம் பெரும் அதிர்ச்சியை தலைநகரில் ஏற்படுததி வருகிறது.
நைஜீரியர்கள்: இப்படித்தான், சில மாதங்களுக்கு முன்பு, சென்னையில் கொக்கைன் போதைப்பொருள் விற்ற நைஜீரியர்கள் கைது செய்யப்பட்டார்கள்.. இவர்கள் தமிழ் படங்களில் துணை நடிகர்களாகவும் நடித்திருக்கிறார்கள்..
இதன்காரணமாக, சில சினிமா நடிகர், நடிகைகளுக்கும் போதைப் பொருள் விற்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்து, அவர்களிடம் விசாரணையும் மேற்கொண்டனர். இப்போது மீண்டும் சினிமா நடிகர், நடிகைகளுக்கு போதைப்பொருட்கள் சப்ளை செய்யப்படுவதாக, கைதானவர்கள் வாக்குமூலம் தந்துள்ளது, பரபரப்பை தந்து வருகிறது.
கடலோர எல்லைப் பகுதிகளில் இந்தியாவிற்குள் போதைப்பொருள் கொண்டு வருவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. எனவே, எல்லை கடற்படையினர் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அதிக அளவிலான போதைப்பொருள் கடத்தல் தடுக்கப்பட்டு வருகிறது.. அரசும் இதற்கான முழுவீச்சில் நடவடிக்கை மற்றும் கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு அறிவுரை வழங்கியுள்ளது. கடல்வழியாக ஓரளவு இதனை கட்டுப்படுத்திவிட்டால், போதைப்பொருளின் புழக்கம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications