யார் இந்த விஎஸ் பாபு.. ஒரு காலத்தில் கொளத்தூரில் ஸ்டாலினின் தளபதி.. வீழ்த்தியது எப்படி?
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது முதலே யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு மாற்றங்கள் நடந்துள்ளது. திமுகவின் கோட்டை என்று அழைக்கப்படும் சென்னையில் தவெக மிகப்பெரிய ஓட்டையை போட்டிருக்கிறது. முதல்வர் ஸ்டாலினே கொளத்தூரில் தோல்வியை சந்தித்துள்ளார். இங்கு தவெக சார்பாக போட்டியிட்ட வி.எஸ்.பாபுவிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தோல்வி அடைந்துள்ளார்.
தவெக வேட்பாளர் விஎஸ் பாபு கொளத்தூர் தொகுதியில் முன்னிலையில் இருப்பதை தேசிய ஊடகங்கள் தொடங்கி உள்ளூர் ஊடகங்கள் வரை ஆச்சரியமாக பார்க்கின்றன. ஆனால் விஎஸ் பாபு ஒன்றும் சாதாரண ஆள் இல்லை. அவர் ஒரு காலத்தில் திமுகவின் போர்ப்படை தளபதியாக இருந்தவர் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா.. ஆம்.. ஒரு காலத்தில் திமுகவின் வட சென்னை மாவட்ட செயலாளராக இருந்தவர் தான் வி.எஸ்.பாபு, தனது கட்டுப்பாட்டில் வட சென்னையை வைத்திருந்தவர் தான்.

கடந்த 2006ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பாக புரசைவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். இதனையடுத்து 2011ஆம் ஆண்டு புரசைவாக்கம் தொகுதி பிரிக்கப்பட்டு கொளத்தூர் தொகுதி உருவாக்கப்பட்டது. அப்போது முதல் அந்த தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டு வருகிறார். 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது அவர் வெற்றி பெற முக்கிய தளபதியாக விளங்கியவர் வி.எஸ்.பாபு தான்..'
ஆனால் அந்த தேர்தலில் சுமார் 2 ஆயிரத்திற்கு குறைவான வித்தியாசத்தில் தான் சைதை துரைசாமியை வீழ்த்தி இருந்தார் ஸ்டாலின். ஆனால் திமுகவின் மீது அப்போது கடும் அதிருப்தி இருந்தது. எல்லா பக்கமும் திமுக தோல்வியை தழுவிய போதும், ஸ்டாலின் ஜெயிப்பதற்கு வி.எஸ்.பாபு காரணமாக இருந்தார். எனினும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்த காரணத்தால் விஎஸ் பாபு மீது ஸ்டாலின் அதிருப்தியில் இருந்தார். இதனால் அதிமுகவில் இருந்து வந்த சேகர்பாபு கட்டுப்பாட்டில் வடசென்னை சென்றது.
வி.எஸ். பாபு ஓரங்கட்டப்பட்டார். இதனால் சிறிது காலம் அமைதியாக இருந்த வி.எஸ்.பாபு, அதிமுகவில் இணைந்தார். ஆனால் அங்கு வி.எஸ்.பாபுவிற்கு உரிய வாய்ப்பு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனிடையே தேர்தலுக்கு சில நாட்களே இருந்த நிலையில், திடீரென விஎஸ் பாபு விஜய்யை சந்தித்து தவெகவில் இணைந்தார். இதனையடுத்து தான் கொளத்தூர் தொகுதியின் வேட்பாளராக வி.எஸ்.பாபு போட்டியிட்டார். அவர் தான், திமுக தலைவரான ஸ்டாலினை தற்போது தோற்கடித்துள்ளார். வாக்கு வித்தியாசம் விரைவில் முழுமையாக தெரியும்.
இந்த விஎஸ் பாபு கடந்த ஏப்ரல் 30ம் தேதி விஜய்யின் நிலாங்கரை வீட்டின் முன்பு செய்த செயல் பலருக்கும் ஆச்சரியமாக இருந்திருக்கும். ஏனெனில் அவர் ஸ்டாலின் பாணியில் பினிஸ் என்பதை குறிக்கும் வகையில் கையை மறித்துக்காட்டினார். அவர் காட்டியதன் அர்த்தம் அப்போது பலருக்கும் புரிந்திருக்காது. இப்போது தான் பலருக்கும் புரிந்துள்ளது. அவர்பின்னுக்குத்தள்ளியது முதல்வர் ஸ்டாலினையே என்பது தான் ஹைலைட்..














Click it and Unblock the Notifications