சொத்து வரியை வாட்ஸ்அப் மூலம் செலுத்த சாட்பாட் சேவை.. பயனாளிகளுக்கு சென்னை மாநகராட்சி இன்ப அதிர்ச்சி
சென்னை: சென்னை மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்களின் அலைச்சலை குறைப்பதற்காக சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணங்களை வாட்ஸ்அப் மூலம் எளிதாகச் செலுத்தும் புதிய அதிநவீன டிஜிட்டல் சேவையைத் இப்போது அறிமுகப்படுத்தியுள்ளது. அலுவலகங்களுக்கு சென்று நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்கும் வகையில் பிரத்யேக வாட்ஸ்அப் சாட்பாட் எண் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.. இதனால் கிடைக்கும் வசதிகள், நன்மைகள் என்னென்ன தெரியுமா?
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களின் அடிப்படை கடமைகளையும், அரசு சார்ந்த கட்டணங்களையும் செலுத்துவதில் இனிமேல் எந்தவிதமான அலைச்சலும் இருக்கப்போவதில்லை.

காரணம், பொதுமக்கள் நீண்ட நேரமாக மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரிய அலுவலகங்களில் காத்திருந்து கட்டணங்களைச் செலுத்தும் முறைக்கு சென்னை மாநகராட்சி சூப்பராக ஒரு முற்றுப்புள்ளியை வைத்துள்ளது.. அதன்படி, மிக முக்கியமான மற்றும் அதிரடியான டிஜிட்டல் வசதியை மக்கள் பயன்பாட்டிற்கு இப்போது அறிமுகப்படுத்தியுள்ளது.
சொத்து வரி அவசியம்
பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, பொதுமக்கள் தங்களின் சொத்து வரி, குடிநீர் கட்டணம் மற்றும் கழிவுநீர் அகற்றல் கட்டணங்களை தங்களின் செல்போனில் இருக்கும் வாட்ஸ்அப் ஆப் மூலமாகவே மிக எளிமையாகச் செலுத்த முடியும்.
சென்னை மாநகராட்சி ஆணையாளர்
இதற்காக சென்னை மாநகராட்சி நிர்வாகம் ஸ்பெஷலான ஒரு புதிய வாட்ஸ்அப் சாட்பாட் நம்பரை (9445061913) செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. இந்த ஒரே ஒரு வாட்ஸ்அப் நம்பரை பயன்படுத்துவதன் மூலம், பொதுமக்கள் தங்களின் நிலுவைத் தொகைகளை தெரிந்து கொள்வதோடு, அரசுக்கான வரிகளையும் எந்தவிதமான சிரமமுமின்றி உடனுக்குடன் வீட்டில் இருந்துக்கொண்டே செலுத்திவிட முடியும்.
பொதுமக்களின் அன்றாடத் தேவைகளை எளிமையாக்கும் நோக்கில் ஏற்கனவே சென்னை மாநகராட்சி தனது இணையதளம் மற்றும் வாட்ஸ்அப் தளம் வாயிலாக பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை டவுன்லோடு செய்வது, சொத்து வரி செலுத்துவது மற்றும் பொது மக்கள் தங்களின் குறைகளை, புகார்களை பதிவு செய்து அதனைத் தொடர்ந்து கண்காணிப்பது இப்படி மொத்தம் 42 வகையான பல்வேறு சேவைகளை தொடர்ந்து வழங்கி வருகிறது.
வாட்ஸ்அப் சாட்பாட் நம்பர்
இந்த நிலையில், பொதுமக்களுக்கு மேலும் கூடுதல் வசதிகளைத் தடையின்றி வழங்கும் பொருட்டு, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் குடிநீர் மற்றும் கழிவுநீர்க் கட்டணங்களையும் இதே வாட்ஸ்அப் தளத்துடன் தற்போது முழுமையாக ஒருங்கிணைத்துள்ளனர்.
இந்த நவீன டிஜிட்டல் சேவை முறையானது, பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகங்களுக்குச் சென்று நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருப்பதை தவிர்க்கிறது. அதேசமயம் எந்த நேரத்திலும், அதாவது வாரத்தில் 24 மணி நேரமும், 7 நாட்களும் எப்போது வேண்டுமானாலும் இந்தச் சேவையை மக்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதால், பொதுமக்களுக்கு அலைச்சலும் இருக்காது. நேரமும், போக்குவரத்துக்கான செலவும் மிச்சமாகும்.
சென்னைவாசிகளுக்கு இன்ப அதிர்ச்சி
இந்த வாட்ஸ்அப் சேவை மூலம் பாதுகாப்பான முறையில் பணப் பரிவர்த்தனைகளை செய்ய முடியும்.. கட்டணம் செலுத்தியதற்கான அதிகாரப்பூர்வ ரசீதுகளையும் உடனே டவுன்லோடு செய்து கொள்ளும் அதிநவீன வசதியும் இதில் செய்யப்பட்டுள்ளது.
எனவே சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் அனைத்து சொத்து உரிமையாளர்களும் மற்றும் பொதுமக்களும் மாநகராட்சி நிர்வாகம் வழங்கியுள்ள இந்த முழுநேர வாட்ஸ்அப் வசதியைப் பெருமளவில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், தங்களின் சொத்து வரி மற்றும் குடிநீர் வாரியக் கட்டணங்களை தாமதமுமின்றி உரியக் காலத்திற்குள் செலுத்தி மாநகராட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி ஆணையாளர் அதிகாரப்பூர்வ செய்தி வெளியிட்டு, அன்பான வேண்டுகோளையும் விடுத்துள்ளார்.
டிஜிட்டல் ஆளுமையை நோக்கி சென்னை மாநகராட்சி எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications