சட்லஜ் ஆற்றில் மாயமான சைதை துரைசாமியின் மகன்.. ஐடி ரெய்டு, இயக்குநர்! யார் இந்த வெற்றி துரைசாமி?
சென்னை: சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி சென்ற கார் இமாச்சல பிரதேசத்தில் சட்லஜ் ஆற்றில் மூழ்கி அவர் மாயமாகிவிட்டார் என்ற நிலையில் அவர் யார் என்பது குறித்து இணையத்தில் தேடுதல்கள் அதிகரித்துள்ளன.
சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி இமாச்சல் பிரதேசத்திலற்கு தனது நண்பர்களுடன் சுற்றுலா சென்றார். அங்கு கஷங் நாலா பகுதியில் உள்ள சட்லஜ் நதிக்கரையின் அருகே அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் வெற்றி உள்பட 3 பேர் காரில் பயணம் செய்தனர்.

அப்போது இவர்களுடைய கார் நேற்று மாலை விபத்துக்குள்ளாகி சட்லஜ் நதியில் விழுந்துவிட்டது. ஓட்டுநர் சடலமாக மீட்கப்பட்டார். இந்த காரில் பயணம் செய்த திருப்பூரை சேர்ந்த கோபிநாத் என்பவர் காயங்களுடன் மீட்கப்பட்டார்.
ஆனால் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியை காணவில்லை. இதையடுத்து இந்த விபத்து குறித்து இமாச்சல பிரதேச போலீஸார் சென்னை போலீஸாருக்கு தகவல் அளித்தனர். இந்த நிலையில் இமாச்சல் பிரதேச போலீஸார் வெற்றியை தேடி வருகிறார்கள்.
யார் இந்த வெற்றி?: எம்ஜிஆரின் அபிமானி, அதிமுகவில் முக்கிய நிர்வாகியாக இருந்தவர். சென்னைக்கு 48ஆவது மேயராக சைதை துரைசாமி 2011 ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். அதிமுகவின் முதல் சென்னை மேயர் சைதை துரைசாமி என்ற பெருமையை பெற்றார்.
இவர் மனிதநேயம் ஐஏஎஸ் அகாதமி என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இந்த அகாதமியில் ஏராளமான மாணவர்களுக்கு இலவசமாக குடிமைப்பணி தேர்வுகளுக்கான பயிற்சிகளை நடத்தி வருகிறார். இவரது பயிற்சி வகுப்பில் டிஎன்பிஎஸ்சிக்கும் பயிற்சி கொடுக்கப்படுகிறது. மேலும் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வந்து ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அதிகாரிகளாகும் கனவில் நிறைய பேர் வருகிறார்கள்.
அவர்களுக்கு இலவசமாக தங்குமிடம், உணவையும் சைதை துரைசாமி வழங்கி பயிற்சியையும் இலவசமாகவே வழங்கி வருகிறார். இவர் முன்னாள் எம்எல்ஏவாக இருந்தார். எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த நிலையில் அவர் 2011 ஆம் ஆண்டு கொளத்தூர் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார்.
அந்த தேர்தலில் அவர் தோல்வியுற்றார். இதையடுத்துதான் அவர் மேயர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு கொடுத்தார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. சைதை துரைசாமிக்கு மல்லிகா என்ற மனைவியும் வெற்றி துரைசாமி என்ற மகனும் உள்ளனர்.
2012 ஆம் ஆண்டு வெற்றிக்கு திருமணம் நடந்தது. இநத் திருமணத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டார். அது போல் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் கலந்து கொண்டார். 2016ஆம் ஆண்டு வருமான வரித் துறை 40 இடங்களில் சோதனை நடத்தியதில் வெற்றியின் வீடும் ஒன்று. அவர் வசிக்கும் சிஐடி நகர் வீடு, தாம்பரத்தில் உள்ள செம்பாக்கம் பண்ணை வீட்டிலும் ரெய்டு நடந்தது.
வெற்றி என்றாவது ஒரு நாள் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் கொங்கு மண்டலத்தில் வெள்ளக்கோவிலில் எடுக்கப்பட்டது. இதில் விதார்த், ரம்யா நம்பீஸன் ஆகியோர் நடித்திருந்தனர். வெற்றி இயக்கிய படம் 2021 ஆம் ஆண்டு வெளியானது. அவர் தனது தந்தையுடன் ஐஏஎஸ் அகாதெமியையும் கவனித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications