விஜய் பவுன்சர்கள் தூக்கி வீசிய இளைஞர் உண்மையில் யார்? அடுத்தடுத்து வெளியாகும் வீடியோக்கள்
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு மதுரையில் நடைபெற்றது. இதில் ரேம்ப் வாக் சென்றபோது விஜய்யை பார்க்க சென்ற சரத்குமார் என்ற தொண்டரை அவரது பவுன்சர்கள் தூக்கி கீழே வீசியதாகவும் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் விஜய்யின் பவுன்சர்கள் தூக்கி வீசியது அந்த நபரே கிடையாது என தவெகவினர் வீடியோ வெளியிட்டு காண்பித்துள்ளனர். உண்மையில் விஜய்யின் பவுன்சர்கள் என்னை தான் தூக்கி வீசினர் என்றும், எனக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் விழுப்புரத்தை சேர்ந்த அஜய் என்ற இளைஞர் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு கடந்த 21 ஆம் தேதி மதுரை பாரபத்தியில் நடந்தது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டனர். விக்கிரவாண்டியில் நடந்த மாநாட்டை போலவே மதுரை மாநாட்டிலும் விஜய் ரேம்ப் வாக் சென்று வர 350 மீட்டர் தொலைவுக்கு ரேம்ப் வாக் மேடை அமைக்கப்பட்டு இருந்தது.

விஜய்யின் தவெக மதுரை மாநாடு
விஜய் இருபுறமும் கடலென கூடியிருந்த தொண்டர்களை நோக்கி கையசைத்தபடியே ரேம்ப் வாக் சென்றார். அப்போது தொண்டர்கள் தவெக கொடி துண்டினை வீசினர். இதனை ரேம்ப் வாக்கில் நடந்து சென்றபடியே கேட்ச் பிடித்து தோளில் அணிந்துகொண்டார். தொண்டர்களும் உற்சாகத்துடன் விஜய்யை நோக்கி ஆரவாரம் செய்தனர். சில இளைஞர்கள் ஆர்வம் மிகுதியில் ரேம்ப் வாக் மேடையில் ஏறினர்.
ரேம்ப் வாக் மேடைக்கும் தொண்டர்கள் அமரும் இடத்திற்கும் இடையே 10 அடி நீளத்திற்கு இடைவெளி விட்டும், தொண்டர்கள் யாரும் ஏறாதபடியும் 10 அடி உயரத்திற்கு கம்பியும் போடப்பட்டு இருந்தது. போதாக்குறைக்கு இருபுறமும் தொண்டர்கள் வந்துவிடாதபடி இருக்க கிரீசும் தடவப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. எனினும் இதையெல்லாம் தாண்டி விஜய்யை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இளைஞர்கள் பலர் ரேம்ப் வாக் மேடை ஏறி விஜய்க்கு துண்டு அணிவிக்கவும், மாலை அணிவிக்கவும், செல்ஃபி எடுக்கவும் ஏறினர்.
விஜய் பவுன்சர்கள் மீது வழக்கு பதிவு
அப்போது விஜய்யை நெருங்க விடாமல் பவுன்சர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். இது தொடர்பான வீடியோ காட்சிகளும் இணையத்தில் பரவி வந்தன. இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்டம் பெரியம்மாபாளையத்தை சேர்ந்த சரத்குமார் என்ற இளைஞர் தான் விஜய்யை சந்திக்க சென்றபோது என்னை அவரது பவுன்சர் தூக்கி கீழே வீசியதாக பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அவரது தாயும் உடன் சென்று புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து இந்த வழக்கானது மதுரை மாவட்ட காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இதற்கிடையே விஜய்யின் பவுன்சர்கள் என்னை தான் தள்ளிவிட்டனர் என்றும், சமூக வலைத்தளத்தில் பரவும் வீடியோவில் இருப்பது நான் தான் என்றும் அஜய் என்ற இளைஞர் வீடியோ வெளியிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோவையும் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளதாக தெரிவித்தார்.
சரத்குமார் சொல்வதில் உண்மையில்லை
இதேபோன்று பெரம்பலூர் மாவட்ட தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர் சிவக்குமார் கூறுகையில், "சரத்குமார் என்ற இளைஞர் விஜய்யின் பவுசன்ர்கள் மீது புகார் கொடுத்துள்ளார். ஆனால் அதில் உண்மையில்லை.. அவர் சொல்வது உண்மையில்லை. உண்மையிலேயே பவுன்சர் தூக்கி வீசியதாக கூறப்படும் இளைஞர் விழுப்புரத்தை சேர்ந்த அஜய் என்பவர் தான். அவரே இது பற்றி வீடியோவும் வெளியிட்டுள்ளார். அதுமட்டும் இல்லை அஜய்யை அப்படியே பவுன்சர்கள் கீழே தூக்கி போடவில்லை.
பத்திரமாக கீழே இறக்கி விட்டனர்
அஜய்யை பவுன்சர்கள் கீழே தள்ளி விட முயன்றபோது அவர் கம்பியை கெட்டியாக பிடித்துக்கொண்டார். அப்போது இதை பார்த்த விஜய், ஏன்.. ஏன் இப்படி பண்றீங்க.. பொறுமை .. தள்ளி வாங்க.. தள்ளி வாங்க என பவுன்சர்களை அதட்டிய வீடியோ காட்சிகளையும் வெளியிட்டார். மேலும் அந்த வீடியோவில் அஜய் கீழே விழவில்லை. கீழே நின்ற விஜய்யின் பவுன்சர்கள் அவரை பத்திரமாக கீழே இறக்கி விட்டனர். அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை" என்று தெரிவித்தார்.
வீடியோ வெளியிட்ட தவெகவினர்
Here's the clear evidence!!👍 pic.twitter.com/2cY1X9MWod
— JEGADESH TVK (@JegadeshTVK) August 28, 2025
தவெக தொண்டர்களும் இது தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். அதாவது ரேம்ப் வாக் அருகே நின்ற மற்ற தொண்டர்கள் எடுத்த வீடியோவில் பவுன்சர்கள் தள்ளிவிட்டதாக கூறப்படும் இளைஞர் அஜய் தான் என்பது தெளிவாக தெரிகிறது. ரேம்ப் வாக் அருகே உள்ள பாதையில் அவர் நடந்து வரும் வீடியோவையும் வெளியிட்டுள்ளனர்.
கீழே விழுந்த உண்மையான பையனின் தாய் ஆவேசம் 👌
— Prasanna OG (@OGprasanna) August 27, 2025
போலி வழக்கு கொடுத்த தாய் , மகன் மீது கடும தாக்கு ! #TVKpic.twitter.com/7EX9JedjH1
இதனால் சரத்குமார் என்ற இளைஞர் யாருடைய தூண்டுதலின் பேரிலேயே வீடியோவை வெளியிட்டுள்ளதாக தவெக தொண்டர்கள் தெரிவித்து அதற்கான ஆதாரங்களாக வீடியோவையும் பதிவேற்றி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications