கொடுத்தால் யார் வேண்டாம்னு சொல்வாங்க.. துணை முதல்வர் கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் பரபர பதில்
சென்னை: துணை முதல்வர் பதவி என்பது கூட்டாக முடிவெடுக்க வேண்டிய விவகாரம் எனவும் கொடுத்தால் யார்தான் வேண்டாம் என்று சொல்வார்கள் என்றும் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்க அமைச்சர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், துரைமுருகன் இவ்வாறு கூறியுள்ளார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்படலாம் என்ற ஒரு பேச்சு மீண்டும் எழுந்துள்ளது. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவுக்குச் செல்ல இருக்கிறார். முதலில் இம்மாதம் 22 ஆம் தேதி அவர் அமெரிக்காவுக்குச் செல்ல உள்ளதாகக் கூறப்பட்டது. பின்னர், சில காரணங்களால் அந்த பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் சுதந்திர தின கொண்டாட்டத்தை எல்லாம் முடித்துவிட்டு அடுத்த மாதம் அமெரிக்காவுக்குச் செல்ல உள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக ஆகஸ்டு 22 ஆம் தேதி முதல்வரின் அமெரிக்கா பயணம் அமையலாம் எனக் கூறப்படுகிறது. முதல்வரின் வெளிநாட்டு பயணத்திற்கு முன்பாக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படலாம் என்றும் அப்போது உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பொறுப்பு கொடுக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
நேற்று நடைபெற்ற இளைஞரணியின் 45-வது ஆண்டு துவக்க விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "எந்த பொறுப்புக்கு சென்றாலும் இளைஞரணி செயலாளர் என்கிற பொறுப்புதான் மனதிற்கு மிகவும் நெருங்கிய பொறுப்பு என்றும் பொறுப்புகள் மாறுவது குறித்து முதல்வர்தான் முடிவு செய்வார்" என்று கூறினார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் இந்த பேட்டி, அமைச்சரவையில் விரைவில் மாற்றம் இருக்கும் என்பதை சூசகமாக குறிப்பிடுவது போல இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது. இந்த நிலையில், தமிழக நீர்வளத்துறை அமைச்சரும் திமுகவின் பொதுச்செயலாளருமான துரைமுருகனிடம் இன்று துணை முதல்வர் விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த துரைமுருகன், "கொடுத்தால் யார் வேண்டாம் என்று சொல்வார்கள்" என்று கூறினார். இது தொடர்பாக துரைமுருகன் கூறியதாவது:- துணை முதல்வர் பதவி கொடுத்தால் யார்தான் வேண்டாம் என்று சொல்வார்கள். தமிழகத்தில் நடப்பது கூட்டு மந்திரி சபை. தலைவர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன். துணை முதல்வர் பதவி என்பது கூட்டாக முடிவெடுக்க வேண்டிய விவகாரம்" இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications