50,000 மாணவர்கள் பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுதாதது ஏன்? அரசு பள்ளி ஆசிரியரின் வெளிப்படையான பதிவு
சென்னை: 50,000 மாணவர்கள் பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுதாதது ஏன் என்பது குறித்து அரசு பள்ளி ஆசிரியர் செல்வம் என்பவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவு சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
மார்ச் 13 ம் தேதி பிளஸ் டூ பொதுத்தேர்வு தொடங்கியது. முதல்நாள் மொழிப்பாட தேர்வு நடந்தது. இந்த தேர்வை 50,000 மாணவர்கள் எழுதவில்லை. பெரும்பாலும் தமிழ்தான் மொழிப்பாடமாக உள்ளது. தமிழ்வழிக்கல்வி தான் பிரதானமாக உள்ளது. எனவே தமிழ் தேர்வை எழுத மாணவர்கள் ஆர்வம் காட்டாதது குறித்து அரசியல் கட்சியினர் கேள்வி எழுப்பினார்கள். இதையடுத்து இந்த விவகாரம் அரசியலாக மாறியது. தமிழக அரசு இதுகுறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
50,000 மாணவர்கள் பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுதாதது தொடர்பாக, வேதாரண்யத்தைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் செல்வம் தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

அரசு பள்ளி ஆசிரியர்
அதில் அவர் கூறியுள்ளதாவது: 50,000 மாணவர்கள் பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுதவில்லை.. உண்மை நிலவரம் என்ன? 'மாணவர்கள் முன்பெல்லாம் பள்ளிக்கு வரவில்லை என்றால்.அவர்கள் வேலைக்கு சென்று விட்டாலோ அல்லது பெண்கள் திருமணம் ஆகி விட்டாலோ, இனி வர மாட்டார்கள் என்று தெரிந்து விட்டால் வருகை பதிவேட்டில் பெயரை நீக்கிவிடுவார்கள்.

வட்டார வளமை
இப்போது EMIS இணையதளம் வந்த பிறகு மாணவர்கள் பள்ளிக்கு எத்தனை மாதங்கள் வரவில்லை என்றாலும் கூட அவர்கள் பெயரை நீக்க முடியாது. கல்வித்துறை கண்காணித்து அந்தந்த பள்ளிகளுக்கு தகவல் தரும் இடைநின்ற மாணவர்களை வட்டார வளமைய உதவியுடன் தேடிக் கண்டுபிடித்து அறிவுரை வழங்கி பள்ளியில் சேர்க்க வேண்டும்.

ஆசிரியர் செல்வம்
11 வகுப்பிற்கே வராத மாணவர்கள் பெயர்கள்கூட 12ஆம் வகுப்பிலும் சேர்க்கப்பட்டு இடைநிற்றல் தடுக்கப்பட்டது.இதில் குறிப்பிட்ட சதவீத மாணவர்கள் தேர்வு பயத்தால் அல்லது கற்றல் இடைவெளி காரணமாக தேர்வு எழுதவில்லை. இதுதான் தேர்வு எழுதாத மாணவர்கள் அதிகமாக இருப்பதற்கு காரணம் என்பது அரசுப்பள்ளி ஆசிரியராக என் கருத்து.இந்த மாணவர்களை கண்டுகொள்ளாமல் விட்டிருந்தால் முன்பே கற்றலை நிறுத்தி இருப்பார்கள் .இந்த தேர்வு எழுதாத மாணவர்களை கண்டறிவது எளிது.மீண்டும் தேர்வெழுத வைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்..." இவ்வாறு அரசு பள்ளி ஆசிரியர் செல்வம் கூறினார்.

மாற்றுச் சான்று
இதனிடையே ட்விட்டர்வாசி ஒருவர் கூறுகையில், நேற்று என் உறவில் ஆசிரியர் ஒருவருடன் உரையாடிய போது அவர் சொன்னது - இந்த இடைநிற்றல் ஒரு பெரும் பிரச்சினை, சமாளிக்க இயலாத வகையில் சென்று கொண்டிருக்கிறது என்றார். அதாவது மாற்றுச் சான்று வேண்டி பெற்றோர் விண்ணப்பித்தால் ஒழிய அவர்கள் பதிவேட்டில் தொடர்வார்கள் என்றார்.

மாற்றுக்கல்வி
இன்னொரு நெட்டிசன் இந்த பிரச்சனை குறித்து கூறும் போது, "மாற்று கல்வியின் அவசியத்தை இது உணர்த்துகிறது கண்டிப்பாக இந்த மாணவர்களை கண்டறிந்து அவர்களை படிப்பை தொடரவோ இல்லை தொழிற்கல்வி படிக்கவோ விவசாயம் என்றால் அதற்கான பயிற்சியோ எதுவானாலும் அரசு உன்னுடன் இருக்கிறது என்பதை உணர்த்த வேண்டும் வளமான நாட்டின் எதிர்காலத்திற்கு அவசியம்" என்றார்.

சவாலான பணி
மூன்றாவதாக ஒரு நெட்டிசன் கூறும் போது, "அரசுப் பள்ளி ஆசிரியர் பணி என்பது மிகவும் கடினமான பணி சவாலான பணி. நாளுக்கு நாள் புதுப்புது பிரச்சினைகள் வந்து கொண்டுள்ளது. பெரும்பாலான அரசுப் பள்ளி மாணவர்கள் இல்லங்களில் வறுமை,கற்றல் சூழல் இல்லாமை,கடன் தொல்லை,
குடிப்பழக்கம், அடிப்படை வசதி குறைவு. வீட்டில் சிறிய சந்தேகம் கூட நிவர்த்தி செய்ய முடியாத சூழல். குடும்பப் பிரச்சினைகள் இவை அத்தனையையும் லாவகமாக கையாள வேண்டும் ஆசிரியர்கள். தற்போது கஞ்சா, குட்கா,....போன்ற போதை பொருட்கள். ஜாதி பிரச்சினைகள்
மேலும் பல.... இவையெல்லாம் சாதாரண விஷயமல்ல. அனைத்து ஆசிரியர் சமூகத்திற்கும் என் நன்றி என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications