2 பிளாக்.. இதயத்தில் ‛ஸ்டென்ட்’ வைத்தும் மாரிமுத்து எடுத்த ரிஸ்க்! சிகிச்சையளித்த டாக்டர் ஷாக் தகவல்
சென்னை: சினிமா இயக்குனரும், நடிகருமான மாரிமுத்து நேற்று மாரடைப்பால் காலமானார். இந்நிலையில் தான் மாரிமுத்துவின் மரணத்துக்கான காரணம் மற்றும் அவர் செய்த தவறு என்ன? என்பது பற்றி கடைசி நிமிடங்களில் அவருக்கு அவசர சிகிச்சையளித்த டாக்டர் அனந்தகுமார் விளக்கியுள்ளார்.
தமிழ் சினிமாவில் இயக்குனராக இருந்தவர் மாரிமுத்து. இவர் குணச்சித்திர வேடங்கள் ஏற்றும் திரைப்படங்களில் நடித்து வந்தார். இதற்கிடையே தான் சன்டிவியில் வெளியான 'எதிர்நீச்சல்' சீரியலில் நடித்து அவர் மிகவும் பிரபலமடைந்தார்.

இந்நிலையில் தான் நேற்று ‛எதிர்நீச்சல்' சீரியலுக்காக சென்னையில் மாரிமுத்து டப்பிங் பேசினார். அப்போது அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் அங்கிருந்து காரில் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால் அதற்குள் அவரது உயிர் பிரிந்தது.
இதையடுத்து சென்னையில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு திரை பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர். அதன்பிறகு சொந்த ஊரான தேனி மாவட்டம் வருஷநாடு அருகே உள்ள பசுமலை தேரியில் இன்று பொதுமக்களின் அஞ்சலிக்கு பிறகு அவரது உடலுக்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் தான் மாரிமுத்துவுக்கு அவசர சிகிச்சையளித்த டாக்டர் அனந்தகுமார் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
உடலில் அசகவுரியத்தை உணர்ந்த பிறகு மாரிமுத்து கார் ஓட்டியிருக்க கூடாது. கார் ஓட்டியது என்பது அவருக்கான ஒரு ஸ்ட்ரெஸ் தான். அதனை அவர் தவிர்த்து இருக்கலாம். இனிமேல் யாராவது நெஞ்சுவலி போன்ற பிரச்சனைகளை சந்தித்தால் உடனடியாக ஒருவரை உதவிக்கு அழைத்து கொள்ள வேண்டும். 108 ஆம்புலன்ஸை அழைத்து அருகே உள்ள மருத்துவமனைக்கு செல்வது தான் நல்லது.
மேலும் மாரிமுத்து சர்க்கரை வியாதிக்கு மாத்திரை எடுத்து கொண்டு வந்துள்ளார். மேலும் இதயத்தில் 2 நாளங்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த 2 அடைப்புகளுக்கும் ஸ்டென்ட் போட்டுள்ளனர். அதன்பிறகு அதற்கான மாத்திரை, மருந்துகள் எடுத்து கொண்டு வந்துள்ளார். தற்போது டப்பிங் பேசிய இடத்தில் இருந்து அவர் கார் ஓட்டி மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
இந்த வேளையில் அவரது உடல் சில்லென்று இருந்தது. அதோடு உடல் வியர்த்துபோய் இருந்தது. நெஞ்சு வலியால் நெஞ்சை பிடித்து கொண்டு இறங்கினார். இதை பார்த்ததும் மருத்துவமனை ஊழியர் சென்றபோது மாரிமுத்து அவர் மீது சாய்ந்துவிட்டார். ஏற்கனவே இதய கோளாறு இருந்தது மற்றும் இப்போது ஸ்ட்ரெயின் செய்ததால் இந்த பிரச்சனை வந்திருக்க வாய்ப்பு இருப்பதாக நான் நினைக்கிறேன்.
இங்கு வரும்போதே அவருடைய பல்ஸ் எல்லாம் குறைந்து போய் இருந்தது. அவரை காப்பாற்றும் நோக்கத்தில் சிபிஆர் சிகிச்சை அளிக்கப்பட்டது. மசாஜ், வென்ட்டிலேசன், உயிர் காக்கும் மருந்துகள் வழங்கப்பட்டது. 15 முதல் 20 நிமிடம் சிகிச்சை வழங்கி முயற்சித்தோம். அதன்பிறகு தான் அவர் இறந்ததாக அறிவித்தோம்'' என்றார்.












Click it and Unblock the Notifications