உதயநிதி ஸ்டாலினை திடீரென சந்தித்த வடிவேலு.. இதுதான் காரணமா?
சென்னை : திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினை, நடிகர் வடிவேலு செவ்வாய்க்கிழமை திடீரென சந்தித்துப் பேசினார். உதயநிதிக்கு பூங்கொத்துக் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இந்தப் படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்படுகிறது.
Recommended Video
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களில் மிகவும் புகழ்பெற்ற நடிகராக இருப்பவர் வடிவேலு. இவர் 10 ஆண்டுகளாக சரிவர படங்களில் நடிக்கவில்லை. காவலன், மெர்சல், கத்திசண்டை உள்பட வெகுசில படங்களிலேயே நடித்தார்.
குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக எந்த படத்திலும் வடிவேலு நடிக்கவில்லை. அதற்கு காரணம் இம்சை அரசன் 23ம் புலிகேசி இரண்டாம் பாக விவகாரம் தொடர்பாக இயக்குனர் ஷங்கர் கொடுத்த புகார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடிகர் வடிவேலு மீது இயக்குநரும், 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' படத்தின் தயாரிப்பாளருமான ஷங்கர் கொடுத்திருந்த புகாரின் பேரில் , வடிவேலு இனி சினிமா படங்களில் நடிக்கவே முடியாது என்பதை குறிக்கும் 'ரெட் கார்ட்' கொடுக்கப்பட்டு இருந்தது.

வடிவேலுவுக்கு தடையில்லை
இதனிடையே சில ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வடிவேலுவுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்ககப்பட்டுள்ளது. வடிவேலு மற்றும் லைகா நிறுவனத்திற்கு இடையே சமாதானம் செய்யப்பட்டதால் தமிழ் திரைப்படங்களில் நடிக்க இனி எந்த தடையும் இல்லை. வலுவேலு மீதான 'ரெட் கார்ட்' நீக்கம் செய்யப்பட்டது.

எண்டே கிடையாது
இதனால் மிகுந்த உற்சாகத்தில் உள்ள வடிவேலு , மீண்டும் அரிதாரம் பூச தயாராகி வருகிறார். சுராஜ் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் புதிய திரைப்படத்தில் வடிவேலு நடிக்கிறார். இது தொடர்பாக அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய வடிவேலு, தமிழக முதல்வர் ஸ்டாலினை பாத்துட்டு வந்ததுல இருந்து எனக்கு நேரம் ரொம்ப நல்லாருக்கிறது. தமிழக மக்களுக்கும் நேரம் நல்லாருக்கிறது. எனக்கு எண்டே கிடையாது என்று பழைய பாணியில் பேசி அதிர வைத்தார்.

டைட்டில் போனது
நாய் சேகர் படத்தின் டைட்டில் தனக்கு கிடைக்கும் என்று வெகுவாக நம்பிக்கொண்டிருந்த வடிவேலுவுக்கு அந்த டைட்டில் கிடைக்கவில்லை. நடிகர் சதீஷை வைத்து நாய் சேகர் என்ற பெயரில் ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை தயாரித்து வருவதால் அந்த பட தலைப்பு வடிவேலுவுக்கு கிடைக்கவில்லை. இந்த வடிவேலு நடிக்கும் புதிய படத்திற்கு வேறு தலைப்பு யோசிக்கப்பட்டு வருகிறது.

இணைந்து நடிப்பார்களா
மீண்டும் நடிப்புக்கு ரீ என்ட்ரி கொடுத்துள்ள நடிகர் வடிவேலு திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து பூங்கொத்துக் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட உதயநிதியிடம் சிறிது நேரம் பேசிவிட்டு வந்தார். திடீரென சந்தித்ததற்கு காரணம் மரியாதை நிமித்தமான சந்திப்பு என்கிறார்கள். தீவிர அரசியலில் இறங்கிவிட்ட உதயநிதி சினிமாவிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். எனவே உதயநிதியின் புதிய படங்களில் வடிவேலு வந்தாலும் ஆச்சயர்ம் இல்லை என்கிறது கோலிவுட் வட்டாரம்.


Click it and Unblock the Notifications
