இதுகூட தெரியாதா? கட்சி தொடங்கியதும் நடிகர் விஜயை விளாசும் நெட்டிசன்கள்.. பின்னணியில் 2 காரணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய் புதிதாக அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார். ‛தமிழக வெற்றி கழகம்' என அவர் தனது கட்சிக்கு பெயரிட்டுள்ள நிலையில் அவருக்கு தற்போது ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வலைதளங்களில் 2 முக்கிய விஷயங்களை குறிப்பிட்டு அவர்கள் நடிகர் விஜயை கடுமையாக விமர்சனம் செய்து வருவது பரபரப்பை கிளப்பி உள்ளது.

தமிழ்நாட்டில் அரசியலுக்கும், திரைப்பட துறைக்கும் இடையேயான பந்தம் என்பது மிகவும் நெருக்கமானதாகும். நடிகர் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் நடிகர், நடிகராக இருந்து அரசியலில் நுழைந்து அதிமுகவில் முதல் அமைச்சர்களாகினர். திமுக தலைவராகவும், முன்னாள் முதல்வராகவும் இருந்த கருணாநிதி திரைப்பட துறையில் கதை, வசனம் எழுதி தான் அரசியலிலும் ஜொலித்தார் என்பதை மறக்க முடியாது.

Why Actor Vijay criticized by netizens after he launched political party Tamilaga Vettri Kazhagam? 2 reasons here

இதுதவிர நடிகர் விஜயகாந்த் தேமுதிக கட்சியை தொடங்கி எதிர்க்கட்சி தலைவர் பதவியை எட்டிப்பிடித்தார். நடிகர் சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்கி எம்எல்ஏவாகி உள்ளார். கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கி உள்ளார். நடிகர் நெப்போலியன் எம்பியாகி மத்திய அமைச்சராக இருந்தார். இயக்குனராக இருந்த சீமான் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு அரசியலில் செயல்பட்டு வருகிறார்.

இதுதவிர பல நடிகர் நடிகைகள் பல்வேறு கட்சிகளில் செயல்பட்டு வருகின்றனர். அந்த வரிசையில் தான் தற்போது நடிகர் விஜய் அரசியலுக்கு என்ட்ரி கொடுத்துள்ளார். நடிகர் விஜய் அரசியலுக்குள் நுழைவார் என தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் இன்று அவர் தனது கட்சியின் பெயரை அறிவித்துள்ளார். ‛தமிழக வெற்றி கழகம்' (Tamilaga Vettri Kazhagam) என நடிகர் விஜய் தனது கட்சிக்கு பெயர் சூட்டியுள்ளார்.

இந்த அறிவிப்பை நடிகர் விஜய் இன்று தனது கட்சியின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார். இதனால் நடிகர் விஜயின் ரசிகர்கள், விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நடிகர் விஜயின் இந்த அறிவிப்பை தொடர்ந்து அவர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

இத்தகைய சூழலில் தான் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கிய உடன் அவருக்கு எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. அவரை ஒரு தரப்பினர் விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர். வலைதளங்களில் நடிகர் விஜய்க்கு எதிராக அவர்கள் கருத்துகளை பதிவிட தொடங்கி உள்ளனர். நடிகர் விஜயை அவர்கள் விமர்சனம் செய்ய 2 முக்கிய காரணங்கள் உள்ளன.

இதில் முதல் காரணம் என்பது அவரது கட்சியின் பெயரில் உள்ள ‛தமிழக' என்ற வார்த்தையாகும். அதாவது நம் மாநிலம் தமிழ்நாடு என அழைக்கப்பட்டு வருகிறது. ஆனால் சமீபத்தில் ஆளுநர் ஆர்என் ரவி தமிழ்நாட்டை தமிழகம் என அழைப்பதே பொருத்தமானதாக இருக்கும் என கூறினார். இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

தமிழ்நாட்டின் பெயரை தமிழகம் என ஆளுநர் மாற்ற வேண்டும் எனக்கூறுவதாக அவர்கள் விமர்சனம் செய்தனர். இத்தகைய சூழலில் தான் ஆளுநர் பாணியில் நடிகர் விஜய் தமிழ்நாடு என்பதற்கு பதில் தமிழக வெற்றி கழகம் என்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளதாக கூறி நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த வரிசையில் 2வது காரணம் என்பது ‛தமிழக வெற்றி கழகம்' என்ற விஜயின் கட்சியின் பெயரில் இலக்கண பிழை உள்ளதாக நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர். உலகில் பழமையான மொழியான தமிழுக்கு இலக்கணம் என்பது உள்ளது. இலக்கணப்படி பார்த்தால் ‛தமிழக வெற்றி கழகம்' என்ற கட்சியின் பெயர் என்பது ‛தமிழக வெற்றிக் கழகம்' என வந்திருக்க வேண்டும்.

அதாவது வெற்றி என்ற வார்த்தையின் இறுதியில் வல்லின எழுத்தான ‛க' என்பது ஒற்றுடன் இடம்பெற்றிருக்க வேண்டும். ஆனால் நடிகர் விஜயின் அரசியல் கட்சியின் பெயரில் ‛வெற்றிக்' என்பதற்கு பதில் ‛வெற்றி' என்றே உள்ளது. இதனால் நெட்டிசன்கள் நடிகர் விஜயை விமர்சனம் செய்து வருகின்றனர். இப்படி நடிகர் விஜயை விமர்சிக்கும் நபர்களுக்கு நடிகர் விஜயின் ரசிகர்கள் மற்றும் அவரது இயக்கத்தின் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால் இந்த விவகாரம் தற்போது வலைதளங்களில் விவாதமாக மாறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+