"அது மட்டும்தான் காரணமா?".. கையை பிடித்துக் கொண்ட ஸ்டாலின்.. நெகிழந்த "கேப்டன்".. என்ன பின்னணி?
சென்னை: இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரித்தார். இந்த திடீர் சந்திப்பு பல கேள்விகளை எழுப்பி உள்ளது.
Recommended Video
முதல்வர் ஸ்டாலின் இன்று காலை தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் இல்லத்திற்கே சென்று அவருடன் சந்திப்பு நடத்தினார். உடல்நலக்குறைவு காரணமாக அரசியலில் ஆக்டிவாக இல்லாத விஜயகாந்தின் உடல்நிலை குறித்து ஸ்டாலின் இன்று நேரில் கேட்டறிந்தார்.
இந்த சந்திப்பில் கொரோனா நிவாரண நிதி ரூ.10 லட்சத்தை முதல்வரிடம் விஜயகாந்த் வழங்கினார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன். எம்பி ஆ. ராசா ஆகியோர் இந்த சந்திப்பில் உடன் இருந்தனர்.

சந்திப்பு
இந்த சந்திப்பில் முதல்வர் ஸ்டாலினை பார்த்ததும் விஜயகாந்த், அவரின் கைகளை இறுக்கமாக பற்றிக்கொண்டார். விஜயகாந்த் அருகில் அமர்ந்து ஸ்டாலின் அவரின் உடல்நிலை குறித்து கனிவாக கேட்டறிந்தார். கடந்த லோக்சபா தேர்தலின் போது இரண்டு கட்சிக்கும் இடையில் சில கசப்பான சம்பவங்கள் நடந்த நிலையில், முதல்வரின் இந்த சந்திப்பு அதை சரி செய்யும் வகையில் இருந்தது.

சட்டசபை
சட்டசபை தேர்தலுக்கு பின்பாக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினும் விஜயகாந்தை நேரில் சந்தித்து பேசியது குறிப்பிடதக்கது. இந்த நிலையில் இன்று ஸ்டாலின் - விஜயகாந்த் இடையே நடந்த சந்திப்பு அதிக முக்கியத்துவம் பெறுகிறது. மரியாதை நிமித்த சந்திப்பு என்று செய்திகள் வெளியானாலும் இதற்கு பின் அது மட்டும் காரணம் இல்லை, வேறு காரணங்களும் இருப்பதாக கூறப்படுகிறது.

உள்ளாட்சி
அதன்படி உள்ளாட்சி தேர்தலில் ஒருவேளை திமுக கூட்டணிக்கு தேமுதிக மாறுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. அமமுக கட்சி திசை தெரியாமல் குழம்பி போய் உள்ளது. அங்கு தேமுதிக நீடிப்பது சந்தேகம். மீண்டும் அதிமுக கூட்டணிக்கும் தேமுதிக செல்ல வாய்ப்பு இல்லை. இப்படிப்பட்ட நிலையில் உள்ளாட்சி தேர்தலில் தேமுதிகவை தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வரும் திமுகவின் முயற்சியாக இது இருக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

லேசான சறுக்கல்
அமமுக கூட்டணியில் தேமுதிக தற்போது இடம்பெற்று இருந்தாலும் பெரிதாக இந்த கூட்டணி அவ்வளவு இணக்கமாக இல்லை. சசிகலாவும் பெரிதாக அமமுக, தேமுதிகவை கண்டுகொள்வதாக இல்லை. இதனால் உள்ளாட்சி தேர்தலுக்காக திமுக வசம் தேமுதிக தஞ்சம் அடையும் வாய்ப்புகள் உள்ளன.

பழைய நிலைமை
தேமுதிக மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்ப அடிமட்ட அளவில் பணிகளை செய்ய வேண்டும். இதற்கு உள்ளாட்சி தேர்தல் மட்டுமே தேமுதிகவுக்கு உதவும். இதனால் தேமுதிக திமுக கூட்டணிக்கு செல்ல வாய்ப்புகள் உள்ளன. இது திமுகவிற்கு ஒரு வகையில் பலன் அளிக்கும்.

பணிகள்
தேமுதிக வடமாவட்டங்களில் திமுக கூட்டணியை வலுப்படுத்தும் விதமாகவும், உள்ளாட்சி தேர்தலில் பாமகவிற்கு எதிராக களமிறக்கும் விதமாகவும் தேமுதிகவை திமுக களமிறக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இப்படி நடந்தால் ஒரு மேயர் பதவிக்கு தேமுதிக அடிப்போடவும் வாய்ப்பு உள்ளது. தற்போது நடந்து இருக்கும் சந்திப்பு கூட்டணி குறித்த கேள்விகளையும் விவாதங்களையும் எழுப்பி உள்ளது.












Click it and Unblock the Notifications