ரயிலில் கலர் கலரா இல்லாமல் வெள்ளை நிறத்தில் போர்வை கொடுப்பது ஏன்? இவ்ளோ விஷயம் இருக்கா? இதை படிங்க
சென்னை: ரயிலில் ஸ்லீப்பர் சீட் புக் செய்து பயணிக்கும் பயணிகளுக்கு கலர் கலரான போர்வைகள் கொடுக்காமல், வெள்ளை நிற போர்வை மற்றும் தலையணைகள் கொடுப்பது எதற்காக என்று தெரியுமா?.. இதற்கு பின்னால் சில காரணங்கள் இருக்கின்றன. அது பற்றி இங்கே பார்ப்போம்.
ரயில்களில் அடிக்கடி பயணம் செய்யும் நபராக இருந்தால் ஒரு விஷயத்தை நீங்கள் கவனித்து இருக்கலாம்.. ரயிலில் புக்கிங் செய்யும் பயணிகளுக்கு போர்வை தலையணை ஆகியவை வழங்கும் நடைமுறை உள்ளது. இந்த போர்வை எல்லாமே வெள்ளை நிறத்தில் மட்டுமே கொடுக்கப்படுவதை நீங்கள் பார்த்து இருக்கலாம்...

வெள்ளை நிற போர்வை: அது ஏன் வெள்ளை நிறத்தில் மட்டுமே கொடுக்கப்படுகிறது.. பேருந்துகளில் கொடுக்கிறார்களே அதுபோல பல வண்ணங்களிலும் கொடுக்கலாமே என்று நீங்கள் யோசித்து இருக்கிறீர்களா... வெள்ளையாக இருந்தால் எளிதாக அழுக்கு தெரிந்து விடும் என்பதற்காக கொடுக்கிறார்களோ என நினைக்கலாம்... ஆனால் உண்மை அதுவல்ல.. வெள்ளை நிறத்தில் போர்வை கொடுப்பதற்கு பின்னால் சில காரணங்கள் இருக்கின்றன. அது பற்றி இங்கே பார்ப்போம்.
ஸ்லீப்பர் வசதி கொண்ட ரயில் பெட்டியில் பயணிக்கும் பயணிகள் தங்கள் விருப்பத்தின் அடிப்படையில் கட்டணம் செலுத்தி படுக்கை விரிப்புகள், தலையணை வாங்கிக் கொள்ளலாம். குளிர்சாதன பெட்டியில் பயணிக்கும் பயணிகளுக்கு ரயில்வே தரப்பிலேயே கம்பளி போர்வை, பெட்ஷீட், தலையணை உள்ளிட்டவை கொடுக்கப்படுகிறது.
121 டிகிரி செல்சியஸ்: ரயில்களில் பயணிகளுக்கு பல ஆயிரக்கணக்கில் போர்வை, தலையணை வழங்க வேண்டியுள்ளது. இந்த போர்வைகள், பெட் ஷீட்கள் எல்லாம் பயன்படுத்தப்பட்ட பிறகு சுத்தம் செய்வதற்காக எடுத்து செல்லப்படும். இந்த படுக்கை விரிப்புகள், தலையணை உறைகளை சுத்தம் செய்வதற்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்களில் 121 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் நீராவியை உருவாக்கும் பெரிய கொதிகலன்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன.
கடுமையான சலவைக்கு: இவை சுமார் 30 நிமிடங்களுக்கு நீராவிக்கு உட்படுத்தப்படுகின்றன. அப்போது அதில் படிந்திருக்கும் கிருமிகள் நீக்கம் செய்யப்பட்டு சலவை மேற்கொள்ளப்படுகிறது. அவற்றை பிளிச்சிங் செய்வதும் சுலபமாகிறது. தினமும் பல்லாயிரக்கணக்கானோர் பயன்படுத்தும் படுக்கை விரிப்புகளை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க இத்தகைய கடுமையான சலவை முறை அவசியமாகிறது.
அதற்கு வெள்ளை நிற படுக்கை விரிப்புகளே பொருத்தமாக விளங்குகின்றன. ஏனென்றால், இந்த துணி வகைகள் அதிக வெப்பநிலைக்கும், கடுமையான சலவை முறைக்கும் தாக்குப்பிடிக்கும் திறன் கொண்டதாக இருக்கும். எத்தனை முறை சலவை செய்தாலும் கலர் மங்காமல் அப்படியே இருக்கும். பிளீச்சிங் செய்தால் புத்தம் புதுசு போல பொலிவுடன் காட்சி அளிக்கும்.
நிறம் மங்காது: ஆனால் வண்ண நிற துணிகள் அப்படி இருக்காது. எளிதில் நிறம் மங்கி பொலிவு இல்லாமல் பழையது போல மாறிவிடும். இதனால் பழைய பெட்ஷீட்கள் போல இருப்பதால் பயணிகளும் அதை பயன்படுத்த யோசிப்பார்கள். இதற்கு மாறாக வெள்ளை படுக்கை விரிப்புகள் புத்தம் புதுசு போல பொலிவாகவே இருக்கின்றன.
சாயங்கள் கலக்க வாய்ப்பு: எத்தனை முறை சலவை செய்து உலர்த்தினாலும் பளபளப்பான தோற்றத்துடன் இருக்கும். அதுமட்டுமின்றி வெவ்வேறு நிற படுக்கை விரிப்புகளை பயன்படுத்தினால் அவற்றை ஒன்றாக சலவை செய்யும்போது அதில் இருக்கும் நிற சாயங்கள் ஒன்றாக கலக்க வாய்ப்புண்டு.
அதனால் ஒவ்வொரு நிற படுக்கை விரிப்புகளையும் தனித்தனியாக சலவை செய்ய வேண்டியிருக்கும். அதனால்தான் இந்திய ரெயில்வே வெள்ளை நிறத்தில் படுக்கை விரிப்புகளையும், தலையணை உறையையும் தேர்வு செய்து வழங்குகிறது.












Click it and Unblock the Notifications