• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

'சதி செய்வதற்காக ஆளுநரை சந்தித்தார்களா?' - தமிழக எம்.எல்.ஏக்கள் சொல்லும் சீக்ரெட் பின்னணி

Google Oneindia Tamil News

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றவைத்த நெருப்பு இன்று தமிழ்நாட்டின் தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது. 'சட்டம்-ஒழுங்கைக் கெடுக்கலாமா எனச் சதி செய்கிறார்கள்' என்று அதிமுகவையும் பாஜகவையும் குறிப்பிட்டு அவர் பேசியதுதான் விவாதத்துக்குக் காரணம்.

அண்மையில் திருச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களுக்கு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றிருந்தார். அப்போது பேசிய அவர், 'ஓர் ஆட்சி எப்படி இருக்கக்கூடாது; ஒரு முதலமைச்சர் எப்படி நடந்துகொள்ளக் கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டுதான் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சி. தனது கைகளில் அதிகாரத்தை வைத்துக் கொண்டும் சும்மா, கைக்கட்டி வேடிக்கை பார்த்தவர்கள்.

கடந்த 10 ஆண்டு காலத்தை நாசமாக்கியவர்கள். இன்று இதையெல்லாம் மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து, ஒருவரிடம் போய் புகார்களைக் கொடுக்கிறார்கள். அது யாரிடம் என்பது உங்களுக்குத் தெரியும். தமிழ்நாடு அரசு மீது புகார் கொடுக்க முதலில் உங்களுக்குத் தகுதி வேண்டும்' என்று சாடினார்.

'கடந்த ஆட்சியில் கைக்கட்டி வேடிக்கை பார்த்தவர்கள்' என முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுச் சொன்னது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியைத்தான். அவர்தான் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டைக் கைக்கட்டி வேடிக்கை பார்த்தவர். அதன் அர்த்தம் இதுதான்.

பிரதமர் மோடி தலைமையில் ஜி20 மாநாடு ஆலோசனைக் கூட்டம்! டெல்லி செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்!பிரதமர் மோடி தலைமையில் ஜி20 மாநாடு ஆலோசனைக் கூட்டம்! டெல்லி செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்!

 ஆளுநரை சந்தித்தது ஏன்?

ஆளுநரை சந்தித்தது ஏன்?

அடுத்து, 'சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கச் சதி செய்கிறார்கள்' என ஸ்டாலின் குறிப்பிட்டது, தமிழக பாஜகவையும் அதன் மாநிலத் தலைவர் அண்ணாமலையையும்தான். இதற்கான காரணம் வெளிப்படையானது.

அண்மையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த அண்ணாமலை, பிரதமர் மோடியின் தமிழகம் வருகையின்போது பாதுகாப்பு வசதிகளில் குறைபாடு இருந்ததாகப் புகார் அளித்திருந்தார். இதையொட்டியே, அதிமுக, பாஜக ஆகிய இரு கட்சிகளும் தமிழ்நாட்டின் அமைதியைக் கெடுக்கும் வகையில் மறைமுக சதியில் ஈடுபடுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

முதலமைச்சரின் குற்றச்சாட்டு குறித்து எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இ.பரந்தாமனிடம் பேசினோம்.

"தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருக்கிறது என்பது மக்களுக்குத் தெரியும். அவர்கள் நன்றாகப் புரிந்து வைத்துள்ளனர். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால், அரசியல் செய்வதற்கு எதிர்க்கட்சிகளிடம் எந்தவித குற்றச்சாட்டுகளும் இல்லை.

அரசின் மீது பழிசுமத்துவதற்கு ஊழல் குற்றச்சாட்டோ அல்லது நிர்வாகத்திறன் இன்மையோ, அரசின் திட்டத்தில் குறைபாடுகளோ இல்லை. ஒரு எதிர்க்கட்சியாக ஆக்கப்பூர்வமான குற்றச்சாட்டை முன்வைத்தால் அதை ஏற்பதில் எந்தத் தயக்கமும் கிடையாது.

ஆனால், அரசியல் செய்தாக வேண்டும் என்பதற்காக ஆளுநரை, எடப்பாடி பழனிசாமி சென்று சந்திக்கிறார். அவர் சந்திப்பு நடத்திய ஒரு வார காலத்துக்குள் பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலையும் ஆளுநரை சந்திக்கிறார். ஆளுநருக்கும் மத்திய அரசுக்கும் அதிமுகவுக்கும் இடையில் ஏதோ ஒருவித அரசியல் நெருக்கம் உள்ளது. அதனால்தான் குறைந்த இடைவெளிக்குள் இரு கட்சிகளின் பிரதிநிதிகளும் ஆளுநரைச் சந்தித்துள்ளனர்.

அண்ணாமலை, ஐ.பி.எஸ் தானா?

அண்ணாமலை, ஐ.பி.எஸ் தானா?


பிரதமர் மோடி வருகையின்போது பாதுகாப்பு வசதிகள் குறைவாக இருந்ததாக அண்ணாமலை கூறுகிறார். பிரதமர் தமிழ்நாட்டுக்கு வந்து சென்று நான்கு மாதங்களாகிறது. இந்த நான்கு மாதகாலம் அண்ணாமலை தூங்கிக் கொண்டிருந்தாரா?

பிரதமர் என்பவர் உயரிய பாதுகாப்பு வளையத்துக்குள் வருபவர். எஸ்.பி.ஜி (Special Protection Group) பாதுகாப்பு குறித்து ஐ.பி.எஸ் அதிகாரியாக பணியாற்றிய அண்ணாமலைக்கும் தெரியும். ஆனாலும், அவருக்கு நினைவுபடுத்துவதற்காக இதைச் சொல்கிறேன்.

மாநிலங்களுக்குப் பிரதமர் வருகின்றபோது அவரது பாதுகாப்பு என்பது எஸ்.பி.ஜியின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும். 'அவர் எப்படி வர வேண்டும்? எங்கே போக வேண்டும்? எங்கே அவர் தங்க வேண்டும்?' என்று மாநில அரசு தரும் அறிக்கை, சரியா அல்லது தவறா என முடிவு செய்வது எஸ்.பி.ஜி மட்டும்தான். மாநில அரசின் நெறிமுறைகள் சரியாக உள்ளது என்றால் மட்டுமே அதை எஸ்.பி.ஜி ஒப்புக் கொள்ளும்.

அண்ணாமலையோ, பிரதமருக்கு நெருக்கமாக உள்ளவற்றை மட்டும்தான் (close proximity) எஸ்.பி.ஜி பார்க்கும் என்கிறார். இது உண்மைக்குப் புறம்பானது. இரண்டு வகையான proximity உள்ளன. அதாவது, close proximity-ஐ பொருத்தவரையில் 60 மீட்டர் வரை வரும். அதாவது மேடை, பிரதமர் அமரும் நாற்காலியைச் சுற்றிய பகுதிகள் இதற்குள் வரும்.

சுற்றளவு பாதுகாப்பு எனப்படும் perimeter security என்பதில்தான் மெட்டல் டிடெக்டர் போன்ற பாதுகாப்பு விஷயங்கள் வரும். இதை எல்லாம் புரியாமல் அண்ணாமலை பேசுகிறார்.

பொதுவாக, பிரதமர் வந்து சென்ற பிறகு ஒரு ப்ளோஅப் அறிக்கையைத் தருவார்கள். அதில், 'எந்தவிதமான குறைபாடுகள் இருந்தன? எதைத் தவிர்த்திருக்க வேண்டும்?' என்பதைப் பற்றிக் குறிப்பிடுவார்கள். அதில், 'அடுத்தமுறை இவை எல்லாம் தீவிரமாகக் கண்காணிப்பட வேண்டும்' என அறிவுரை அறிக்கை ஒன்று வழங்கப்படும்.

அதில், ஏதேனும் தீவிரமான பிரச்னை இருந்திருந்தால் மாநில அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கும். ஆனால், அப்படி எதுவும் வரவில்லை. அப்படியானால், எந்த அடிப்படையில் இந்தக் குற்றச்சாட்டை அண்ணாமலை முன்வைக்கிறார். யார் இவருக்குச் சொன்னது?

 பாஜகவில் 'குண்டர் மேளா!'

பாஜகவில் 'குண்டர் மேளா!'

ஆளுநரை வேறு ஏதோ ஒரு காரணத்துக்காக சந்திக்கச் செல்லவிருந்த அண்ணாமலை, ஊடகங்களுக்கு ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்ல வேண்டும் என்பதற்காக ஜோடிக்கப்பட்டதுதான், 'பிரதமர் பாதுகாப்பில் குறைபாடு' என்ற குற்றச்சாட்டு.

தேவைப்பட்டால் குண்டு வைத்துவிட்டு, 'நாட்டில் சட்டம்-ஒழுங்கு கெட்டுப் போய்விட்டது' என்று சொல்லக்கூடிய கட்சிதான் பாஜக. அதற்காகத்தான் இவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்" என்றார்.

இதையடுத்து, நாகப்பட்டினம் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்.எல்.ஏ ஆளுர் ஷாநவாஸிடம் பேசினோம். "கடந்த 21.11.2022 அன்று இந்து முன்னணி நகரத் தலைவர் சக்கரபாணி கைது செய்யப்பட்டார். இவர் ஏன் கைதானார்? காரணம், அவரது சொந்த வீட்டில் அவரே பெட்ரோல் குண்டு வீசியதுதான். 'தீவிரவாதிகள் பெட்ரோல் குண்டு வீசுகிறார்கள். வெடிகுண்டு போடுகிறார்கள்' எனச் சொல்கிறோம். அதற்கெல்லாம் ஒரு நோக்கம் உள்ளது.

இப்படிப்பட்ட சம்பவங்கள் மூலம் வன்முறையை நிகழ்த்தி, தங்களின் கோட்பாட்டை மக்களின் கவனத்துக்குக் கொண்டு சொல்வது அவர்களின் நோக்கமாக உள்ளது. எனவே, சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கிறார்கள். மக்களை அச்சுறுத்துகிறார்கள். ஆனால், இந்து முன்னணி நடத்திய வன்முறையின் நோக்கம் என்ன? காரணம் என்ன? இது ஒன்று அல்ல; இதுபோல நூறு சம்பவங்களைப் பட்டியலிட முடியும்'' என்கிறார்.

தொடர்ந்து பேசிய ஆளுர் ஷாநவாஸ், '' பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா தடைக்குப் பிறகு பல இடங்களில் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் நடந்தன அல்லவா.. அப்போதும் அதற்குப் பின்னாலும் பாஜக, இந்து முன்னணி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

ஆனால், இவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாயாது. உபா சட்டமும் பாயாது. விசாரணையும் இருக்காது. அதுவே, மாற்று மதத்தினர் என்றால் உபா சட்டம் பாயும். பாஜக, இந்து முன்னணியின் இந்தக் குற்றச்செயல்களுக்குப் பின்னால் தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கை சீர்குலைப்பதைவிட வேறு என்ன நோக்கம் இருக்க முடியும்? தீவிரவாதிகளும் இவர்களும் ஒன்றுதானே?'' என்கிறார்.

மங்களூர் குண்டுவெடிப்பு

மங்களூர் குண்டுவெடிப்பு

'' மக்களை அச்சுறுத்தும் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது பாஜகவோ, ஆர்.எஸ்.எஸ் அமைப்போ, இந்து முன்னணியோ எதாவது ஒரு நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிக்கை வந்துள்ளதா? அப்படி இருந்தால் அதனைக் காட்டுவார்களா? பாஜகவில் இருந்து நடிகை காயத்ரி ரகுராமை நீக்கியுள்ளனர். ஆனால், இந்தக் குற்றச்செயல் செய்த நிர்வாகிகளில் யாராவது ஒருவரை நீக்கி இருக்கிறார்களா?'' எனக் கேள்வியெழுப்பும் ஆளூர் ஷாநவாஸ்,

'' பாஜக அலுவலகத்தில் குண்டு வீசி கைதான பாஜக நிர்வாகி உண்டு. அவரை என்ன செய்தார் அண்ணாமலை? அப்படியென்றால் வன்முறையை ஊட்டி வளர்க்கிறார்கள் என்று அர்த்தம். அவர்கள் கட்சியில் ரவுடிகளைச் சேர்க்கிறார்கள். பாஜகவில் ரவுடிகளை சேர்ப்பதற்காகவே ஒரு மேளா நடந்தது.

கட்சியில் இணைய வரும்போதே குண்டர் தடுப்புச் சட்டத்தில் தேடப்படுபவர், நான்கு, ஐந்துமுறை குண்டர் சட்டத்துக்கு ஆளானவர் எனத் தேடித் தேடி ஆள்களைச் சேர்த்தனர். இப்படி சட்டம்-ஒழுங்கை கெடுப்பவர்களைக் கட்சியில் சேர்த்த அண்ணாமலைதான், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்கிறார். அவருக்கு என்ன தகுதி உள்ளது?'' என்கிறார்.

தொடர்ந்து பேசுகையில், ''பாஜக ஆளும் மாநிலத்தில் மங்களூர் குண்டுவெடிப்புச் சம்பவம் அரங்கேறி சந்தி சிரித்துள்ளது. அது மாநில அரசு மற்றும் மத்திய அரசின் தோல்வி. அதைப் பற்றி ஏன் அண்ணாமலை பேசவில்லை? கோவை சம்பவம் பற்றிப் பேசிய அண்ணாமலை, கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக ஏதாவது போராட்டம் நடத்தினாரா அல்லது ஏதாவது பேசினாரா? அதில் ஏன் இவ்வளவு மவுனம்?'' என்கிறார்.

மேலும், ''மங்களூர் குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்து 10 நாள்கள் கடந்த பிறகு என்.ஐ.ஏவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் நான்கே நாளில் என்.ஐ.ஏவிடம் கோவை சம்பவம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இப்போது சொல்லுங்கள், எங்கே சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுக் கிடக்கிறது?'' என்கிறார்.

English summary
Why did Annamalai and Edappadi Palanisamy meet Governor R N Ravi? Lots of questions arise on the conversations.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X