அமரன் படத்திற்கு ஆரம்பமே பெரிய சிக்கல்.. கமல், சிவாவுக்கு இஸ்லாமிய அமைப்புகள் போர்க்கொடி ஏன்?
சென்னை: கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அமரன் திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் குதித்துள்ளன. அதற்கு என்ன காரணம் என்பதை இப்போது பார்ப்போம்
கடந்த 2017ம் ஆண்டு கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ரங்கூன் திரைப்படத்தை இயக்கியவர் ராஜ்குமார் பெரியசாமி- இவர் சென்னையைச் சேர்ந்த மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை தழுவி அமரன் என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தை கமல்ஹாசன் தயாரித்துள்ளார். அமரன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது படத்தின் எடிட்டிங் மற்றும் பின்னணிஇசை சேர்ப்பு பணிகள் நடந்து வருகிறது.

அண்மையில் சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் 1 நிமிடம் 35 நொடிகள் ஓடக்கூடிய டீசர் காட்சியை படத்தின் தயாரிப்பு குழுவான ராஜ்கமல் பிலிம்ஸ் வெளியிட்டது. அந்த காட்சி தான் தற்போது படத்திற்கு சிக்கலாய் வந்துள்ளது. அந்த காட்சியின் ஆரம்பத்தில், இந்திய ராணுவ வீரரை பிடித்த இஸ்லாமியர் ஒருவர், சுற்றியிருந்த சிறுவர்களிடம் நீங்கள் வருங்கால சுதந்திர போராளிகள் என்று கூறுவார். மேலும் நமக்கு என்ன வேண்டும் என்று சிறுவர்களிடம் அவர் கேட்பார். அதற்கு அவர்கள் சுதந்திரம் வேண்டும் என்று கூறுகிறார்கள். இந்த காட்சிக்கு தமிழகத்தில் உள்ள இஸ்லாம் அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
அமரன் படத்தின் காட்சிகள் காஷ்மீரில் எடுக்கப்பட்டது போல் இருக்கிறது. இதில் வரும் வசனம் மற்றும் காட்சிகள் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் வகையில் உள்ளதாக தமிழகத்தில் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் குதித்துள்ளன. விஸ்வரூபம் படத்திற்கு பின்னர் கமல்ஹாசன் தயாரித்துள்ள இந்த திரைப்படம், விஸ்வரூபம் போலவே எதிர்ப்பை சந்தித்துள்ளது. அமரன் படம் வெளிவரக்கூடாது என்று கூறி, சிவகார்த்திகேயன் மற்றம் கமல்ஹாசனின் புகைப்படங்களை எரித்தும் தங்களுடைய எதிர்ப்பை இஸ்லாமிய அமைப்புகள் பதிவு செய்துள்ளனர்.
கடந்த 2013ம் ஆண்டு விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட முயன்ற கமல்ஹாசன் இஸ்லாமிய அமைப்புகளிடம் கடும் எதிர்ப்பினை சந்தித்தார். அதனால் தமிழக அரசு அந்த படத்தை தடைச் செய்து அளவிற்கு நிலைமை போனது. ஆனால் பல்வேறு அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே விஸ்வரூபம் படம் வெளியானது. இந்த நிலையில் தற்போது கமலஹாசன் தயாரித்துள்ள அமரன் திரைப்படத்திற்கும் இஸ்லாம் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கி உள்ளன.
சென்னையைச் சேர்ந்த மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டிருப்பதாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் படம் எப்படிப்பட்ட படம் என்பது குறித்து ட்ரெய்லர் கூட வரவில்லை.. இதனிடையே வெறும் டீசரை பார்த்து இப்படி எதிர்ப்பு தெரிவிப்பது சரியா என்று கமல்ஹாசன் மற்றும் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். படைப்பு சுதந்திரத்தை நசுக்கக்கூடாது என்றும் வேண்டுகோள் வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications