மீண்டும் திமுகதான் ஆட்சிக்கு வரும்! ஓபிஎஸ் சொன்னதை கேட்டு ஷாக்கான ஆதரவாளர்கள்
சென்னை: முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது ஏன் என்பது குறித்து ஓ.பன்னீர் செல்வம் விளக்கமளித்துள்ளார். மேலும் அவர் திமுக அரசுக்கு ஆதரவாக பேசியிருக்கிறார். இது அவரது ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது: மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடிய வாய்ப்பு திமுகவுக்கு இருக்கிறது. 5 ஆண்டு கால திமுக ஆட்சியின் சாதனைகளை மக்கள் அறிவர். தமிழ்நாட்டுக்கே வழி பிறந்துள்ளது. ஸ்டாலினின் 5 ஆண்டுகால ஆட்சி நிறைவு பெற்றதற்கு வாழ்த்தினேன். மக்கள் மனதில் இருப்பதையே என் ஆதரவு எம்எல்ஏ ஐயப்பன் பேசினார்.

தமிழக சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி என்ற அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன் என ஓபிஎஸ் தெரிவித்திருந்த நிலையில் அவர் ஸ்டாலினை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக் குழு உறுப்பினர்களால் ஓபிஎஸ், அவரது மகன் ரவீந்திரநாத் உள்ளிட்டோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர். இந்த நிலையில் அவர் அதிமுகவில் மீண்டும் இணைய பல்வேறு பகீரத பிரயத்தனங்களை செய்து பார்த்தார்.
ஆனாலும் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக இருக்கிறார். அதாவது சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரனை அதிமுகவில் சேர்க்க மாட்டோம் என்று! எனினும் டிடிவி தினகரன் அமமுக என்ற கட்சியை நடத்தி வருவதால் அவர் என்டிஏ கூட்டணியில் இணைந்துள்ளார். இதனால் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரனை வரவேற்று நட்பு பாராட்டினார்.
இந்த நிலையில் ஓபிஎஸ்ஸின் தீவிர ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் திமுகவில் இணைந்துவிட்டனர். இந்த நிலையில் ஓபிஎஸ் தனி கட்சி ஆரம்பிப்பாரா இல்லை தனது அதிமுக தொண்டர்கள் மீட்பு கழகம் என்ற அமைப்பின் பேரில் திமுகவுடன் கூட்டணி வைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
கடந்த மாதம் இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூடியபோது கூட அப்பாவு அறையில் அமைச்சர் சேகர்பாபுவுடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தியிருந்தார். அதன் பிறகும் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் அந்த பேச்சுக்கள் அப்படியே இருந்தன.
இந்த நிலையில் இடைக்கால பட்ஜெட் தாக்கலையொட்டி சட்டசபை கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இன்றைய தினம் கூட்டத் தொடரை அதிமுக எம்எல்ஏக்கள் புறக்கணித்திருந்தனர். எனினும் ஓபிஎஸ்ஸும் அவரது ஆதரவு எம்எல்ஏவான ஐயப்பனும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த கூட்டத்தொடருக்கு இடையே சட்டசபை வளாகத்தில் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்த ஓபிஎஸ் ஆலோசனை நடத்தியுள்ளார். அவரது மகனும் அதிமுக முன்னாள் எம்பியுமான ரவீந்திரநாத் உடன் சென்றிருந்தார். அது போல் சபாநாயகர் அப்பாவுவையும் ஓபிஎஸ் சந்தித்து பேசியுள்ளதாக சொல்லப்படுகிறது.
ஏற்கனவே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையக் கூடும் என எதிர்பார்க்கப்பட்ட தேமுதிக, திடீர் ட்விஸ்ட்டாக திமுக கூட்டணியில் இணைந்துவிட்டது. இந்த நிலையில் ஓபிஎஸ்ஸின் சந்திப்பை பார்க்கும் போது உடன் இருக்கும் சில ஆதரவாளர்களை தக்க வைத்துக் கொள்ள திமுக கூட்டணியில் இணைவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. திமுகவுடன் கூட்டணி வைத்தால் தனது மகனுக்கு ராஜ்யசபா சீட் கேட்டாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இந்த முறையில் எப்படியாவது ஓபிஎஸ் தனது செல்வாக்கை நிரூபித்து, தேர்தலில் கணிசமான வெற்றியை பெற வேண்டும். அப்போதுதான் அவரது அரசியல் செழிப்பாக இருக்கும். இல்லாவிட்டால் அஸ்தமனமாகும் என்பதில் சந்தேகம் இல்லை என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.












Click it and Unblock the Notifications