கூட எல்லாம் சேர்ந்து நடந்தாரே! எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கழற்றிவிடப்பட்ட கமல்ஹாசன்.. என்ன நடந்தது?
சென்னை: நேற்று நடந்த எதிர்க்கட்சிகள் மாநாட்டிற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் அழைக்கப்படாதது பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சட்டசபை தேர்தலில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் பிரதான கட்சிகளுடன் இணையாமல் தனியாக போட்டியிட்டது. இந்த தேர்தலுக்கு பின் திமுக, காங்கிரஸ் தலைவர்களுடன் கமல்ஹாசன் கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கம் காட்டி வந்தார்.

முக்கியமாக திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் நெருக்கமாக கமல்ஹாசன் பழகி வருகிறார். விக்ரம் படத்தை வெளியிட்டது, அதன்பின் கமலின் பல படங்களுடன் ஒப்பந்தம் செய்தது, இந்தியன் 2 படத்தை வெளியிட உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பிற்குள் வந்தது என்று உதயநிதி - கமல் நெருக்கமாகி உள்ளனர்.
இன்னொரு பக்கம் காங்கிரஸ் கட்சியுடனும் கமல்ஹாசன் நெருக்கமாகி விட்டார். கடந்த சில மாதங்களுக்கு முன் பாரத் ஜோடோ யாத்திரையில் கமல்ஹாசன் கலந்து கொண்டார். நான் ஏன் இங்கே இருக்கிறேன் என்று பலர் என்னிடம் கேட்பார்கள். நான் ஒரு இந்தியனாக இங்கே இருக்கிறேன். என் அப்பா ஒரு காங்கிரஸ் நிர்வாகி. எனக்கு பல்வேறு அரசியல் கொள்கைகள் இருந்துள்ளன. நான் தனியாக கட்சி நடத்தி வருகிறேன். ஆனால் என்னுடைய நாடு என்று வரும் போது, கட்சி கோடுகள், எல்லைகள் எல்லாம் மறைந்துவிடும். நான் அந்த வேறுபாடுகளை மறந்துவிட்டு இங்கே வந்து இருக்கிறேன், என்று கமல்ஹாசன் குறிப்பிட்டார்.
அதன்பின் காங்கிரஸ் - திமுக கூட்டணியில் அதிகாரபூர்வமாக இணைந்தார். எதிர்பார்த்தபடியே இவர்கள் கடைசியில் கூட்டணி வைத்துள்ளனர். ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவும் அளித்தார். இதனால் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் காங்கிரஸ் - திமுக கூட்டணியில் இணைய உள்ளதோ என்ற கேள்வி எழுந்தது.
அதாவது நாடாளுமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் சார்பாக எம்பி தேர்தலுக்கு கமல்ஹாசன் போட்டியிட உள்ளாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. முக்கியமாக கமல்ஹாசன் அரசியல் ஆலோசகர் ஒருவருடன் நெருக்கமாக இருந்து வருகிறார். அந்த ஆலோசகர்தான் மக்கள் நீதி மய்யம் தொடங்கிய நேரத்தில் கட்சியை உருவாக்குவதில் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியது. அதே நிர்வாகி திமுகவிற்கு மிகவும் நெருக்கமாக இருந்து வருகிறார்.
அந்த ஆலோசகரின் அறிவுறுத்தலின் பெயரில் திமுக, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க கமல் முடிவு செய்ததாக கூறப்பட்டது. அவர் சொன்ன ஆலோசனையின் பெயரில்தான் கமல்ஹாசன் இந்த முடிவை எடுத்தாக கூறப்படுகிறது. திமுக + காங்கிரசுடன் கூட்டணி வைக்கும் பட்சத்தில் கமலுக்கு மாநில அரசியலில் பெரிதாக ரோல் இருக்காது. அது திமுக + கமல் இடையே ஒரு வித conflict of intrest ஐ ஏற்படுத்தும் என்பதால் கமல்ஹாசன் பெரும்பாலும் தேசிய அரசியல் மீது கவனம் செலுத்துவார் என்று கூறப்பட்டது.
அதாவது நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக கோவையில் இவர் போட்டியிட வாய்ப்பு உள்ளது என்று செய்திகள் வந்தன. சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் நூலிழையில்தான் கமல் வானதி சீனிவாசனிடம் தோல்வி அடைந்தார். அப்போது அவர் கூட்டணியில் இல்லை. இப்போது காங்கிரஸ் - திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டால் கமலுக்கு வெற்றி வாய்ப்புகளும் உள்ளன. பாரத் ஜோடோ யாத்திரையிலும் இவர் காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கமாக காணப்பட்டார்.
ஆனால் காங்கிரஸ் கட்சியுடன் மட்டுமின்றி திமுகவுடன் இவ்வளவு நெருக்கமாக இருந்தும் நேற்று கமல்ஹாசனுக்கு இந்த நிகழ்விற்கு அழைப்பு செல்லவில்லை. கிட்டத்தட்ட 4-5 சதவிகித வாக்குகள் இருந்தும் ஏன் எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு கமல்ஹாசனுக்கு அழைப்பு செல்லவில்லை என்ற விவாதம் எழுந்துள்ளது.
தேசிய அளவில் மாநில கட்சிகள், எதிர்க்கட்சிகள் பாஜகவிற்கு எதிராக கைகோர்க்க தொடங்கி உள்ளன. திமுக, காங்கிரஸ் , ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலை ஒன்றாக எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனை செய்தனர். இதற்காக பெங்களூரில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த கூட்டத்தில் 14 கட்சிகள் பீகாரில் உள்ள பாட்னாவில் கலந்து கொண்ட நிலையில் இந்த முறை கூடுதல் கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்கின்றன 26 கட்சிகள் இதில் கலந்து கொண்ட நிலையில் மக்கள் நீதி மய்யம் புறக்கணிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications