சிறையில் இருக்கும் போதே சென்ற மெசேஜ்.. மாரிதாஸ் மீண்டும் கைதானது ஏன்?.. பின்னணியில் முக்கிய காரணம்!
சென்னை: ஏற்கனவே சிறையில் இருக்கும் மாரிதாஸ் இன்னொரு வழக்கில் நேற்று கைது செய்யப்பட்டார். இவரை போலீசார் கைது செய்தது ஏன் என்ற விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
மதுரையை சேர்ந்த யூ டியூபர் மாரிதாஸ் "Maridhas Answers" என்ற பெயரில் இயங்கும் யூடியூப் சேனலில் தொடர்ந்து வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். இந்த நிலையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதாக கூறி யூ டியூபர் மாரிதாஸ் இரண்டு நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். தீவிர வலதுசாரி ஆதரவாளராக கருதப்படும் இவர் திமுகவிற்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்தார்.
இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் செய்த பதிவு ஒன்றால் தற்போது கைதாகி உள்ளார். பாலகிருஷ்ணன் என்பவர் மதுரை காவல்துறையில் அளித்த புகாரின் பெயரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது
தமிழ்நாடு அரசு தவறான வகையில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தற்காகவும், வன்முறையை தூண்டியதற்காகவும் மதுரை நகரக் காவல்துறை மாரிதாஸை கைது செய்தது. சமூக நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளின் இவருக்கு எதிராக வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாரிதாஸை வரும் டிசம்பர் 23-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சிறை
தற்போது தேனி மாவட்டம், உத்தமபாளையம் கிளைச் சிறையில் மாரிதாஸ் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சிறையில் இருக்கும் நிலையில் நேற்று மாலை அவர் மீது இன்னொரு வழக்கும் பதியப்பட்டு அதில் அவர் கைதும் செய்யப்பட்டார். இரண்டாவது கைது குறித்து நேற்று போலீசார் தரப்பு சிறையில் இருந்த மாரிதாசுக்கு தகவல் தெரிவித்தது. இரண்டாவது வழக்கில் நீங்கள் கைது செய்யப்பட்டுள்ளீர்கள் என்று போலீசார் தகவல் தெரிவித்தனர்.

தனியார் டிவி
கடந்த 2020ம் ஆண்டில் தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றை பற்றி மாரிதாஸ் வீடியோ வெளியிட்டு இருந்தார். அந்த சேனல் இந்துக்களுக்கு எதிராக செயல்படுவதாக குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து தமிழ்நாட்டில் இருக்கும் அந்த சேனல் கிளைக்கு எதிராக சேனலின் தலைமை நிர்வாகம் கடிதம் அனுப்பி இருந்ததாகவும் கடிதம் ஒன்றை தனது வீடியோவில் மாரிதாஸ் காண்பித்தார்.

மின் அஞ்சல்
அதன்படி தான் சொன்ன குற்றச்சாட்டுகளை சேனல் நிர்வாகம் ஏற்றுக்கொண்டதாக மின் அஞ்சல் கடிதம் ஒன்றையும் மாரிதாஸ் காண்பித்தார். இந்த நிலையில் மாரிதாஸ் காண்பித்த அந்த கடிதம் பொய்யானது என்று பின்பு நிரூபிக்கப்பட்டது. சேனலின் தலைமை நிர்வாகம் அப்படி ஒரு கடிதமே எழுதவில்லை என்று கண்டுபிடிக்கப்பட்டது.

பொய்யான தகவல்
பொய்யான கடிதத்தை காண்பித்ததாக கூறி மாரிதாஸ் மீது அந்த சேனல் நிர்வாகம் புகார் அளித்தது. அதோடு மாரிதாஸ் மீது சென்னை சைபர் கிரைம் போலீஸ் மூலம் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. 465 (மோசடி செய்வது) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கில்தான் தற்போது மாரிதாஸ் மீண்டும் கைதாகி உள்ளார்.

இரண்டாவது கைது
இப்போது இவரை இரண்டாவது வழக்கில் கைது செய்ய மிக முக்கிய காரணம் இருப்பதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, மாரிதாஸ் முதலில் கைதான வழக்கு அவ்வளவு வலுவானது இல்லை. அவரின் ட்வீ ட் காரணமாக கைது செய்யப்பட்ட நிலையில் பெயிலில் அவர் வெளியே வர நிறைய வாய்ப்புகள் இருந்தன. தமிழ்நாடு அரசு குறித்து அவதூறாக பேசி இருந்தாலும் அவருக்கு பெயில் கிடைக்க கொஞ்சம் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

பெயில் வாய்ப்பு
நாளையே அவருக்கு பெயில் கிடைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில்தான் பெயில் கிடைத்தாலும் வெளியே வர முடியாத வகையில் மற்ற ஒரு வழக்கில் தற்போது மாரிதாஸ் கைதாகி உள்ளார். இதனால் முதல் வழக்கில் மாரிதாஸ் வெளியே வந்தாலும் இரண்டாவது வழக்கில் பெயில் கிடைப்பது மிக கடினம். அதோடு மேலும் ஒரு வழக்கில் மாரிதாஸ் கைதாகும் வாய்ப்புகளும் உள்ளன என்கிறது போலீஸ் தரப்பு.
Recommended Video

மேலும் பல வழக்கு
மேட்டுப்பாளையம் காவல்நிலையத்தில் இருக்கும் ஒரு வழக்கு, மேலும் சில அவதூறு வழக்குகள் ஆகியவை மீதும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு மாரிதாஸ் அதிலும் கைதாகும் வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வருகின்றன. இதனால் அனைத்து வழக்கிலும் இவருக்கு பெயில் கிடைப்பது கொஞ்சம் கஷ்டம் என்றே கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications