திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி!
சென்னை: சட்டமன்ற தேர்தலில் அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், விஜய பாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அணி திரண்டனர். தவெகவுக்கு ஆதரவளித்தனர். திமுகவின் ஆதரவுடன் எடப்பாடி முதல்வராகும் கனவும் நடைபெறவில்லை. அமைச்சரவையில் இடம்பெறும் வேலுமணி அணியின் முயற்சியும் நடைபெறவில்லை.
வேலுமணி ஆதரவு எம்எல்ஏக்கள் 4 பேர் பதவியை ராஜிநாமா செய்துள்ளனர். 3 பேர் அதிகாரபூர்வமாக தவெகவில் இணைந்துள்ளனர். இதன் பின்னணியில் செங்கோட்டையன் இருப்பதாக தகவல் வெளியானது. இதுகுறித்து செங்கோட்டையன் விரிவாக விளக்கமளித்துள்ளார்.

தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார். அப்போது அவர் கூறுகையில், "புதிய ஆட்சி வந்துள்ளது. 6 மாதங்கள் எந்த விமர்சனமும் செய்ய மாட்டோம் என்று எதிர்க்கட்சிகள் சொன்னார்களா இல்லை. எங்களுக்கு அவகாசம் வேண்டும். முதலமைச்சர் உடனுக்குடன் அதிரடி நடவடிக்கை எடுக்கிறார். காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா
நாங்கள் பொறுத்திருந்து தானே செய்ய முடியும். ஒரு எம்எல்ஏ ராஜினாமா செய்வது என்பதை அவர்களின் ஜனநாயக உரிமை. நானும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தான் தவெகவில் இணைந்தேன். குதிரை பேரம் நடைபெறவில்லை. முதலமைச்சர் விஜய் ஜனநாயகத்தை பாதுகாப்பார். திமுக ஆதரவுடன் குதிரை பேரம் நடத்தி ஆட்சியமைக்க முயற்சி செய்தது யார் என்பது அனைவருக்கும் தெரியும்.
திமுக ஆதரவுடன் முதலமைச்சர் ஆவேன் என்று சொன்னது யார். தவெக எவ்வித குதிரை பேரத்திலும் ஈடுபடவில்லை. முதலமைச்சரின் செயல்பாடுகளை பார்த்து அவர்களாக தவெகவில் வந்து இணைகிறார்கள். உங்கள் மனதில் வரும் எல்லா கேள்விகளுக்கும் நான் பதில் சொல்ல முடியாது. அதற்கு காலம் பதில் சொல்ல முடியும். இதற்கு முன்பும் ராஜினாமா செய்துள்ளனர்.
எடப்பாடி மீது விமர்சனம்
வயிற்று வலிக்கு மருத்துவமனை சென்றால் தான் வலி குறையும். கட்டிலை திருப்பிப் போட்டு படுத்தால் வயிற்று வலி தீராது. அதிமுகவினரை தவெகவில் நான் கட்சியில் இணைக்கவில்லை. எதற்கெடுத்தாலும் எடப்பாடி என்னை மட்டுமே விமர்சிக்கிறார். எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படங்களை விட தன் படத்தை பெரிதாக போடுபவரிடம் மட்டும் தான் எடப்பாடி சிரித்து பேசுகிறார்.
ஜெயலலிதா புகைப்படத்தை புறக்கணித்துவிட்டு தனக்கு பாராட்டு விழா நடத்தியவர் தானே அவர். அதிமுகவின் சரிவுக்கு அவர் தான் காரணம். அதிமுகவில் ஜனநாயகம் இல்லை. அதனால் கட்சியில் இருந்து வெளியேறுகிறார்கள். நான் அதிமுக எம்எல்ஏக்கள் யாரையும் தவெகவில் இணைக்கவில்லை. அது தவறான கருத்து" என்றார்.












Click it and Unblock the Notifications