விடமாட்டேன்! சுப்ரீம் கோர்ட் போகும் விஜய்! சிங்கப்பூர் புள்ளி யார்? செந்தில் பாலாஜிக்கு புது ஆபத்து
சென்னை: மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கிடைத்த முன் ஜாமீனை ரத்து செய்ய கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தவெக ஊத்தங்கரை எம்.எல்.ஏ இளையராஜாவிற்கு ₹35 கோடி குதிரை பேர லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் ஆர்.வி. அசோக் குமார் ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது. இருவரின் பெயரும் FIRல் இல்லாத காரணத்தால் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது.

இது செந்தில் பாலாஜிக்கு தற்காலிக நிம்மதியைத் தந்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு விஜய் அரசு தயாராகிவிட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, செந்தில் பாலாஜியின் முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரி உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முதல்வர் விஜய் தற்போது சட்ட வல்லுநர்கள் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வருகிறாராம்.
சிங்கிப்பூர் குற்றவாளியைப் பிடிக்க வலைவீச்சு
சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாதத்தின் போது, அரசு தரப்பு வழக்கறிஞர் ஆர். ஜான் சத்யான், இந்த வழக்கில் தொடர்புடைய ஒரு மிக முக்கியமான முதன்மைக் குற்றவாளி ஏற்கனவே போலீஸ் ரேடாரில் இருந்து தப்பி சிங்கிப்பூருக்கு ஓடிவிட்டதாகவும், அவர் அங்கிருந்தபடியே ஹவாலா பணம் வழங்க முயன்றதாகவும் நீதிமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார்.
நீதிமன்றத்தில் ஆதாரங்களின் பலவீனம் மற்றும் புகாரில் 2 நாட்கள் தாமதம், ஆடியோ ரெக்கார்டிங் இல்லாதது ஆகியவற்றை சுட்டிக்காட்டியே செந்தில்பாலாஜிக்கு முன்ஜாமீன் கிடைத்தது.
இதனால், தப்பியோடிய அந்த சிங்கிப்பூர் நபரை உடனடியாகக் கைது செய்து, அவரிடமிருந்து ஆடியோ, வீடியோ ஆதாரங்களை கைப்பற்றினால் மட்டுமே வழக்கு அசைக்க முடியாத அளவுக்கு வலுவாகும் என்பதை முதல்வர் விஜய் உணர்ந்துள்ளார்.
இதன் காரணமாக, சிங்கிப்பூருக்கு தப்பிய நபரை சர்வதேச போலீஸ் உதவியுடன் உடனடியாகக் கைது செய்து தமிழகம் கொண்டு வரவும், வழக்கின் டிஜிட்டல் ஆதாரங்களை மிக வலுவாக மாற்றவும் காவல் துறைக்கு முதல்வர் விஜய் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
இது ஆட்சியை கலைக்க நடந்த சதி
சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ வாதாடுகையில், "சட்டசபையில் திமுகவிற்கு வெறும் 59 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே இருக்கும் போது அரசை கவிழ்க்க முடியாது. சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்திற்கு வாக்களிக்கக் கோரியதை எப்படி ஆட்சிக் கவிழ்ப்பு என்று கூற முடியும்?" எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
ஆனால், தவெக அரசோ இதனை வெறும் சபாநாயகருக்கு எதிரான விஷயமாகப் பார்க்கவில்லை. "இது புதிய அரசை அமைப்பதற்கான முயற்சி அல்ல, மாறாக தற்போதைய டிவிகே அரசை முற்றிலும் கலைப்பதற்கான மிகப்பெரிய சதித் திட்டம்.
10 தவெக எம்எல்ஏக்களுக்கு தலா ₹35 கோடியும், இடைத்தரகருக்கு ₹5 கோடியும் பேசி, ஹவாலா பணத்தைப் பயன்படுத்தி ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை நிலைகுலைய வைக்க சதி நடந்துள்ளது," என்ற வாதத்தை உச்சநீதிமன்றத்தில் மிக வலுவாக முன்வைக்க அரசு தரப்பு தயாராகி வருகிறது.
நாளை முதல்வர் விஜய் கரூருக்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் நிலையில், செந்தில் பாலாஜியை முடக்க நினைத்த தவெகவின் திட்டம் தற்காலிகமாகத் தடுத்த நிறுத்தப்பட்டாலும், தப்பியோடிய சிங்கிப்பூர் புள்ளியைப் பிடிப்பதன் மூலமும், சுப்ரீம் கோர்ட் மேல்முறையீடு மூலமும் செந்தில் பாலாஜிக்கு அடுத்தகட்ட செக் வைக்க முதல்வர் விஜய் தீவிரம் காட்டி வருகிறார்.












Click it and Unblock the Notifications