இந்தியர்களுக்கு சிக்கல்? மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் ஹெச்-1பி விசா மோசடி! டிரம்ப் நிர்வாகம் தடாலடி
வாஷிங்டன்: அமெரிக்க அதிபரான டிரம்ப் குடியேற்றம் சார்ந்து தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இது அங்குள்ள இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு கடும் பாதிப்பை தருவதாகவே இருக்கிறது. இதற்கிடையே H-1B விசா முறைகேடு தொடர்பான விசாரணையை டிரம்ப் நிர்வாகம் இப்போது திடீரென தீவிரப்படுத்தியுள்ளது. இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்!
அமெரிக்க அதிபராக டிரம்ப் வந்தது முதலே அவர் குடியேற்றம் தொடர்பான விதிகளில் கடுமை காட்டி வருகிறார். முதற்கட்டமாக டிரம்ப் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்கள் மீது நடவடிக்கை எடுத்தார். அத்தோடு நிற்காமல் பிறகு சட்டப்பூர்வாக குடியேறியவர்களை நோக்கியும் டிரம்ப் திரும்பினார்.

வேலைவாய்ப்பு முறைகேடு
இதற்கிடையே அமெரிக்காவில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான H-1B மற்றும் PERM வேலைவாய்ப்பு விசா திட்டங்களில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக டிரம்ப் நிர்வாகம் இப்போது விசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்த விசாரணையின் போது, ஐடி துறையின் முன்னணி நிறுவனமான காக்னிசன்ட் நிறுவனத்தின் பெயரும் கூட அடிபட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த விசாரணைக்காக பல்வேறு நிறுவனங்களின் முக்கிய அதிகாரிகளுக்கு நோட்டாஸ் அனுப்பப்பட்டுள்ளது. என்ன நடந்தது என்பதை நேரில் ஆஜராகி அவர்கள் விளக்கம் தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அமெரிக்கத் தொழிலாளர் துறையின் இன்ஸ்பெக்டர் ஜெனரலான ஆன்டனி டி'எஸ்போசிடோ உறுதி செய்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், "வெளிநாட்டு தொழிலாளர் விசா மோசடி மிக பெரியது. நீண்ட காலமாகவே இந்த சிக்கல் நடந்து வருகிறது. இதற்கு முன்பு எந்தவொரு அதிபரும் எடுக்காத துணிச்சலான நடவடிக்கையை டிரம்ப் எடுக்கிறார்.
காக்னிசன்ட்
இந்த விவகாரத்தை தீவிரமாக கையில் எடுத்துள்ளோம். ஏற்கனவே இது தொடர்பாக பலருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. எங்களுக்கு கிடைக்கும் ஒவ்வொரு தகவலையும் முழுமையாக விசாரிப்போம். எங்களுக்கு வந்த புகார்களில் காக்னிசன்ட் போன்ற மிக பெரிய நிறுவனங்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன," என்று அவர் கூறினார். டிரம்பின் மோசடி டாஸ்க் போர்ஸும் இந்த விசாரணையில் பங்கெடுக்கிறது. தீவிர விசாரணை நடத்தப்படும் என்று அமெரிக்க அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
என்ன குற்றச்சாட்டு
சில நிறுவனங்கள் மற்றும் ஏஜெண்டுகள் போலியான விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து, வெளிநாட்டு தொழிலாளர்களைச் சுரண்டியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குறிப்பாக, வேலைவாய்ப்பு வழங்கிய பின்னர் ஊழியர்களிடம் சம்பளத்தை கட்டாயப்படுத்தி வாங்குவது, குறைந்த ஊதியம் வழங்குவது போன்ற முறைகேடுகள் நடந்ததாக கூறப்படுகிறது. உண்மையான தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக உருவாக்கப்பட்ட திட்டங்களை சில நிறுவனங்கள் தங்கள் லாபத்திர்ககா தவறாக பயன்படுத்தின என்பதே குற்றச்சாட்டாகும். இது அமெரிக்க வேலைவாய்ப்புகளையும் பாதிப்பதாக சொல்லி தொழிலாளர் துறை விசாரணையில் இறங்கியுள்ளது..
க்ரைம் நெட்வொர்க்
இந்த விசா மோசடிகள் வெறும் வேலைவாய்ப்பு முறைகேடாக மட்டுமல்லாமல்.. கடத்தல் மற்றும் சர்வதேச க்ரைம் நெட்வொர் உடன் கூட தொடர்புடையதாக இருக்கலாம் என்று ஆன்டனி டி'எஸ்போசிடோ குற்றம்சாட்டியுள்ளார். அவர் மேலும், "இந்த வெளிநாட்டு தொழிலாளர் மோசடிகளில் சில மோசடிகள், போதைப்பொருள் கும்பல்கள் மற்றும் சர்வதேச க்ரைம் நெட்வொர்க்குடன் தொடர்புடையவை. அமெரிக்காவை பாதுகாப்பாகவும், பொருளாதார ரீதியாக காலி செய்வது அவர்கள் திட்டம். அதை தடுக்க இந்த விசாரணை அவசியம்" என்றார்.
H-1B விசா என்பது அமெரிக்க நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருந்து திறமையான தொழில்நுட்ப நிபுணர்களை வேலைக்கு எடுக்கப் பயன்படுத்தும் முக்கிய வேலைவாய்ப்பு விசா திட்டமாகும். இந்த திட்டத்தில் இந்திய ஐடி வல்லுநர்களே ஆண்டுதோறும் அதிக அளவில் இந்த விசாவை பெறுகின்றனர். இந்தச் சுழலில் தான் டிரம்ப் அரசு திடீரென இதுபோன்ற நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதனால் அமெரிக்காவில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் ஐடி நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என சொல்லப்படுகிறது.














Click it and Unblock the Notifications