வந்தே பாரத், சதாப்தி, தேஜஸ் ரயில்களுக்கு இப்படி ஒரு திட்டமா.. கடும் எதிர்ப்பால் தெற்கு ரயில்வே வாபஸ்
சென்னை: வந்தே பாரத், தேஜஸ் மற்றும் சதாப்தி எக்ஸ்பிரஸ் போன்ற அதிவேக ரயில்களில் எண்ட்-டு-எண்ட் அடிப்படையில் ஒற்றை குழு பணியாளர்களை பணி செய்ய வைக்கும் திட்டத்தை தெற்கு ரயில்வே திரும்ப பெற்றுள்ளது. லோகோ பைலட்டுகளின் பாதுகாப்பு மற்றும் சிரமங்கள் தொடர்பான சிக்கல்களை எஸ்ஆர்எம்யு சுட்டிக்காட்டியதால் திரும்ப பெற்றுள்ளது.
வந்தே பாரத், தேஜஸ் மற்றும் சதாப்தி எக்ஸ்பிரஸ் போன்ற அதிவேக ரயில்களில் எண்ட்-டு-எண்ட் அடிப்படையில் ஒற்றை பணியாளர்களை அறிமுகப்படுத்தும் திட்டத்தை தெற்கு ரயில்வே அறிமுகம் செய்ய முடிவு செய்தது.

தெற்கு ரயில்வே பொது மேலாளரின் அறிவுறுத்தலின் பேரில் ரயில் எண் 20665/20666 சென்னை எழும்பூர்-திருநெல்வேலி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், ரயில் எண் 20643/20644 , சென்ட்ரல்-கோயம்புத்தூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், ரயில் எண் 22671/22672, சென்னை எழும்பூர்-மதுரை MS-MDU எக்ஸ்பிரஸ் மற்றும் ரயில் எண் 12243/12244 சென்னை சென்ட்ரல்-கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ் ஆகியவற்றில் எண்ட்-டு-எண்ட் அடிப்படையில் ஒற்றை பணியாளர்கள் குழுவையே போய் சேரும் வரை பணியாற்ற வைக்க ரயில்வே அதிகாரிகள் திட்டமிட்டனர்.
லோகோ பைலட்டுகள் மற்றும் தொழிற்சங்கங்களின் ஒரு பிரிவினர் இந்த நடவடிக்கை குறித்து தங்கள் கவலையை வெளிப்படுத்தி கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்படி அதிவேக ரயில்களில் எந்த இடைவெளியும் நீண்ட நேரம் பணி செய்யும் லோகோ பைலட்டுகள் உணவு மற்றும் இயற்கை உபாதைக்கு கூட போக முடியாத நிலை ஏற்படும் என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் தென்னக ரயில்வே மஸ்தூர் ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் என். கண்ணையா தலைமையிலான தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் ஆட்சேபனை தெரிவித்தது.
இதையடுத்து கடந்த திங்கள்கிழமை, தெற்கு ரயில்வே எஸ்ஆர்எம்யு பிரதிநிதிகளுடன் அவசரக் கூட்டத்தைக் கூட்டியது. முதன்மை தலைமை இயக்க மேலாளர் என்.ஸ்ரீகுமாரால் வெளியிடப்பட்ட சிங்கிள் க்ரூ பீட்க்கான காரணங்கள் விளக்கப்பட்டது. அப்போது தொழிற்சங்கம் சார்பில் பேசிய கண்ணையா, லோகோ பைலட் மற்றும் அசிஸ்டென்ட் லோகோ பைலட்டுகள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சிங்கிள் க்ரூ பீட் முறையை அமல்படுத்த வேண்டாம் என்றார். மேலும் லோகோ பைலட்டுகள் நீண்ட நேர வேலை நேரத்தை எதிர்கொள்ள வேண்டிய பாதுகாப்பு சிக்கல்கள் மற்றும் பிற சிரமங்கள் குறித்து தெரிவித்தார்.
இதையடுத்து லோகோ பைலட் மற்றும் அசிஸ்டென்ட் லோகோ பைலட் அடங்கிய ஒற்றை பீட் குழுவினரை இந்த ரயில்களில் தொடங்கும் ரயில் நிலையத்தில் இருந்து சேரும் இடம் வரை பணியாற்ற வைக்கும் திட்டத்தை கைவிட முடிவு செய்யப்பட்டது.
தற்போதைய நிலையில் 6 மணி நேரத்திற்கும் மேலாக இடைவெளி இல்லாமல் தொடர்ச்சியாக வேலை செய்வது, அதாவது தொடர்ச்சியாக 8 மணிநேரம் வேலை என்பது கடினமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில் ரயில்வே முன்மொழிந்த ஒற்றைக் குழுவின் மொத்த வேலை நேரம் 7 மணிநேரம் 50 நிமிடங்கள் ஆகும். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 2-3 நிமிடங்கள் கொண்ட 6 ஸ்டாப்புகளை மட்டுமே கொண்டிருப்பதால்,வேலையில்லாத நேரம் என்பது 18 நிமிடங்கள் மட்டுமே. எனவே HOER விதிமுறைகளை மீறும் வகையில் உள்ளது. அது மட்டுமின்றி லோகோ பைலட்டுகள் தொடர்ச்சியாக 8 மணி நேரம்பணி செய்தால் இயற்கை பாதைகளை கூட கழிக்க முடியாது. உணவு உண்ணக்கூட நேரம் இருக்காது. இது அவர்களின் செயல்திறனில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் -
தற்போதைய நிலையில் மூத்த லோகோ பைலட்டுகளும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்ற பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு ஆளாகி உள்ளார்கள். எனவே 7 மணி நேரம் 50 நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து வேலை செய்வது அவர்களின் சோர்வை அதிகரிக்கும். மேலும், உட்கார்ந்த நிலையில் தொடர்ந்து ரயிலை இயக்கினால், முதுகு மற்றும் கழுத்து வலி ஏற்படும் என்று கண்ணையா தலைமையில் ரயில்வே தொழிற்சங்கத்தினர் தெளிவாக கூறினார்கள்.
கூட்டத்திற்கு பிறகு வந்தே பாரத், தேஜாஸ் மற்றும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு ஒரே பணியாளர் பீட் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படாது என்றும், தற்போதுள்ள பணியாளர்களை அனுப்பும் முறை தொடரும் என்றும் தெற்கு ரயில்வே தனது முடிவை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications