ரெடியாகும் 2வது ரிப்போர்ட்! எழிலகத்திற்குள் புகுந்தது ஏன்? பிளானே வேறயாம்! ஆக்சனில் இறங்கிய முதல்வர்
சென்னை: பட்ஜெட்டில் என்னென்ன புதிய அறிவிப்புகள் வரப்போகின்றன என்கிற எதிர்பார்ப்பையும் மீறி, அமைச்சரவை மாற்றம் எப்போது? என்ற கேள்விதான் திமுக அமைச்சர்களிடையே அலையடிக்கிறது.
போக்குவரத்துத்துறையின் துணை ஆணையர் நடராஜனின் அலுவலகம் எழிலகத்தில இருக்கிறது. மினி செக்ரேட்டரியேட் என எழிலகத்தைச் சொல்வது உண்டு.
மூன்று நாட்களுக்கு முன்பு எழிலகத்துக்குள் அதிரடியாக நுழைந்து, நடராஜனின் அலுவலகத்தில் சோதனை நடத்தியது தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை.

சோதனை ஏன்?
மிக முக்கிய ஒரு துறையின் உயரதிகாரி அலுவலகத்திலேயே விஜிலென்ஸ் நுழைகிறது என்றால் விசயம் ரொம்ப சீரியஸ் என அப்போது அரசு அதிகாரிகளிடம் பரபரப்பாக எதிரொலித்தது. நடராஜனின் அலுவலகத்தில் கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்ட பண கட்டுகளை கைப்பற்றியது விஜிலென்ஸ். துறையில் நடக்கும் பதவி உயர்வுகளுக்காகவும் ஃபேன்சி நெம்பர் ஒதுக்கீடுக்காகவும் வசூலிக்கப்பட்ட பணம் என்று நடராஜனே ஒப்புதல் வாக்குமூலம் தந்திருக்கிறார்.

வாக்குமூலம்
இந்த நிலையில், பதவி உயர்வுக்காக லஞ்சம் கொடுத்த துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி நேற்று விசாரித்திருக்கிறார்கள் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள். அந்த விசாரணையில், ஒவ்வொரு போஸ்டிங்கின் தன்மைக்கேற்ப 10 லட்சம் முதல் 25 லட்சம் வரை நடராஜன் வசூலிப்பார். மொத்த தொகையில் யாருக்கு எவ்வளவு என கணக்குப் போட்டு வசூலித்தனர். பதவி உயர்வுக்காக நாங்கள் கொடுத்த பணம், எங்களின் சேமிப்பில் இருந்து கொடுத்தவை '' என்று வாக்குமூலம் தந்துள்ளனர்.

ஃபேன்சி நம்பர்
அதேபோல், கார்களுக்கு ஃபேன்சி நம்பர் கேட்டு அப்ளை செய்துள்ள வி.ஐ.பி.க்களிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டிருக்கிறதாம் லஞ்ச ஒழிப்புத்துறை. இந்த நிலையில், இந்த லஞ்ச விவகாரத்தில் ஆதாரங்கள், வாக்குமூலங்களை திரட்டியிருக்கும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள், தங்களின் ரிப்போர்ட்டை அரசுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இன்னும் சிலரிடத்தில் ஒப்புதல் வாக்கு மூலம் வாங்க வேண்டியது இருப்பதால் அதையும் பெற்று இரண்டாவதாக ஒரு ரிப்போர்ட் தயாரிக்கும் பணியில் தீவிரமாகியிருக்கிறதாம் விஜிலென்ஸ்.

அதிகாரிகள் சொல்வது என்ன?
இதுகுறித்து நம்மிடம் பேசும் அதிகாரிகள், ''அமைச்சரவையை மாற்றியமைக்க திட்டமிடுகிறார் முதல்வர் ஸ்டாலின். அப்படி மாற்றப்பட்டால் சம்மந்தப்பட்ட அமைச்சர், ஸ்டாலினை சந்தித்து நான் என்ன தவறு செய்தேன் என கேள்வி கேட்பார். அப்படி ஒரு கேள்வி தன்னை நோக்கி வருவதை முதல்வர் விரும்ப மாட்டார். அதனால், புதிய முகங்களை அமைச்சரவைக்குள் கொண்டு வர நினைக்கும் முதல்வர், கேபினெட்டில் இருந்து சிலரை கழட்டியாக வேண்டும்.

திரட்டப்படும் ஆதாரம்
அந்த வகையில், ஊழல் குற்றச்சாட்டுகள் அதிகமிருக்கும் அமைச்சர்களுக்கு எதிரான ஆதார புகார்களை விஜிலென்ஸுக்கு அனுப்பி ரெய்டு நடத்த கோட்டையிலிருந்தே "ஓரல் இன்ஸ்ட்ரக்சன்" கொடுக்கப்படுகிறது. அதனடிப்படையிலேயே ரெய்டுகள் நடக்கின்றன. இதன் பிறகு ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான துறைக்கு சம்மந்தப்பட்ட அமைச்சரை நீக்கினால், தன்னை நோக்கி சம்மந்தப்பட்டவர் கேள்வியும் கேட்க முடியாது .

ஊழல் நடவடிக்கை
ஊழல்களுக்கு எதிராக முதல்வர் ஆக்சன் எடுக்கிறார் என்ற பெயரும் மக்கள் மத்தியில் பரவும் ; ஊழல் செய்யத் துடிக்கும் அதிகாரிகளை கட்டுப்படுத்தாமல் விடுவோருக்கு இது எச்சரிக்கையாக இருக்கும் என 3 விசயங்களை யோசித்தே இந்த ரெய்டு நடத்தப்பட்டது'' என்கிறார்கள். அனேகமாக பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்ததும் கேபினெட் மாற்றம் இருக்கலாம் என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தினர்.












Click it and Unblock the Notifications