தேவர் மண்ணில் விஜய்க்கு என்ன சிக்கல்? உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்.. பின்னணி என்ன?
சென்னை: தேவர் ஜெயந்தி என்றாலே, வருடா வருடம் பசும்பொன் கிராமம் அரசியல் தலைவர்களின் வருகையால் களைகட்டும்... முதலமைச்சர்கள் நேரில் சென்று மரியாதை செலுத்துவது பல வருடங்களாகத் தொடரும் வழக்கமாகும்.. அந்தவகையில் இந்த ஆண்டு முதலமைச்சராக இருக்கும் விஜய்யும் பசும்பொன் செல்வார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அவரது பயணத் திட்டத்தில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன. அப்படி விஜய் பசும்பொன் செல்லாமல் இருப்பதற்கு என்ன காரணங்கள் இருக்கலாம்?
எம்ஜிஆர். காலத்திலிருந்தே தமிழக முதலமைச்சர்கள் பசும்பொன் சென்று மரியாதை செலுத்தும் நடைமுறை தொடர்ந்து வருகிறது. இது தென் மாவட்ட அரசியலிலும், தேவர் சமூக மக்களுடனான உறவிலும் இந்த நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பார்க்கப்படுகிறது.

முதலமைச்சர் விஜய்
எனவே முதலமைச்சராக இருக்கும் விஜய்யும் பசும்பொன் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக அங்கு ஹெலிபேட் அமைக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், பிறகு விஜய் பசும்பொன் செல்லாமல், சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தத் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின.
பசும்பொன்னில் ஹெலிபேட் அமைக்கும் பணி குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனின் வருகைக்காக மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் ஆர். நிர்மல்குமார் விளக்கமும் அளித்திருந்தார்.
பாதுகாப்பு சிக்கலா?
விஜய் பசும்பொன் செல்லாததற்கு முதலில் சொல்லப்படும் காரணம் பாதுகாப்பு தொடர்பான நடைமுறை சிக்கல்கள்தான்.
பசும்பொன் என்பது மிகக் குறுகிய இடவசதி கொண்ட கிராமம். தேவர் குருபூஜையின்போது தென் மாவட்டங்கள் மட்டுமல்லாமல், பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்கள் அங்கு வருவார்கள். அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், முக்கியப் பிரமுகர்கள் என பலரது வருகையும் இருக்கும். இதனால் ஏற்கனவே அந்தப் பகுதியில் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வது போலீசுக்கு சவாலான ஒன்றாக இருக்கும்.
அதுமட்டுமல்ல, விஜய் அங்கு சென்றால் அவரை பார்ப்பதற்காக ஏராளமான ரசிகர்களும் பொதுமக்களும் திரள்வார்கள். நடிகராக இருந்த காலத்திலேயே விஜய்யைக் காண மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இப்போது அவர் முதலமைச்சராக இருப்பதால் அந்தக் கூட்டம் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
பாதுகாப்பு சூழல்
அப்படி ஒரு சூழலில், ஏற்கனவே மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் பசும்பொன்னில் முதலமைச்சருக்கான பாதுகாப்பை உறுதி செய்வது மட்டுமல்லாமல், பொதுமக்களுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கும். இதுபோன்ற பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசல் தொடர்பான சிக்கல்களைக் கருத்தில் கொண்டே விஜய்யின் பயணத்தைத் தவிர்த்திருக்கலாம் என்ற ஒரு பார்வை உள்ளது.
மேலும், முதலமைச்சரின் வாகன அணிவகுப்பு, பாதுகாப்புப் படையினரின் ஏற்பாடுகள், பொதுமக்களின் நடமாட்டம் என அனைத்தையும் ஒருங்கிணைக்க வேண்டியிருக்கும். இதுவும் டிராபிக் உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும். பாதுகாப்பு கருதி இப்படியான முடிவை விஜய் எடுத்திரக்கலாம் என்கிறார்கள்.
உளவுத்துறை ரிப்போர்ட்
சமீபத்தில் வெளியான உளவுத்துறை அறிக்கை குறித்த தகவல்களும் இந்த விவாதத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளன. தென் மாவட்டங்களில் தவெக கணிசமான வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், தேவர் குருபூஜையில் முதலமைச்சர் விஜய் பங்கேற்காமல் இருப்பது அப்பகுதி மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தக்கூடும் என்று அந்த அறிக்கையில் சொல்லப்பட்டதாம்.
ஏற்கனவே வேலுநாச்சியாரை கொள்கை தலைவராக அறிவித்தது, தென் மாவட்ட பிரச்சாரங்களின்போது முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்தியது போன்றவை தவெகவுக்கு அப்பகுதியில் ஆதரவைப் பெற்று தந்தது..
அப்படியிருக்கும்போது, பசும்பொன் குருபூஜையில் விஜய் பங்கேற்காவிட்டால் அடுத்த தேர்தலில் தென் மாவட்டங்களில் கட்சியின் வாக்கு வங்கி பாதிக்கப்படலாம் என்றெல்லாம் உளவுத்துறை அறிக்கையில் ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்டதாம். எனினும், இன்றைய தினம் பசும்பொன் வருகை தவிர்க்கப்பட்டுள்ளதால், அரசியல் கணக்கு எப்படி மாற போகிறதென்று தெரியவில்லை.
முக்குலத்தோர் வாக்குகள்
ஏனென்றால் தேவர் ஜெயந்தி என்பது வெறும் நினைவு நாள் நிகழ்வு மட்டுமல்ல. தென் மாவட்ட அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகவும் பார்க்கப்படுகிறது. முக்கியமாக, முக்குலத்தோர் சமூக மக்களின் ஆதரவை பெறுவதற்கு அரசியல் கட்சிகள் இந்த நிகழ்வுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன. தேர்தல் காலங்களில் இந்த சமூகத்தின் வாக்குகள் அரசியல் கட்சிகளின் வெற்றி வாய்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை என்பதால், தலைவர்களின் பசும்பொன் வருகையும் கவனிக்கப்படுகிறது..
அவ்வளவு ஏன்? கடந்த காலத்திலும் முதலமைச்சராக இருந்தபோது எடப்பாடி பழனிசாமி உட்கட்சிப் பூசல் காரணமாக பசும்பொன் செல்லாமல் இருந்தார். இதனால் தென் மாவட்ட மக்களிடம் அவர் மீதான அதிருப்தி அதிகரிக்க இதுவும் ஒரு காரணமாக அமைந்ததை இங்கு நினைவுகூர வேண்டியிருக்கிறது.. அதேபோன்ற அரசியல் சூழல் விஜய்க்கும் ஏற்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
சென்னையில் தேவர் சிலை
முதலமைச்சர் விஜய் நேரில் பசும்பொன் சென்றிருந்தால் அது தென் மாவட்ட மக்களிடம் ஒரு முக்கியமான அரசியல் செய்தியாகப் பார்க்கப்பட்டிருக்கும். அவர் செல்லாமல் சென்னையில் உள்ள தேவர் சிலைக்கு மரியாதை செலுத்துவது, அந்தப் பகுதியில் எத்தகைய அரசியல் எதிர்வினையை ஏற்படுத்தும் என்பதையும் கணக்கிட வேண்டியிருக்கும்.
இங்கு இன்னொரு கணக்கையும் ஆராய வேண்டியிருக்கிறது.. அதேநேரத்தில், தேவர் குருபூஜையில் முதலமைச்சர் பங்கேற்பது தொடர்பான முடிவை அரசியல் ரீதியாகவும் கவனமாக எடுக்க வேண்டியிருக்கும்.
தென் மாவட்டங்களில் தேவர் ஜெயந்திக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தைப் போலவே, இம்மானுவேல் சேகரனார் நினைவு நாளும் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது. எனவே, ஒரு நிகழ்வில் பங்கேற்பது இன்னொரு தரப்பினரிடையே எத்தகைய விமர்சனங்களை ஏற்படுத்தும் என்பதையும் கட்சித் தலைமை பரிசீலித்திருக்கலாம் என்றும் மற்றொரு காரணம் சொல்லப்படுகிறது.
வெடித்த விவாதங்கள்
மொத்தத்தில், விஜய் பசும்பொன் செல்லாததற்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்களின் கூட்ட நெரிசல், பயணத்தை ஒருங்கிணைப்பதில் உள்ள நடைமுறை சிக்கல்கள், அரசியல் ரீதியான கணக்குகள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம் என்று விவாதிக்கப்படுகிறது.
இருந்தாலும், இவற்றில் எது உண்மையான காரணம் என்பது குறித்து உறுதியான விளக்கம் வெளியாகாத நிலையில், முதலமைச்சரின் இந்த முடிவு அரசியல் வட்டாரங்களில் கவனத்தைப் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications
