Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டங்ஸ்டன் சுரங்கம்:தமிழ்நாடு சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தை மதிக்கவில்லையா மத்திய அரசு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: டங்ஸ்டன் சுரங்க ஏல அனுமதி ரத்து தொடர்பான விவகாரம் குறித்த மத்திய சுரங்க அமைச்சகத்தின் அறிக்கையில் தமிழ்நாடு சட்டசபை தீர்மானத்தின் அடிப்படையில் 'ஆலோசிக்கப்பட்டதாக'கூட ஒரு வார்த்தையும் இடம் பெறவில்லை; ஆனால் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அம்பலகாரர்கள் (பாரம்பரிய சமூக தலைவர்கள்) கோரிக்கையை ஏற்று டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து செய்யப்படுவதாக" மத்திய அரசு தெரிவித்துள்ளது. அப்படியானால் தமிழ்நாடு சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மதிக்காமல் மத்திய அரசு அலட்சியம் செய்ததா? என்கிற கேள்வியை அரசியல் பார்வையாளர்கள் எழுப்புகின்றனர்.

மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க ஏலமானது சர்ச்சைக்குரிய வேதாந்தா குழுமத்தின் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இதற்கு எதிராக கடந்த ஆண்டு டிசம்பர் 9-ந் தேதி தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

tungsten mining project arittapatti tungsten mine auction madurai central government

தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்ன?



தமிழ்நாடு அரசின் தீர்மானம்: "மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், நாயக்கர்பட்டி கிராமத்தில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைப்பதற்கான உரிமத்தை இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு வழங்கியுள்ளது. இத்தகைய இன்றியமையாத மற்றும் முக்கியக் கனிமங்களுக்கான உரிமங்களை மாநில அரசுகளின் அனுமதியின்றி, ஒன்றிய அரசு ஏலம் விடக்கூடாது என்று கடந்த 3.10.2023 அன்று, தமிழ்நாடு அரசு வலியுறுத்தியிருந்தும், இந்த எதிர்ப்பைக் கருத்தில் கொள்ளாது, ஒன்றிய அரசு இத்தகைய ஏல நடவடிக்கையை மேற்கொண்டது கண்டிக்கத்தக்கது.

இந்த டங்ஸ்டன் உரிமம் வழங்கப்பட்ட பகுதியானது, குடைவரைக் கோயில்கள், சமணச் சின்னங்கள், தமிழ்ப் பிராமி வட்டெழுத்துக்கள், பஞ்சபாண்டவர் படுகைகள் போன்ற பல வரலாற்றுச் சின்னங்களை உள்ளடக்கியதாகவும், அரியவகை உயிரினங்களின் வாழ்வாதாரமாகவும் இருப்பதைக் கருத்தில் கொண்டு, இப்பகுதி ஒரு பல்லுயிர்ப் பெருக்கத் தலமாக, கடந்த 2022-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய நிலையிலும், அப்பகுதியில் சுரங்க நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான உரிமம் ஒன்றிய அரசால் அளிக்கப்பட்டுள்ளதை, தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டு மக்களும், ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

இப்பகுதியில் வாழும் மக்களின் வாழ்வாதாரம் நிரந்தரமாகப் பாதிக்கப்படும் என்ற அச்ச உணர்வை ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை ஏற்படுத்தியுள்ளதால், அப்பகுதி மக்கள் இதனை எதிர்த்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, இப்பகுதியையும், இப்பகுதியில் வாழும் மக்களையும் பாதுகாக்கும் பொருட்டு, இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு டங்ஸ்டன் கனிமச் சுரங்க ஒப்பந்தம் வழங்கிய ஒன்றிய அரசின் நடவடிக்கையைக் கைவிடுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்தியப் பிரதமர் அவர்களை ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளார்கள்.

இந்தச் சூழ்நிலையில், மதுரை மாவட்டம், மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், நாயக்கர்பட்டி கிராமத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை உடனடியாக இரத்து செய்திடவும், மாநில அரசுகளின் அனுமதியின்றி எந்தச்சுரங்க உரிமத்தையும் வழங்கக் கூடாது என்றும், ஒன்றிய அரசை வலியுறுத்தி இந்தப் பேரவை ஒருமனதாக தீர்மானிக்கிறது.


முதல்வராக இருக்கும் வரை அனுமதிக்கமாட்டேன் - ஸ்டாலின்

இத்தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்றம் கூடி, கூடி கலைந்துகொண்டிருக்கிறதே தவிர, அங்கே தொடர்ந்து அவை நடவடிக்கைகள் நடந்ததாக நமக்கு இதுவரையில் செய்தி வரவில்லை. ஆனால், கிடைத்த நேரத்தைப் பயன்படுத்தி, அதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறோம். நாடாளுமன்றம் கூடுகிறது; ஆனால், அவையை ஒத்திவைக்கிற சூழ்நிலைதான் நிகழ்ந்து கொண்டிருக்கிறதே தவிர, தொடர்ந்து அவை நடக்கவில்லை. இதை எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் பத்திரிகையில் படித்திருப்பார் என்று நினைக்கிறேன். நான் தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராக இருக்கும் வரை நிச்சயமாக டங்ஸ்டன் சுரங்கத்தை அனுமதிக்க மாட்டேன் எனவும் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

அம்பலகாரர்கள் கோரிக்கையை ஏற்று டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து- மத்திய அரசு


இந்த நிலையில் டங்ஸ்டன் ஏல சுரங்க அனுமதியை மத்திய அரசு ரத்து செய்வதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மத்திய சுரங்க அமைச்சகம் நேற்று வெளியிட்டிருந்த அறிக்கையில், மத்திய நிலக்கரி, சுரங்கத்துறை அமைச்சர் திரு ஜி.கிஷன் ரெட்டி அவர்களை, தமிழகத்தின் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அம்பலகாரர்கள் (பாரம்பரிய சமூக தலைவர்கள்) புதுதில்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தனர். நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிம தொகுதியில் அரிட்டாபட்டி பல்லுயிர் பாரம்பரிய தளமும் பல கலாச்சார பாரம்பரிய தளங்களும் உள்ளன என்று அம்பலகாரர்கள் மத்திய அமைச்சரிடம் தெரிவித்தனர்.

சுரங்க அமைச்சகம் 2024 டிசம்பர் 24 தேதியிட்ட ஒரு செய்திக்குறிப்பில், டங்ஸ்டன் தொகுதி ஏல நடைமுறைக்குப் பிறகு, அப்பகுதியில் பல்லுயிர் பாரம்பரிய தளம் உள்ளது என்ற அடிப்படையில் ஏலத்திற்கு எதிராக கருத்துகள் பெறப்பட்டுள்ளன என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 22.01.2025 அன்று நடைபெற்ற சந்திப்பின் போது, நாயக்கர்பட்டி டங்ஸ்டன் தொகுதி ஏலத்தை ரத்து செய்யுமாறு அப்பகுதி அம்பலகாரர்கள் மத்திய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். இந்தக் குழுவினரின் கோரிக்கைகளை பொறுமையாகக் கேட்டறிந்த மத்திய அமைச்சர், பல்லுயிர் பாரம்பரிய பாதுகாப்புக்கு மத்திய அரசு முழு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்தார்.

விரிவான ஆலோசனைகளுக்குப் பிறகு, இப்பகுதியில் பல்லுயிர் பாரம்பரிய தளத்தின் முக்கியத்துவத்தையும், பாரம்பரிய உரிமைகளைப் பாதுகாப்பதில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் மத்திய அரசின் உறுதிப்பாட்டையும் கருத்தில் கொண்டு, நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிம தொகுதியின் ஏலத்தை ரத்து செய்ய சுரங்க அமைச்சகம் முடிவு செய்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழக சட்டசபை தீர்மானத்தை மதிக்கவில்லையா?


அதாவது அப்பகுதி குறிப்பிட்ட சமுதாயத் தலைவர்களின் கோரிக்கையை ஏற்றுதான் மத்திய அரசு, டங்ஸ்டன் சுரங்க அனுமதியை ரத்து செய்ததாக திட்டவட்டமாக தெரிவிக்கிறது மத்திய அரசு. இந்த அறிக்கையில் தமிழ்நாடு அரசின் சட்டசபை தீர்மானம் குறித்து எந்த ஒரு குறிப்பும் இடம் பெறவில்லை. அப்படியானால் தமிழ்நாடு சட்டசபையில் ஒருமனதாக மக்கள் பிரதிநிதிகளால் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசு மதிக்கவே இல்லையா? என்ன சொல்ல வருகிறது மத்திய அரசின் விளக்க அறிக்கை? என்கிற கேள்வியை அரசியல் பார்வையாளர்கள் எழுப்புகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+