அடிதூள்.. ஜெ. பாணியில் இறங்கிய எடப்பாடி.. "பாஜகவிற்கு வெயிட் பண்ண முடியாது".. அவசர முடிவு? ஏன்?
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுமா போட்டியிடாதா என்று இன்னும் உறுதியாக தெரியாத நிலையில், அதிமுக சார்பாக எடப்பாடி பழனிசாமி போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. எடப்பாடி பழனிசாமி தனது நிலைப்பாட்டில் மிகவும் திடமாக இருப்பதாகவே அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தமிழ்நாடு அரசியலில் புயலை கிளப்பி உள்ளது. இன்னும் கோடைகாலம் தொடங்கும் முன்பே தமிழ்நாடு அரசியலில் அக்னி நட்சத்திரம் தொடங்கிவிட்டது.
அந்த வகையில் தற்போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுமா? எடப்பாடி பழனிசாமி என்ன செய்வார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

ஈரோடு கிழக்கு
ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்தவர் ஈவெரா திருமகன். இவர் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் ஆவார். உடல்நிலை மோசமான நிலையில் ஈவெரா திருமகன் கடந்த ஜனவரி 4ம் தேதி மரணம் அடைந்தார். இங்கே திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் மீண்டும் போட்டியிட உள்ளது. காங்கிரஸ் சார்பாக போட்டியிட இங்கே ஈவிகேஎஸ் இளங்கோவன் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். தேசிய காங்கிரஸ் கட்சியின் முடிவு காரணமாகவும், திமுக கொடுத்த சில சர்வே முடிவுகள் காரணமாகவும் ஈவிகேஎஸ் இளங்கோவன் இங்கே களமிறக்கப்பட்டு இருக்கிறார். திமுக - காங்கிரஸ் ரூட் கிளியராகி இங்கே பிரச்சாரங்கள் நடந்து வருகின்றன.

அதிமுக
ஆனால் அதிமுக சைட்தான் குழப்பமாக உள்ளது. இங்கே அதிமுக கூட்டணி சார்பாக தமிழ் மாநில காங்கிரஸின் யுவராஜா போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இங்கே தமிழ் மாநில காங்கிரசுக்கு பதிலாக அதிமுகவே போட்டியிடும் என்ற முடிவை எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ளார். எடப்பாடியின் இந்த முடிவு ஈரோடு கிழக்கு தேர்தலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் ஓ பன்னீர்செல்வம் வேட்பாளரை களமிறக்க முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் என்னுடைய அணி சார்பாக வேட்பாளரை நிறுத்துவேன்.

ஈரோடு கிழக்கு
நாங்கள்தான் உண்மையான அதிமுக. என்னால் சின்னம் முடங்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. சின்னம் முடங்காமல் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். கட்சியில் எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே என் ஆசை. இங்கே வேட்பாளர் யார் என்பதை விரைவில் அறிவிப்போம். இன்னொரு பக்கம் பாஜக இங்கே போட்டியிடுகிறது என்றால் நாங்கள் விலகிக்கொள்வோம், என்றுள்ளார். இதை எளிதாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால் இங்கே அதிமுகவின் எடப்பாடி அணி vs ஓபிஎஸ் அணிக்கு இடையில் மோதல் ஏற்பட்டு உள்ளது. ஒருவேளை இங்கே பாஜக வேட்பாளரை நிறுத்தினால் ஓபிஎஸ் பாஜகவிற்கு சப்போர்ட் செய்வார்.

பாஜக சப்போர்ட்
ஆனால் பாஜக வேட்பாளரை நிறுத்தினால் எடப்பாடி என்ன முடிவை எடுப்பார் என்று புதிராக உள்ளது. பாஜகவை பகைத்துக்கொண்டு அவர்களை எதிர்த்து வேட்பாளரை நிறுத்துவாரா அல்லது ஓபிஎஸ் போல பாஜகவிற்கு ஆதரவு அளிப்பதாக முடிவு எடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. நான் வேட்பளாரை நிறுத்துவேன், பாஜக போட்டியிட்டால் அவர்களுக்கு ஆதரவு தருவேன் என்று ஓபிஎஸ் கூறியதன் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு பெரிய செக் வைத்துள்ளார். இப்போது பாஜகவை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? என்ற நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு எடப்பாடி பழனிசாமி தள்ளப்பட்டு இருக்கிறார்.

கவலை இல்லை
ஆனால் எடப்பாடி பழனிசாமி அதை பற்றி எல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. பாஜக போட்டியிடுகிறதா இல்லையா என்பதை பற்றியெல்லாம் பெரிதாக அவர் அலட்டிக்கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுமா போட்டியிடாதா என்று இன்னும் உறுதியாக தெரியாத நிலையில், அதிமுக சார்பாக எடப்பாடி பழனிசாமி போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. எடப்பாடி பழனிசாமி தனது நிலைப்பாட்டில் மிகவும் திடமாக இருப்பதாகவே அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விருப்பமனு
அதன்படியே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட விருப்பமுள்ளவர்கள் இன்று முதல் விருப்பமனு வழங்கலாம் என்று எடப்பாடி பழனிசாமி கூறி இருக்கிறார். இன்று முதல் வரும் ஜனவரி 26 வரை விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். விண்ணப்பக் கட்டணத் தொகையாக ரூ.15,000 செலுத்தி, விருப்ப மனு விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அவர் குறிப்பிட்டு உள்ளார். இதன் அர்த்தம் பாஜக போட்டியிடுகிறதோ இல்லையோ நாங்கள் போட்டியிட போகிறோம் என்று எடப்பாடி பழனிசாமி சொல்லாமல் சொல்லி இருக்கிறார். இதனால் தேர்தலில் எடப்பாடி டீம் களமிறங்குவதை உறுதி செய்துவிட்டதாகவே தோன்றுகிறது. பொதுவாக ஜெயலலிதாதான் கூட்டணி கட்சிகள் இறங்கி வரவில்லை என்றால், துரிதமாக செயல்பட்டு வேட்பாளரை பட்டியலை வெளியிடுவார். அதேபோல் தற்போது எடப்பாடியும் வேகமாக செயல்பட்டு விருப்பமனு அளிக்க உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications