கையில் சிக்கிய குடுமி! எடப்பாடி அஸ்திவாரத்தையே ஆட்ட போகும் ஓபிஎஸ்? ஜெவின் அதே பழைய பார்முலா! பின்னணி
சென்னை: அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வந்ததும் இன்னும் பல எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் பக்கம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக எம்எல்ஏ ஐயப்பன் நேற்று ஓ பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அதிமுக மாஜி அமைச்சர் ஆர்.பி உதயகுமாருக்கு நெருக்கமான இவர்.. ஓ பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து தனது தொண்டர்களுடன் ஆதரவு தெரிவித்தார்.
இதன் காரணமாக ஓ பன்னீர்செல்வத்திற்கான ஆதரவு மேலும் அதிகரித்து உள்ளது. அதிமுக பொதுக்குழு வழக்கில் ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக தனி நீதிபதி தீர்ப்பு வழங்கியதில் இருந்தே அவருக்கான ஆதரவு அதிகரித்து வருகிறது.
வரும் நாட்களில் மேலும் சில எம்எல்ஏக்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் ஓ பன்னீர்செல்வம் பக்கம் செல்வார்கள் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் ஓ பன்னீர்செல்வம் நேற்று அளித்த பேட்டி முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

ஓ பன்னீர்செல்வம்
ஓ பன்னீர்செல்வம் நேற்று அளித்த பேட்டியில், அதிமுகவில் இணைப்பை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக மாநிலம் முழுவதும் புரட்சி பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். எங்களுடன் இன்னும் பலர் இணைய போகிறார்கள். எங்களுடன் இணைய போவது யார் யார் என்பது பரம ரகசியம், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சசிகலாவையும் டிடிவி தினகரையும் விரைவில் சந்திக்கவுள்ளேன், என்று ஓ பன்னீர்செல்வம் குறிப்பிட்டார். ஓ பன்னீர்செல்வம் பேச்சில் இருந்து 3 விஷயங்கள் தெளிவாகிறது.

சுற்றுப்பயணம்
முதல் விஷயம் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள போகிறார். கடந்த 10 நாட்களாக தேனியில் இருந்தவர் அங்கு பல்வேறு அதிமுக நிர்வாகிகளை தன் பக்கம் வர வைத்தார். ராஜ்ய சபா எம்பி தர்மரும் ஓ பன்னீர்செல்வத்தை பார்த்து வாழ்த்து தெரிவித்தார். இதேபோல் மற்ற மாவட்டங்களுக்கு விரைவில் ஓ பன்னீர்செல்வம் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது சென்னையில் உள்ள அவர்.. சென்னையில் பல்வேறு நிர்வாகிகளை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாவது விஷயம்
இரண்டாவது விஷயம் ஓ பன்னீர்செல்வம் சசிகலா, டிடிவி தினகரனை சந்திக்க போகிறார். இந்த சந்திப்பு எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். பெரும்பாலும் அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வந்ததும் இந்த சந்திப்பு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களை அதிமுக உள்ளே கொண்டு வர ஓ பன்னீர்செல்வம் முயல்வார் என்று கூறப்படுகிறது. வரும் நாட்களில் அதிமுகவில் சுவாரசியமான பல சம்பவங்கள் நடக்கலாம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

மூன்றாவது விஷயம்
மூன்றாவது விஷயம்தான் இதில் முக்கியமே.. அதிமுகவில் இன்னும் சிலர் தன் பக்கம் வருவார்கள் என்று ஓ பன்னீர்செல்வம் கூறி உள்ளார். இது பற்றி அவருக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்ததில்.. ஓ பன்னீர்செல்வம் பொதுக்குழு பற்றி கவலைப்படவில்லை. அவர் சின்னத்தை கைப்பற்ற திட்டமிட்டுள்ளார். ஜெயலலிதாவிற்கு சட்டசபை தேர்தலுக்கு பின் எப்படி இரட்டை இலை சின்னம் வந்ததோ அதேபோல் இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற ஓ பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளார்.

எம்எல்ஏக்கள்
இதற்கு எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை. பொதுக்குழு ஆதரவை விட எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தால் சின்னத்தை முடக்கி கட்சியை முழுக்க தன் பக்கம் கொண்டு வர முடியும். இதற்காகவே எம்எல்ஏக்களை தன் பக்கம் கொண்டு வர ஓ பன்னீர்செல்வம் முயன்றுள்ளார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். இப்போதைக்கு பொதுக்குழு உறுப்பினர்கள் பற்றி கவலைப்பட வேண்டியது இல்லை. எம்எல்ஏக்கள் வந்தால் பொதுக்குழு உறுப்பினர்கள் தங்கள் பக்கம் வருவார்கள் என்று ஓபிஎஸ் நம்பிக்கையாக இருக்கிறாராம்.

சின்னத்தை முடக்கலாம்
எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுத்தால் சின்னத்தை முடக்கலாம். அதோடு எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்தே எடப்பாடியை தூக்க முடியும். அவரின் அஸ்திவாரத்தையே அசைத்து பார்க்க முடியும். இதன் காரணமாகவே முடிந்த அளவு எம்எல்ஏக்களை தன் பக்கம் கொண்டு வர ஓ பன்னீர்செல்வம் காய் நகர்த்தி வருகிறாராம். ஐயப்பன்தான் முதல் எம்எல்ஏ.. அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வந்ததும் இன்னும் பல எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் பக்கம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications