தாமரையில் நில்லுங்க.. ஆர்டர் போட்ட பாஜக.. மறுத்த ஓபிஎஸ்.. மனதை மாற்றிக்கொண்ட ரவீந்திரநாத்? போச்சே
சென்னை: லோக்சபா தேர்தலில் தாமரை சின்னத்தில் போட்டியிடும்படி ஓ.பன்னீர் செல்வம் அணியிடம் பாஜக கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கு ஓ பன்னீர்செல்வம் ஏற்றுக்கொள்ளவில்லை.. ஆனால் ஓ பி ரவீந்திரநாத் இதை ஏற்றுக்கொண்டதாக அரசியல் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது அதிமுக சின்னத்தில் வென்று எம்பியாக உள்ள ஓ பி ரவீந்திரநாத் போட்டியிடுவரா? போட்டியிட்டால் எந்த சின்னத்தில் களமிறங்குவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இரட்டை இலை சின்னத்தில் தேர்தலை சந்திப்போம் என்று ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து கூறி வந்தார். அந்த சின்னத்தில் போட்டியிடுவோம் என்று அவர் தொடர்ந்து உறுதியாக பேசி வந்தார். ஆனால் தொடர்ந்து கூறி வந்தாலும், சின்னம் கிடைக்காத நிலை இருப்பதால் தாமரை சின்னத்தில் போட்டியிட பாஜக வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இரட்டை இலை கிடைக்க வாய்ப்பு குறைவு, தாமரையில் போட்டியிடுங்கள்.. நீங்கள் புது சின்னத்தில் போட்டியிட்டால் வெற்றிபெற வாய்ப்பே இல்லை.. அதை பிரபலப்படுத்த வேண்டும்.. எனவே தாமரையில் நில்லுங்கள் என்று பாஜக கூறியதாக தெரிகிறது. ஆனால் தாமரையில் போட்டியிட்டால் ஓ பன்னீர்செல்வம் பாஜக பக்கம் சென்றுவிட்டதாக மாறும். அதிமுகவிற்கு உரிமை கோருவதில் அர்த்தம் இல்லாமல் போகும்.
இதனால் லோக்சபா தேர்தலில் ஓ.பன்னீர் செல்வம் அணி போட்டியிடவில்லை என்று தகவல்கள் வருகின்றன. அதே சமயம் நான் தாமரையில் நிற்கிறேன். நின்றால் அமைச்சர் பதவி கூட கிடைக்கும். எனக்கு தாமரையில் நிற்பதில் சிக்கல் இல்லை என்ற முடிவை ஓ பி ரவீந்திரநாத் எடுத்துள்ளாராம். ஆனால் இதை ஓபிஎஸ் ஏற்றுக்கொள்ளவில்லையாம்.
கூட்டணி: முன்னதாக பாஜக கூட்டணியில் அமமுக-விற்கு 4 தொகுதிகளும், ஓபிஎஸ் அணிக்கு 4 தொகுதிகளும் ஒதுக்க பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.
சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பாஜக நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் நேற்று நள்ளிரவு பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தனியார் ஹோட்டலில் பாஜக தலைவர்கள் ஓபிஎஸ் அணியுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த கூட்டணி பேச்சுவார்த்தையில் ஓ பன்னீர்செல்வத்திற்கு 4 இடங்களை கொடுக்க பாஜக ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. .
இன்னொரு பக்கம் ஏற்கனவே அமமுக - பாஜக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது. இதில் அமமுகவிற்கும் 4 இடங்கள் கொடுப்பது தொடர்பாக ஆலோசனைகள் நடந்ததாக கூறப்படுகிறது. அதன்படி அமமுக-விற்கு 4 தொகுதிகளும், ஓபிஎஸ் அணிக்கு 4 தொகுதிகளும் ஒதுக்க பாஜக முடிவு செய்துள்ளது. ஆனால் சின்னம்தான் இப்போது பிரச்சனையாகி உள்ளது. இதனால் இந்த முடிவில் என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஓ பன்னீர்செல்வம் முன்னுரிமை: முன்னதாக 6 இடங்களை அவர் கேட்ட நிலையில் 4 இடங்களை கொடுக்க பாஜக ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. பாஜக கூட்டணிக்கு வர எடப்பாடி பழனிசாமி இதற்கு இறங்கி வராத காரணத்தால் தற்போது ஓ பன்னீர்செல்வம் பக்கம் பாஜக திரும்ப தொடங்கி உள்ளதாம். எடப்பாடி இறங்கி வராத காரணத்தால் ஓ பன்னீர்செல்வத்தை வைத்து அதிமுகவிற்கு பிரஷர் கொடுக்க டெல்லி முடிவு செய்துள்ளதாம்.
இப்படிப்பட்ட நிலையில்தான் சின்னம் பிரச்சனை காரணமாக லோக்சபா தேர்தலில் ஓ.பன்னீர் செல்வம் அணி போட்டியில்லை என்று தகவல்கள் வருகின்றன. பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. விரைவில் மோடி - ஓபிஎஸ் மீட்டிங் நடக்கும் என்றும் கூறுகின்றனர் பாஜகவினர்.












Click it and Unblock the Notifications