தமிழ்நாட்டின் இதயம் ஜிஎஸ்டி சாலை.. சென்னை - திருச்சி 8 வழிச்சாலை ஏன் இன்னும் கனவாகவே இருக்கிறது?
சென்னை: தமிழகத்தின் இதயம் போன்றது சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை. வடக்கையும் தெற்கையும் இணைக்கும் இந்தச் சாலை வெறும் சாலை அல்ல; பல லட்சம் மக்களின் வாழ்வாதாரம், கனவுகளை சுமந்து செல்லும் இடம் ஆகும். ஆனால், இன்று இந்தப் பயணம் பலருக்கு பெரிய சிக்கலாக மாறி வருவதுதான் வேதனையான உண்மை. அதிலும் செங்கல்பட்டு முதல் உளுந்தூர்பேட்டை வரை விபத்தில் சிக்காமல் தப்பித்தாலே பெரிய விஷயம் என்பதாக இருக்கிறது.
25 வருடங்களுக்கு முன்பே தேவை கருதி சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டது. அப்போது அந்த சாலை மக்களால் கொண்டாடப்படட்து. ஆனால் இன்று வாகனங்களின் பெருக்கத்தால் மூச்சுத்திணறிக்கொண்டிருக்கிறது. புள்ளிவிவரங்களின்படி, இந்தச் சாலையில் நாளொன்றுக்கு அனுமதிக்கப்பட்ட அளவை விட மூன்று மடங்கு அதிகமான வாகனங்கள் பயணிக்கின்றன. பண்டிகை காலங்கள் மற்றும் வார இறுதிகளில் செங்கல்பட்டு, திண்டிவனம் மற்றும் விழுப்புரம் பகுதிகளில் வாகனங்கள் எறும்புகளைப் போல ஊர்ந்து செல்வதைப் பார்க்கும்போது, "இது நெடுஞ்சாலையா அல்லது நெரிசல் சாலையா?" என்ற கேள்வி எழுகிறது.

சாலை பாதுகாப்பு ஆய்வுகளின்படி, தமிழகத்தில் நடக்கும் விபத்துகளில் கணிசமானவை சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையான இந்த ஜிஎஸ்டி சாலையிலேயே பதிவாகின்றன.
இடவசதி பற்றாக்குறை
சென்னை திருச்சி 4 வழிச்சாலையில் ஒரு வாகனம் பழுதாகி நின்றால் கூட, பின்னால் வரும் வாகனங்கள் மோதும் அபாயம் அதிகமாக இருக்கிறது. 8 வழிச்சாலையாக இருந்திருந்தால், அவசரத் தேவைகளுக்கென தனிப்பாதை அதாவது சர்வீஸ் சாலை இருந்திருக்கும். இப்போது தாம்பரம் செங்கல்பட்டு இடையே மட்டும் கூடுவாஞ்சேரி தவிர மற்ற ஊர்களில் உள்ளது, ஆனால் செங்கல்பட்டு கடந்தால் கிடையாது.
ஐந்து மணி நேர பயணம் என்பது கனவு
தற்போது சாலை போதவில்லை என்பதால், முந்திச் செல்ல முயலும் போதுதான் 70% விபத்துகள் ஏற்படுகின்றன. அடிக்கடி பேருந்துகள் சாலை தடுப்பு சுவர் ஏறி, மறு சாலையில் சென்று விபத்தில் சிக்கி வருகின்றன. சென்னை திருச்சி இடையே வெறும் 5 மணிநேரத்தில் முடிய வேண்டிய பயணம் இன்று 8 முதல் 10 மணிநேரம் வரை இழுக்கடிக்கப்படுகிறது. இதனால் ஏற்படும் ஓட்டுநர்கள் சோர்ந்து போகிறார்கள். இதுவே விபத்துகளுக்கு முக்கியக் காரணமாகிறது.
ஏன் 8 வழிச்சாலை இப்போதே அவசியம்?
சென்னைதிருச்சி சாலையை 8 வழிச்சாலையாக மாற்றுவது என்பது வெறும் ஆடம்பரமல்ல, அது காலத்தின் கட்டாயம் ஆகும். இங்கு முறையான தடுப்புச் சுவர்கள் மற்றும் அகலமான பாதைகள் இருந்தால், ஆண்டுக்கு ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்ற முடியும். சரக்கு வாகனங்கள் விரைவாகச் சென்றால் எரிபொருள் மிச்சமாகும், பொருட்களின் விலையும் கணிசமாக குறையும்.
எதிர்காலத் தேவை
அடுத்த 10 ஆண்டுகளில் வாகனங்களின் எண்ணிக்கை இன்னும் இருமடங்காகிவிடும். ஏனெனில் எல்லாரும் படிப்பு முடிந்த உடன் உடனே வேலைக்காக வரும் இடமாக சென்னை இருக்கிறது. அப்போதும் நாம் 4 வழியில் பயணிப்பது என்பது தற்கொலைக்குச் சமமானதாகவே இருக்கும்.
விக்கிரவாண்டி உளுந்தூர்பேட்டை
அதேபோல் இன்னொரு முக்கியான விஷயத்தையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்..சென்னை - திருச்சி நெடுஞ்சாலையிலேயே மிகவும் அபாயகரமான பகுதி என்றால் அது விக்கிரவாண்டி - உளுந்தூர்பேட்டை வரை உள்ள அந்த 70 கிலோமீட்டர் தூரத்தைத்தான். இப்பகுதி ஏன் விபத்துகளின் கூடாரமாக இருக்கிறது
'பிளாக் ஸ்பாட்கள்'
சென்னை அல்லது செங்கல்பட்டிலிருந்து அதிவேகமாக வரும் வாகனங்கள், விக்கிரவாண்டி சுங்கச்சாவடியைத் தாண்டியதும் சாலையின் தரம் மற்றும் நெரிசலால் தடுமாறுகின்றன. திடீரென குறுக்கிடும் வாகனங்களால் ஓட்டுநர்கள் நிலைதடுமாறுவது நடக்கிறது. தேசிய நெடுஞ்சாலைத் துறையின் ஆய்வின்படி, விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் இந்தச் சாலையில் 15-க்கும் மேற்பட்ட 'பிளாக் ஸ்பாட்கள்' (அடிக்கடி விபத்து நடக்கும் இடங்கள்) உள்ளன. குறிப்பாக சாலை சந்திப்புகள், சரியான வெளிச்சம் இல்லாத பகுதிகள் உயிர்களைப் பலி வாங்குவது நடக்கிறது.
வேகத்தை குறைக்க முடியாது
விக்கிரவாண்டி, முண்டியம்பாக்கம், விழுப்புரம் மற்றும் உளுந்தூர்பேட்டை பகுதிகளில் நெடுஞ்சாலையின் குறுக்கே உள்ளூர் வாகனங்களும், விவசாய வாகனங்களும் அடிக்கடி வருவதால், மணிக்கு 80-100 கி.மீ வேகத்தில் வரும் வாகனங்களால் உடனடியாக வேகத்தைக் குறைக்க முடியாமல் போகிறது.
விபத்து புள்ளி விவரங்கள்
எனவே புள்ளி விவரங்களின்படி, தமிழகத்தின் மொத்த விபத்து மரணங்களில் விழுப்புரம் மாவட்டம் எப்போதும் முதல் 5 இடங்களுக்குள் இருப்பதற்கு விக்கிரவாண்டி மற்றும் உளுந்தூர் பேட்டை இடையே உள்ள 70 கி.மீ சாலையே முக்கியக் காரணம் ஆகும். அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரையிலும், இரவு நேரங்களிலும் தான் இங்கு 60% விபத்துகள் நடக்கின்றன. இந்த பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 5,000 முதல் 7,000 கார்கள் இந்தச் சாலையைக் கடப்பதாக கூறப்படுகிறது.
விக்கிரவாண்டி உளுந்தூர்பேட்டை
விக்கிரவாண்டி மற்றும் உளுந்தூர்பேட்டை போன்ற முக்கிய ஊர்களில் உள்ளூர் போக்குவரத்துக்கும், நெடுஞ்சாலைப் போக்குவரத்துக்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லாதவாறு அடுக்கு மேம்பாலங்கள் அமைக்கப்பட வேண்டும். 8 வழிச்சாலையில் இது ஒரு அங்கமாக இருந்தால் மட்டுமே விபத்துக்களை கணிசமாக குறைக்க முடியும். கனரக வாகனங்கள் இடதுபுறம் செல்லவும், கார் போன்ற அதிவேக வாகனங்கள் வலதுபுறம் செல்லவும் என 8 வழிச்சாலையில் பாதைகள் பிரிக்கப்படும்போது, 'முந்திச் செல்லுதல்' குறையும். இதுவே 90% விபத்துகளைத் தவிர்க்கும்.
செங்கல்பட்டு தாம்பரம் சாலை
ஆனால் துரதிஷ்ட்வசமாக இன்னும் திட்டமிடுதல் நிலையில் தான் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை இருக்கிறது. தமிழக அரசு இதற்கு அழுத்தம் தந்து சாலைகளை முடிக்காவிட்டால் பெரிய சிக்கல் ஏற்படும். அதேபோல் தாம்பரம் முதல் செங்கல்பட்டு இடையே உயர்மட்டமேம்பால சாலை உடனடியாக அமைக்காமல் போனால் சென்னையின் பேருந்து நிலையம் கிளாம்பாக்கத்திற்கு பதில் செங்கல்பட்டில் போய் வைக்க வேண்டிய நிலை வந்துவிடும். அரசு தான் அழுத்தம் தந்து எல்லாவற்றையும் மாற்ற வேண்டும்.












Click it and Unblock the Notifications