ஏன் நாங்க மட்டும் ஓட்டு போடலையா? அதென்ன பெண்களுக்கு மட்டும்.. ஏதாச்சும் கொடுங்கப்பா.. ஆண்கள் அலறல்!
சென்னை: பெண்களுக்கு மட்டும் அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம் என சலுகைகளை வாரி வழங்கி வரும் நிலையில் தங்களுக்கு ஏதாவது மிஞ்சுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குறைந்தபட்சம் டாஸ்மாக்கிலாவது சலுகை கொடுத்தால் நன்றாக இருக்குமே என சில ஆண் வாக்காளர்கள் கருதுகிறார்கள்.
மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ஒரு உதவித் தொகை வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியாக அளித்தார். இதற்கு பெண்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.
இதையடுத்து திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த பொதுக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்கு ஒரு சூப்பரான திட்டத்தை அறிவித்தார்.

மாதந்தோறும்
திமுக ஆட்சிக்கு வந்தால் அடுத்த 10 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரேஷன் பொருட்கள் வாங்கும் அனைத்து இல்லத்தரசிகளுக்கும் மாதந்தோறும் ரூ 1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவித்தார். அதிலும் உதவித் தொகை என அழைக்காமல் அதை உரிமைத் தொகை என அழைத்து பெண்களுக்கு மகிழ்ச்சியோடு கவுரவத்தையும் கொடுத்தார்.

பெண்கள்
இதையடுத்து அதிமுகவும் போட்டி போட்டுக் கொண்டு மாதந்தோறும் பெண்களுக்கு ரூ 1500 உதவித் தொகை என அறிவித்துள்ளது. அது போல் ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. கமல்ஹாசனோ எங்கள் கட்சி சார்பில் பெண்களுக்கு மாதந்தோறும் 4000 உதவித் தொகை வழங்குவதாக அறிவிக்கவிருந்தோம் என கூறி லட்சக்கணக்கான ஏழை பெண்களின் வாழ்வில் ஒளியேற்றும் திட்டத்தை அறிவிக்கவிருந்ததாக தெரிவித்துள்ளார்.

அதிருப்தி
இப்படியாக போட்டிப் போட்டுக் கொண்டு பெண்களுக்கு உதவித்தொகை, உரிமைத் தொகை என அறிவித்துள்ளதால் ஆண் வாக்காளர்கள் கடும் "அதிருப்தி" அடைந்துள்ளார்கள். அதென்ன பெண்கள் மட்டும்தான் வாக்களிக்கிறார்களா? நாங்கள் வாக்களிக்கவில்லையா?

சலுகை
அவர்களை வாக்களிக்க அழைத்து வருவதே நாங்கள்தான். எங்களுக்கு ஒரு சலுகையும் இல்லையா? வாக்களிக்கும் நாள் அன்று நாங்கள் வேலையை முடித்துக் கொண்டு வீட்டுக்குச் செல்வோம். அங்கு ரெடியாக உள்ள பெண்களை (தாய், மனைவி, மகள், பாட்டி, அக்காள், தங்கை, பக்கத்து வீட்டு அக்காள்) என அழைத்துக் கொண்டு வாக்குச் சாவடிக்கு செல்வோம்.

தனி வரிசை
அங்கு நீண்ட வரிசையில் காத்திருப்போம். இவர்களுக்கு தனி வரிசை என்பதால் சீக்கிரம் முடித்துவிட்டு உட்கார்ந்திருப்பார்கள். நாங்கள் ஓட்டு போட்டு முடித்து விட்டு அழைத்து வந்தவர்களை வீட்டில் விட்டுவிட்டு பின்னர் எங்கள் வேலையை நாங்கள் தொடர வேண்டிய நிலை உள்ளது. இவ்வாறிருக்கையில் எங்களுக்கு ஏதும் சலுகை வழங்காதது ஏன்.

பெட்ரோல் டீசல்
குறைந்தபட்சம் டாஸ்மாக்கில் ஒன்னு வாங்கினா ஒன்னு இலவசம், மெயின் டிஷ் வாங்கினால் சைட் டிஷ் இலவசம், பெட்ரோல் டீசல் விலையில் சலுகை, செல்போன் விலையாவது சலுகை, சிகரெட், பீடி விலையில் சலுகை, ரேஷன் கடையிலாவது ஆண்களுக்கென தனி வரிசை வைக்கப்படுமா, வேலைவாய்ப்பில் ஏதாவது சலுகை- இப்படியாக உள்ளது சில ஆண் வாக்காளர்களின் எதிர்பார்ப்பு.












Click it and Unblock the Notifications