தேவர் ஜெயந்தி விழா.. எடப்பாடி பழனிசாமி பசும்பொன் செல்லாதது ஏன்? ஜெயக்குமார் விளக்கம்!
சென்னை: ராமநாதபுரத்தில் நடைபெறும் பசும்பொன் முத்துராமலிங்கம் ஜெயந்தி விழாவில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்காதது ஏன் என்று கேள்விக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பசும்பொன் முத்துராமலிங்கம் பிறந்தநாளன்று சென்னை நந்தனத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படவுள்ளது. அதற்காக உரிய அனுமதியும், பாதுகாப்பும் அளிக்க வேண்டும் என்று காவல்துறையினரிடம் கோரிக்கை அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி ஏன் பசும்பொன் செல்லவில்லை என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, அது கட்சியின் நிலைப்பாடு. முத்துராமலிங்கத்திற்கு புகழ்மாலை அணிவிக்கும் வகையில் சென்னை நந்தனத்தில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்துகிறோம். கடந்த காலத்திலும் இதுபோன்ற நிலை ஏற்பட்டுள்ளது. சில நேரம் பசும்பொன்னிற்கு நேரடியாக சென்று மரியாதை செலுத்துவோம். அதில் உள்நோக்கம் கற்பிக்கக் கூடாது என்று தெரிவித்தார்.

முதல்வர் மவுனம் காப்பது ஏன்?
தொடர்ந்து கோவை கார் வெடிப்பு சம்பவம் குறித்த கேள்விக்கு, கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாய் திறக்காமல் இருக்கிறார். இதுவொரு கண்டனத்திற்குரிய விஷயம். தற்கொலை தாக்குதலை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏற்கனவே கோவையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் 58 பேர் உயிரிழந்தனர். இதனால் 4 நாட்களுக்கு மேலாக மவுனம் காப்பது கண்டனத்திற்குரியது என்று தெரிவித்தார்.

75 கிலோ வெடி மருந்து
பின்னர் காவல்துறை தரப்பில் உரிய விளக்கம் அளிக்கப்படாதது குறித்த கேள்விக்கு, காவல்துறை தரப்பில் 75 கிலோ வெடிமருந்து கைப்பற்றியதாக கூறப்பட்டுள்ளது. இதனால் இந்த வழக்கை என்ஐஏ மற்றும் தமிழக காவல்துறை விசாரிக்க உள்ளது. அதனால் எந்தக் கருத்தும் தெரிவிக்க முடியாது. ஆனால் நாட்டை உலுக்கும் விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மவுனம் காப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

ஓபிஎஸ், சசிகலா
தொடர்ந்து ஜெ.தீபா ஆடியோ விவகாரம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, ஆறுமுகசாமி விசாரணை அறிக்கை தொடர்பாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் போதுமான விளக்கத்தை அளித்துவிட்டார். ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான அனைத்து விவகாரத்திற்கும் ஓபிஎஸ் மற்றும் சசிகலா ஆகியோர் மட்டுமே பொறுப்பு. ஏனென்றால் ஓபிஎஸ்-க்கு அப்போது முதலமைச்சரின் அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட்டன. இவர்கள் இருவரும் குற்றம் செய்தவர்கள் என்றுதான் விசாரணை அறிக்கையின் முடிவு இருக்கிறது. விசாரணை அறிக்கையின் கடைசியில் இடம்பெற்ற திருக்குறளை பார்த்து, நாடே கண்ணீர் சிந்தக் கூடிய நிலைதான் இருக்கிறது என்று தெரிவித்தார்.

மழைநீர் வடிகால் பணிகள்
தொடர்ந்து மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த பத்திரிகையாளர் பற்றி கேள்விக்கு, பத்திரிகையாளர் முத்துகிருஷ்ணன் உயிரிழந்ததற்கு வழங்கப்பட்ட இழப்பீடு போதுமானதல்ல. மழைநீர் வடிகால் பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகள், இன்று மரண குழிகளாக மாறிவிட்டன. எந்தவித எச்சரிக்கை பலகைகளையும் வைக்காமல், பணிகள் செய்வதால் மக்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இளம் பத்திரிகையாளர் உயிரிழப்புக்கு காரணமான ஒப்பந்தத்தாரரில் இருந்து அனைவர் மீதும் கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.












Click it and Unblock the Notifications