எங்க சிஎம் சாரை காணோம்! நாடே கொந்தளிக்குது.. அமைதியோ அமைதி மனநிலையில் விஜய்!
சென்னை: டெல்லி நீட் எதிர்ப்பு போராட்டத்தில் மாணவர்கள் மீது தடியடி, ராகுல் காந்தி கைது செய்யப்பட்டது என இந்தியாவே பரபரப்பாகி இருக்கும் சூழலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதல்வருமான விஜய் இதுவரை இதுகுறித்து கருத்தோ, கண்டனமோ தெரிவிக்கவில்லை. இளம் தலைமுறையின் ஏக நாயகன் என்பது போல விஜய் குறித்து தவெகவினர் கூறிவரும் நிலையில், அவர் இளைஞர்கள் பிரச்சினையில் கருத்தே தெரிவிக்காமல் இருப்பது கவனிக்கத்தக்க விஷயமாக மாறியுள்ளது.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தைத் தொடர்ந்து மறு தேர்வு நடத்தப்பட்ட நிலையில் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நீட் அச்சம் மற்றும் நீட் தோல்வி காரணமாக ஏராளமான மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

நீட் போராட்டம்
இந்த நிலையில் நீட் முறைகேடு மற்றும் குழப்பங்களுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜூன் 20ஆம் தேதி முதல் போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டத்தில் சமூக ஆர்வலரான சோனம் வாங்சுங் கலந்து கொண்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
சோனம் வாங்சுங்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி இருக்கும் நிலையில் நாடாளுமன்றன் நோக்கி பேரணி செல்ல போராட்ட குழுவினர் திட்டமிட்டிருந்தனர். இதை அடுத்து சோனம் வாங்சுங் வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் 20ஆம் தேதி திட்டமிட்டபடி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நாடாளுமன்ற நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர்.
போலீஸ் தடியடி
இதில் இந்தியா முழுவதும் இருந்து ஏராளமான மாணவ மாணவிகள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர். இவர்களை தடுக்க பல இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டும் அவற்றையெல்லாம் முறியடித்து நாடாளுமன்ற நோக்கி சென்றனர். இதனால் தடியடி கண்ணீர் புகை கொண்டு வீச்சு நடத்தப்பட்டது. இதில் ஏராளமான மாணவர்கள் காயமடைந்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ராகுல் காந்தி
இதற்கிடையே காங்கிரஸ் கட்சியும் மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்தது. இதற்கிடையே மாணவர்களின் போராட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி தாக்கப்பட்டு கைது வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டார். இதனையடுத்து ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்திருக்கிறது.
முதலமைச்சர் விஜய்
இவ்வளவு கலவரங்களுக்கு மத்தியில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அமைதி காப்பது பல்வேறு விமர்சனங்களை எழுப்பி உள்ளது. நீட் தேர்வு விவகாரத்தில் எதிர்ப்பு மனநிலை என்பதைவிட, நீட் தேர்வே கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம் என தமிழக வெற்றி கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிடப்பட்டது. தொடர்ந்து ராகுல் காந்தி கைது கண்டித்தும் அதே பக்கத்தில் கண்டன பதிவு வெளியிடப்பட்டது.
தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!
— TVK Party HQ (@TVKPartyHQ) July 21, 2026
டெல்லியில் நடைபெற்ற இளைஞர்களின் அறவழிப் போராட்டத்துக்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் டெல்லி காவல்துறையால் இழுத்துச்செல்லப்பட்டும் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்றும்…
ஆதவ் அர்ஜுனா
அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும் தன் பங்குக்கு போராட்டத்திற்கு ஆதரவாகவும் நீட் தேர்வுக்கு எதிராகவும் எக்ஸ் பக்கத்தில் கண்டன அறிக்கையை பதிவிட்டு இருந்தார்.ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் இதுவரை அறிக்கையோ எதிர்ப்பையோ பதிவு செய்யவில்லை. டிவிகே விஜய் என தனி அரசியல் எக்ஸ் கணக்கை அவர் வைத்திருக்கும் நிலையில் இது தொடர்பாக எந்தவித கண்டன பதிவையும் பதிவு செய்யவில்லை. அது மட்டும் அல்லாமல் அவரது கையெழுத்துடன் அறிக்கையும் வெளியாகவில்லை. கட்சி கருத்து தெரிவித்து விட்டதே என்று விஜய் அமைதியாக இருக்கிறாரா என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.
நீட் தேர்வுக் குளறுபடிகளை மட்டும் எதிர்க்கவில்லை. நீட் தேர்வு என்பது அறவே கூடாது என்பதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு. ஓட்டுக்காக நீட்டை நாங்களே நீக்குவோம் என்று மக்களை ஏமாற்றும் மோசடி அரசியல் வேலையில் தவெக ஒருபோதும் ஈடுபடாது.
— TVK Party HQ (@TVKPartyHQ) July 21, 2026
கல்வியை மாநிலப்…
விஜய் அமைதி
தமிழகத்திலும் பல்வேறு பகுதிகளில் போராட்டம் வெடித்திருக்கும் நிலையில் முதல்வராகவும் கட்சித் தலைவராகவும் விஜய் என்ன நிலைபாட்டில் இருக்கிறார் என தெரியவில்லை. ஏற்கனவே முக்கிய விவகாரங்களுக்கு விஜய் குரல் கொடுப்பதில்லை என்ற விமர்சனம் முன்வைக்கப்படும் நிலையில், தற்போது நாடே கொந்தளிப்பில் இருக்கும் நிலையில் விஜய் அமைதியாக இருப்பது ஏற்கத்தக்கதல்ல என பலரும் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக மாணவப் பருவத்தினர், இளைஞர்கள் ஆதரவுதான் விஜய் ஆட்சியை பிடிக்க காரணம் என தவெக நம்பி வரும் நிலையில், அவர்களை பாதிக்கும் பிரச்சினைக்கு கூட விஜய் ஏன் கருத்து கூறவில்லை என்ற கேள்விகள் எழுகின்றன.
தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!
— Aadhav Arjuna (@AadhavArjuna) July 21, 2026
'நீட் தேர்வு' என்ற தகுதித் தேர்வு மருத்துவ மாணவர்களுக்கு கொண்டுவரப்படும் என்ற அறிவிப்பு வந்தபோதே, அதற்கான முதல் எதிர்ப்புக் குரல் தமிழகத்தில் இருந்துதான் ஒலித்தது; தொடர்ந்து தமிழகத்தில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.…
காங்கிரஸ் அதிருப்தி
மேலும் ராகுல் காந்தியின் கைதுக்கும் கட்சி சார்பில் தான் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், விஜய் தனிப்பட்ட முறையில் கண்டனத்தை பதிவு செய்யவில்லை என்பதால் காங்கிரஸ் கட்சியினரும் அதிர்ச்சியில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications
