ஏப்ரலில் "கச்சேரி".. அண்ணாமலை வாட்ச் பில்லை "லேட்டாக" தர காரணம் இருக்காமே.. சீக்ரெட்டை சொன்ன தலை!
சென்னை: ரபேல் வாட்ச் பில்லை பாஜக தலைவர் அண்ணாமலை ஏப்ரல் மாதம் வெளியிட காரணம் உள்ளது என்று பாஜகவின் துணை தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். ஒன்இந்தியா தமிழுக்கு இது தொடர்பாக சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.
பாஜக தலைவர் அண்ணாமலையின் ரபேல் வாட்ச் தமிழ்நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நான் விவசாய குடும்பத்தில் பிறந்தவன் என்று பல மேடைகளில் குறிப்பிடும் அண்ணாமலை 4.40 லட்சம் ரூபாய் மதிப்பு கொண்ட ரபேல் எடிஷன் பெல் அண்ட் ராஸ் வாட்சை வாங்கியது எப்படி என்ற கேள்வியை ஆளும் திமுக தரப்பு எழுப்பி உள்ளது.
இந்த வாட்ச் வாங்கிய பில் எங்கே என்று திமுகவினர் அண்ணாமலைக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். அண்ணாமலையோ பில்லை ஏப்ரல் மாதம் கொடுக்கிறேன் என்று கூறி உள்ளார்.
இது தொடர்பாக அண்ணாமலை அளித்த விளக்கத்தில், இந்தியாவிடம் சீனா வாலாட்ட நினைக்கிறது. இதற்கு காரணம் ரபேல் விமானங்கள், ரபேல் விமானங்கள் வந்த பின் நம்முடைய போர் வியூகங்கள் மாறி உள்ளன.
விளக்கம் நான் கட்டி இருக்கும் வாட்ச் ரபேல் விமான பாகங்களை வைத்து செய்தது. ரபேல் விமான பாகங்களை வைத்து 500 வாட்சுகளை செய்தார்கள். இது சிறப்புப் பதிப்பு. இதன் பில்லை ஏப்ரல் மாதம் வெளியிடுவேன், என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
இது தொடர்பாக துணை தலைவர் நாராயணன் திருப்பதி ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டி பின்வருமாறு..

பாஜக தனித்து போட்டி
கேள்வி: தமிழ்நாட்டில் பாஜக தனித்து போட்டியிட்டால் ஒரு இடத்தில் கூட வெல்லாது என்று திமுகவினர் சொல்கிறார்களே?
பதில்: ஈயத்தை பார்த்து இளித்ததாம் பித்தளை என்று சொன்னார்கள். அதைத்தான் ஸ்டாலின் இப்போது சொல்லி இருக்கிறார். தமிழ்நாட்டில் தனியாக போட்டியிட தைரியம் இல்லாத, திராணி இல்லாத ஒரு கட்சி, பயப்பட கூடிய ஒரு கட்சி என்றால் அது திமுகதான். எந்த ஒரு தேர்தலிலும் அவர்கள் தனித்து போட்டியிட்டது இல்லை. 1967ல் ராஜாஜியின் ஆதரவு தொடங்கி, காங்கிரஸ் ஆதரவு, கம்யூனிஸ்ட் ஆதரவு, ரஜினியின் வாய்ஸ், மூப்பனார் ஆதரவு, பின்னர் மைனாரிட்டி ஆட்சி என்றுதான் திமுக ஆட்சி செய்து வந்துள்ளது. இப்போதும் அவர்கள் கூட்டணி ஆட்சிதான் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

பாஜக கூட்டணி
அப்போ பாஜகவை பற்றி அவர்கள் பேசலாமா? பாஜக 2021, 2001 தேர்தல் தவிர மற்ற எல்லா தேர்தல்களிலும் தனித்துதான் போட்டியிட்டு இருக்கிறது. அப்போ யாருக்கு தைரியம் அதிகம். அப்போ உங்களால் கூட்டணி இன்றி தேர்தலில் போட்டியிட முடியாது. 2014 நாடளுமன்ற தேர்தலில் இவர்கள் எத்தனை சீட் வென்றனர். இவர்களுக்கு எங்களை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது. என்ன அருகதை இருக்கிறது இவர்களுக்கு பேச.
கேள்வி: பாஜக கூட்டணி வைத்தால்தான் 2021 தேர்தலில் 4 இடங்களாவது வென்றது என்று திமுக விமர்சனம் வைத்து உள்ளதே?
பதில்: 2014 ல் நாங்கள் 2 இடங்களில் அதிமுக கூட்டணி இல்லாமலே வென்றோமோ. முதலில் திமுக அவர்கள் கண்ணாடியில் முகத்தை பார்க்கட்டும். தைரியம் இருந்தால் திமுக தனித்து நிற்க முடியுமா? திராணி இருந்தால் சொல்லட்டும். திமுகவால் முடியாது. ஏனென்றால் திமுகவிற்கு எதிராகத்தான் மக்கள் இருக்கிறார்கள்.

சிவி சண்முகம்
கேள்வி: சமீபத்தில் சி வி சண்முகம் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், திமுக - பாஜக காட்சிகள் கூட்டணி வைக்க போகின்றன. இவர்கள் கருப்பு துண்டு. அவர்கள் காவி துண்டு. ஆனா ரெண்டுமே ஒன்னு தான். திமுக - பாஜக கூட்டணி வைக்க போகிறார்கள், என்று குறிப்பிட்டு இருக்கிறாரே?
பதில்: அதை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை. சமீபத்தில் அதிமுக கூட்டத்தில் எடப்பாடி பேசுகையில், பாஜக பற்றி பேச கூடாது, பாஜக பற்றி தவறாகவோ, கூட்டணி பற்றி தவறாகவோ பேச கூடாது என்று சொல்லி இருக்கிறாரே. அதனால் அதை பற்றி நாங்களும் பேச விரும்பவில்லை. அந்த பிரச்சனை அதோடு முடிந்துவிட்டது.

பிளான் என்ன
கேள்வி: பாஜக வருங்காலங்களில் தனியாக போட்டியிட வாய்ப்பு உள்ளதா?
பதில்: கண்டிப்பாக. நாங்கள் வலுவாக இருக்கிறோம். கூட்டணி என்பது தேர்தல் காலத்தில் முடிவு செய்யப்படுவதுதான்., நாங்கள் 25 இடங்களில் வெல்ல இருக்கிறோம். அதற்காக பணிகளை செய்து இருக்கிறோம். எங்களின் குறி அதுதான். அதைத்தான் எங்கள் தலைவர் அண்ணாமலை சொல்லி வருகிறார். 2026 ஆட்சியை பிடிப்பதுதான் எங்களின் நோக்கம். ஒரு கட்சி என்று இருந்தாலே ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றுதான் நினைக்க வேண்டும். கம்யூனிஸ்ட், காங்கிரஸ், விசிக போல ஒரு இரண்டு இடங்களை வாங்கிக்கொண்டு போட்டியிட நாங்கள் தயாராக இல்லை. அதற்கு பெயர் அரசியல் இல்லை. வியாபாரம். அதை செய்ய நாங்கள் வரவில்லை. நாங்கள் தனித்து நின்றாலும் வெற்றிபெறுவோம்.

ரபேல் வாட்ச்
கேள்வி: அண்ணாமலை தனது ரபேல் வாட்சின் பில்லை ஏப்ரல் மாதம் தருவதாக சொல்கிறாரே.. ஏன் இப்போதே தரவில்லை என்று திமுகவினர் கேட்கிறார்களே?
பதில்: அண்ணாமலை வாட்ச் பற்றி கேட்க இவர்களுக்கு தகுதிகள், உரிமைகள் இல்லை. அண்ணாமலை நேர்மையான ஐபிஎஸ் அதிகாரி. அண்ணாமலை இவர்களின் முகத்திரையை கிழிப்பார். இவர்கள் சொல்லும் கட்டுக்கதைக்கு எல்லாம் அண்ணாமலை பதிலடி கொடுப்பார். ஏப்ரலில் பதிலடி தரும் போது நீங்கள் பார்ப்பீர்கள். அண்ணாமலை இதை லேட்டாக வெளியிட காரணம் இருக்கிறது. அண்ணாமலைக்கு எதிராக அவதூறு பரப்பும் நபர்களுக்கும் இது தெரியும், என்று பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications