விஜய் பட்டு வேஷ்டி கட்டினா ஸ்டாலினுக்கு என்ன பிரச்சனை? திமுக சறுக்குவது இங்கேதான்.. யார்னு பாருங்க
சென்னை: திமுகவிற்கு எந்தவொரு பெரிய கட்சியோ கூட்டணியோ ஆதரவாக இல்லை, முற்றிலும் தனித்தே களம் காண்கிறார்கள்... தொண்டர்கள் சோர்ந்து போய்விடக் கூடாது என்பதற்காகவே தலைவர்கள் மேடைகளில் இப்படித் தீவிரமாகப் பேசுகிறார்கள். ஆனால் திமுக தொடர்ந்து விஜய் மீது தனிமனிதத் தாக்குதல்களில் ஈடுபட்டால், அது மக்கள் மத்தியில் விஜய்க்கும் தவெகவுக்கும்தான் மேலும் அனுதாபத்தையும் பலத்தையும் சேர்க்கும்" என்று மூத்த பத்திரிகையாளர் மணி கருத்து தெரிவித்துள்ளார்.
பிரபல சேனல் ஒன்றிற்கு பேட்டி தந்துள்ள மணி, "முப்பெரும் விழாவில் ஸ்டாலின் பேசியது சோர்வடைந்திருக்கும் திமுக தொண்டர்களுக்கு உற்சாகமளிக்கும் வகையில் நன்றாகத்தான் இருந்தது. எதிர்க்கட்சித் தலைவர் என்பது சட்டமன்றத்திற்குள் மட்டும் உரியது அல்ல, அதற்கு வெளியிலும் இருப்பதுதான்.

கொளத்தூர் ஸ்டாலின்
கொளத்தூரில் தோற்றிருந்தாலும், எம்எல்ஏ-வாக இல்லாவிட்டாலும், சட்டமன்றத்திற்குப் போகவில்லை என்றாலும் தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தான்.. கடந்த 1991-96 காலகட்டத்தில் கருணாநிதி ராஜினாமா செய்தபோதும் அவரே எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்பட்டார்..
எதிர்க்கட்சியாக நின்று சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு, மின்வெட்டு, காவிரி பிரச்சனை, தொழில் முதலீடுகள் இல்லாமை போன்ற அரசு சார்ந்த உண்மையான மக்கள் பிரச்சனைகளைப் பற்றி ஸ்டாலின் பேசுவது வரவேற்கத்தக்கது. அதுதான் உண்மையான எதிர்க்கட்சியின் கடமையாகும்.
விஜய் ஜோசியம் பார்க்கிறாரா
இப்படி முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் தற்போதைய அரசின் குறைகளை மட்டும் சுட்டிக்காட்டிப் பேசினால் அது அவருக்கும் அவருடைய கட்சிக்கும் நல்லது... அதைவிட்டுவிட்டு தனிமனிதத் தாக்குதலில் ஈடுபட்டால் ஸ்டாலினின் நன்மதிப்பு சீர்குலையும்.
அதைவிட்டுவிட்டு விஜய் ஜோசியம் பார்க்கிறாரா, பட்டு வேட்டி கட்டுகிறாரா, நெற்றியில் என்ன கலர் பொட்டு வைக்கிறார் என்றெல்லாம் ஸ்டாலின் விமர்சிப்பது திமுக மேலும் சரிவைச் சந்திக்கவே வழிவகுக்கும். விஜய் ஜோசியம் பார்த்தார் என்பதற்கு ஸ்டாலினிடம் என்ன ஆதாரம் இருக்கிறது? ஆதாரம் இல்லாமல் பேசுவது அவதூறாகும்.
எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரை அன்றைக்கு தனிப்பட்ட முறையில் தாக்கியது போல, இன்றைக்கு விஜயை திமுக தாக்கும் வேலையில் ஈடுபட்டால், அது மக்கள் மத்தியில் விஜய்க்குத் தான் மேலும் வலுசேர்க்கும். தனிமனித தாக்குதல் என்பது அவர்களின் டிஎன்ஏவிலேயே உள்ளது.
பூமராங் - திமுக
ஆனால், விஜய் பட்டு வேட்டி கட்டுவது, ஜோசியம் பார்ப்பது போன்ற தனிமனிதத் தாக்குதல்களில் இறங்கினால் அது திமுகவிற்குத் தான் சரிவை ஏற்படுத்தும். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா விஷயத்தில் திமுக செய்த அதே தவறைத்தான் இப்போது விஜய்யிடமும் செய்கிறது. விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தோ அல்லது அவரின் வழக்கங்கள் குறித்தோ எதிர்த்துப் பேசினால், அது பூமராங் போல திமுகவிற்கே எதிராகும்.
ஸ்டாலின் தனது பேச்சில் "கொளத்தூர் மக்கள் என்னை சட்டமன்றத்திற்கு அனுப்பாமல் இந்த அவலங்களை பார்க்க விடாமல் செய்ததற்கு நன்றி" எனக் கூறியிருந்தார். 10 நாட்களுக்கு முன்பு நீதிமன்றத்திற்கு சென்று EVM முறைகேடு நடந்துவிட்டது, நான்தான் ஜெயிச்சேன் என வழக்கு தொடர்ந்தவர், இப்போது இப்படிப் பேசுவது ஒரு தலைவருக்கான தடுமாற்றத்தைக் காட்டுகிறது.
ஸ்டாலினுக்கு ஏன் இந்த தடுமாற்றம்?
கருணாநிதி இருந்திருந்தால் தோல்வியை உடனே ஏற்றுக்கொண்டிருப்பார் அல்லது சுப்ரீம் கோர்ட் வரை சென்றிருப்பார். நீதிமன்ற படிகளில் ஏறத்தொடங்கிய பின் பாதியிலேயே பின்வாங்கியது ஏன்? மிகப்பெரிய தலைவரான ஸ்டாலினுக்கு ஏன் இந்த தடுமாற்றம்?
இப்போது "மக்களுக்கு நன்றி" என்று ஸ்டாலின் சொல்வதன் மூலம், கள்ள ஓட்டோ அல்லது வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடோ நடக்கவில்லை, மக்கள் தீர்ப்பால்தான் தான் தோற்றோம் என்பதை முதன்முறையாகப் பொதுவெளியில் ஒப்புக்கொள்கிறார். இதன்மூலம் திமுக தொண்டர்கள் இத்தனை நாட்களாகப் பரப்பி வந்த "வாக்குப்பதிவு எந்திர முறைகேட்டால்தான் ஸ்டாலின் தோற்றார்" என்ற பொய் முறியடிக்கப்பட்டுவிட்டது.
முப்பெரும் விழா முத்தாய்ப்பு செய்தி
திமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அரசியல் எப்போதும் கருணாநிதியைச் சுற்றியே சுழன்றது. ஆனால் இன்றைக்கு அந்த இடத்தை ஸ்டாலின் மெல்ல மெல்ல நழுவவிட்டுக்கொண்டிருக்கிறாரோ என்று அஞ்சுகிறேன். மேலும், விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி திமுகவின் 2ம் கட்டத் தலைவர்களும், ஆர்.எஸ். பாரதி போன்றவர்களும் மிகவும் ஆபாசமாகவும் அவதூறாகவும் பேசி வருகிறார்கள்.
ஸ்டாலின் மட்டுமே இன்னும் ஓரளவு கண்ணியத்துடன் பேசுகிறார். இருந்தாலும் வாக்களிக்காத மக்களுக்கு நன்றி என்று கூறி தனது தோல்வியை ஒப்புக்கொண்டதே இந்த முப்பெரும் விழாவின் முக்கிய முத்தாய்ப்பான செய்தியாகும்
திமுகவிற்கு எந்தவொரு பெரிய கட்சியோ கூட்டணியோ ஆதரவாக இல்லை, முற்றிலும் தனித்தே களம் காண்கிறார்கள். தொண்டர்கள் சோர்ந்து போய்விடக் கூடாது என்பதற்காகவே தலைவர்கள் மேடைகளில் இப்படித் தீவிரமாகப் பேசுகிறார்கள். ஆனால் திமுக தொடர்ந்து விஜய் மீது தனிமனிதத் தாக்குதல்களில் ஈடுபட்டால், அது மக்கள் மத்தியில் விஜய்க்கும் தவெகவுக்கும்தான் மேலும் அனுதாபத்தையும் பலத்தையும் சேர்க்கும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
