கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்த மத்திய அரசு திட்டம்.. வரப்போகிறது புதிய வரி?
சென்னை: அண்மையில் அமெரிக்கா - ஈரான் இடையே ஏற்பட்ட போர் காரணமாக எரிபொருள் விநியோக சங்கிலியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. பிரச்சனை இன்னமும் முழுமையாக சரியாகவில்லை. எரிபொருள்கள் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்ட ஹார்முஸ் ஜலசந்தியில் பிரச்சனை இன்றும் நீடிக்கிறது. எனவே மத்திய அரசு மாற்று நாடுகளில் எரிபொருள் வாங்குகிறது. எனினும் எதிர்காலத்தில் பிரச்சனையை சமாளிக்கும் வண்ணம், எரிபொருள் இருப்பு மையங்களை உருவாக்க விரும்புகிறது. அதற்காக கேஸ் சிலிண்டர் விலையை ரூ.18 உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அமெரிக்கா - ஈரான் போர் காரணமாக எரிபொருள் விநியோக சங்கிலியில் ஏற்பட்ட பாதிப்புகள் மோசமானவை.. இந்தியாவின் பல வீடுகளில் சிலிண்டர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள். 45 நாட்களுக்கு பின்னரே சிலிண்டர் கிடைக்கும் என்கிற நிலை உள்ளதால், பல வீடுகளில் நிலைமை சிக்கலாகவே உள்ளது. பழையபடி 25 நாட்கள் அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை சிலிண்டர் முன்பதிவு செய்ய எப்போது மத்திய அரசு அனுமதியளிக்கும் என்பது தெரியவில்லை.. எதிர்காலத்தில் இதேபோன்று சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டால் பாதிப்புமோசமாகவே இருக்கும் என்பதால், மாற்று ஏற்பாடுகளை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக இந்தியாவின் எரிபொருள் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு புதிய திட்டத்தை அறிவித்திருக்கிறது.

இதற்காக சுமார் ரூ.4 லட்சம் கோடியில் எரிபொருள் இருப்பு மையங்களை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு தேவையான நிதியை திரட்டுவதற்காக, சமையல் கேஸ் மற்றும் இயற்கை எரிவாயு நுகர்வோர் மீது புதிய வரி விதிக்க மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
அதன்படி கச்சா எண்ணெய் மட்டுமின்றி, திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (எல்.என்.ஜி.) மற்றும் சமையல் கேஸ் (எல்.பி.ஜி.) ஆகியவற்றையும் இருப்பு வைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக அடுத்த 10 ஆண்டுகளில் 90 லட்சம் டன் எல்.என்.ஜி. மற்றும் 40 லட்சம் டன் எல்.பி.ஜி. சேமிப்புக்கான கட்டமைப்புகளை உருவாக்க அரசு திட்டமிட்டிருக்கிறது.
இந்த வசதிகளுடன் கூடுதலாக 2.8 கோடி டன் கச்சா எண்ணெய் சேமிப்பு திறனும் தேவைப்படும் என்று அரசு நம்புகிறது.. இந்த உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஆண்டுக்கு சுமார் ரூ.9 ஆயிரத்து 500 கோடி நிதி தேவைப்படும் என்று மத்திய அரசு கணக்கிட்டுள்ளது. இதற்கு தேவையான நிதியை திரட்டுவதற்காக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் புதிய வரி விதிப்பு முறையை பரிசீலித்து வருகிறதாம். இதன்படி, ஒரு கிலோ எல்.பி.ஜி.க்கு ரூ.1.29 வரி விதிக்க மத்திய அரசு முடிவெடுத்திருப்பதாக தேசிய ஊடகங்கள் கூறுகின்றன.
இதன்மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.4 ஆயிரத்து 377 கோடி வருவாய் கிடைக்கும் என்றும் இந்த வரி விதிப்பால் வீட்டு உபயோக சமையல் கேஸ் சிலிண்டரின் விலை சுமார் ரூ.18 வரை உயரும் என்று சொல்கிறார்கள்.. இதேபோல், ஒரு கன மீட்டர் இயற்கை எரிவாயுவுக்கு ரூ.1.43 வரி விதிக்கவும் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.9 ஆயிரத்து 500 கோடி வருவாய் கிடைக்கும். இந்த வரி வசூல் முறை குறித்து இன்னமும் அதிகாரப்பூர்வ முடிவுகள் எடுக்கப்படவில்லை என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன
இந்த வரி மூலம் கிடைக்கும் வருவாய், இயற்கை எரிவாயு மற்றும் சமையல் கேஸ் சேமிப்பு உட்கட்டமைப்புகளை உருவாக்க பயன்படுத்தப்படும் என்றும், அதே நரம் கச்சா எண்ணெய் இருப்பு மற்றும் பிற எரிபொருள் இருப்புக்கான செலவுகளை மத்திய அரசே ஏற்க வாய்ப்பு உள்ளதாகவும் சொல்கிறார்கள்.எனினும் கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்தும் இந்த திட்டம் இன்னும் மத்திய அமைச்சரவையின் இறுதி ஒப்புதலை பெறவில்லை. முக்கியமான அமைச்சகங்களுக்கு இடையே இதுகுறித்து விவாதிக்கப்பட்டு வருகிறதாம்.
மத்திய அரசின் இந்த புதிய திட்டப்படி வரி விதிப்பு நடைமுறைக்கு வந்தால், பொதுமக்களின் எரிவாயு கட்டணம் சுமார் 2 சதவீதம் வரை உயருமா என்றும் எரிபொருள் விலை ஏற்கனவே உயர்ந்துள்ள நிலையில், இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு எழவும் வாய்ப்பு உள்ளது. ஆனால் மத்திய அரசு திடீரென ஏற்படும் பற்றாக்குறையை சமாளிக்க இந்த நீண்டகாலத் திட்டம் அவசியமானது என்று மத்திய அரசு கருதுகிறது.


Click it and Unblock the Notifications
